செலவே இல்லாமல், சிக்கனமாக எடையை குறைக்க, இதே ஒரு நல்ல யோசனை. தண்ணீர் அதிகம் குடிப்பதன் மூலமும் எடையை குறைக்கலாம். காலை எழுந்து பல் துலக்கியவுடன் டீ, காபிக்கு பதில் ஒரு தம்ளர் சுடுதண்ணீர் அருந்தவும். காலை உணவுக்கு முன் குறைந்தது, அரை லிட்டர் சாதாரண தண்ணீர் குடிக்கவேண்டும்.
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் மீண்டும்
குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீரும், மதிய உணவுக்கும் மாலை சிற்றுண்டிக்கும் இடையே அரை லிட்டர் தண்ணீரும் குடிப்பது அவசியம். மறுபடியும் இரவு உணவுக்கு முன் ஒரு லிட்டரும், இரவு உணவுக்குப் பின் அரை லிட்டரும் நீர் அருந்த வேண்டும்.
முடிந்த வரை, சற்றுச் சூடான நீரையே அருந்துங்கள். அது ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு, கொழுப்பை கரைக்க உதவுகிறது. இந்தத் தண்ணீர் மருத்துவத்தின் மூலம் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.
உணவில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்வது அவசியம். ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அரை மூடி எலுமிச்சை பிழிந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை இப்பானம் கரைக்கிறது. காபி, டீக்கு பதில் கருப்புக்காபி, கருப்புத் தேனீர் அருந்தலாம்.
அடுத்து, ஒரே தானியத்தை நாள் முழுவதும் சாப்பிடாமல், அரிசி அல்லது கோதுமை மட்டும் என்றில்லாமல் விதவிதமான தானியங்களைப் பயன்படுத்தலாம். காலையில், கோதுமை ரொட்டி, மதியம், அரிசி சோறு, இரவு, பழங்கள் அல்லது ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம்.
கூடியவரை, எல்லா வேளைகளிலும் பச்சைக்காய்கறிகள், பழங்களை உட்கொள்வது நல்லது. கிழங்கு வகைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. சிற்றுண்டி அல்லது சிறு தீனி தின்னும் ஆவல் எழும்பொழுது, அரிசிப்பொரி, நறுக்கிய பழங்கள், சாலட், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் சாப்பிடலாம்.
இனிப்புகளைச் சிறிதளவு சாப்பிடலாம்.
பழங்களையும், மதிய உணவில் பச்சைக்காய் கறிகளையும் காரட், வெள்ளரி, முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம், தக்காளி அதிக அளவில் உட்கொள்ளவும். இரவு ஏதேனும் ஒரு பழமும், பாலும் மட்டும் சாப்பிடலாம். அல்லது, ஓட்ஸ் கஞ்சி, கேழ்வரகு ரொட்டி (1 அல்லது 2) எடுத்துக் கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், மென்று தின்னக் கூடிய உணவுகளையும் நிறையச் சாப்பிடலாம். மேலும், காற்று ஏற்றப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்த்து எலுமிச்சை சாறு, பழரசங்கள் (அதிக சர்க்கரை இல்லாமல்) இளநீர் போன்றவற்றைப் பருகவும்.
எக்காரணம் கொண்டும் பட்டினி கிடக்கவேண்டாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்குப் பதிலாக, சிறு சிறு அளவாக ஐந்து, ஆறு முறை சாப்பிடலாம். இரவு உணவைப் படுக்கைக்குச் செல்லுவதற்குக் குறைந்தது இரண்டு மணி நேரம் முன்னதாக முடித்துக் கொள்ளுதல் நலம். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.