25.1 C
Chennai
Tuesday, Dec 17, 2024
2
ஆரோக்கிய உணவு

30 வகை ரெடி டு ஈட்

காலை முதல் இரவு வரை பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத பொழுதுகளே நமக்கு வாய்க்கின்றன. என்னதான் அவசரம் என்றாலும், குடும் பத்தினருக்கு சத்தாகவும் சுவை யாகவும் சமைத்துப் பரிமாற நாம் தயங்குவதே இல்லை. அந்த வகையில் பெண்கள் மட்டுமல்ல…

ஆண்களும், பெரிய குழந்தைகளும்கூட எளிதாகத் தயாரிக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்கியிருக் கிறார் ஓசூரைச் சேர்ந்த சமை யல்கலை நிபுணர் சாந்தி. தொக்கு, குழம்பு, பொடி, சூப் என வேதிக் கலப்பில்லாத இன்ஸ்டன்ட் உணவுகளைச் சுவைத்து மகிழுங்கள்!

2

மணத்தக்காளிக் கீரைத் தொக்கு

தேவையானவை: மணத் தக்காளிக் கீரை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – 10 பல், புளி – சிறிய எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் – 5, வெல்லம் – சிறிய துண்டு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கீரை, புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கி இறக்கவும். இது சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு நல்ல சைடு டிஷ். வயிற்றுப்புண்ணுக்கும் நிவாரணம் தரும்.

3
உடனடி வற்றல் குழம்பு

தேவையானவை: சின்ன வெங்காயம் – 20, புளி – எலுமிச்சை அளவு, பூண்டு – 15 பல், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெந்தயப்பொடி – அரை டீஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, வெல்லம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வடகம் – சிறிதளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

வறுத்துப் பொடிக்க: கடலைப் பருப்பு, உளுந்து, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன் (அனைத்தையும் வெறும் சட்டியில் வறுத்துப் பொடிக்கவும்).

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து வடகம் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, வெங்காயம், பூண்டு சேர்த்துச் சுருள வதக்கி, அத்துடன் சாம்பார்ப் பொடி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு வறுத்த பொடி, வெந்தயப்பொடி, வெல்லம் சேர்த்து நன்றாகக் கொதித்து சுருண்டு வந்ததும் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். சூடான சாதத்தில் இந்தக் குழம்பு சேர்த்துச் சாப்பிட, சுவை அள்ளும்.

4
பிரசவ மருந்துத் தொக்கு

தேவையானவை: மிளகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை, தனியா, ஓமம் (இவற்றை வெறுமனே வறுத்து அரைத்து வைக்கவும்) – தலா ஒரு டீஸ்பூன், சிறு எலுமிச்சை அளவு புளியை நெருப்பில் சுட்டு (அ) தணலில் வாட்டி வெந்நீரில் கரைத்து வைக்கவும், பூண்டு – 15 பல், கடுகு – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, வெந்தயம், பெருங்காயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த பொருட்களைச் சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரிந்ததும் எடுத்து ஸ்டாக் செய்துகொள்ளலாம். இந்தத் தொக்கு ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைப்படும்போது சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இது பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

5
சின்ன வெங்காயத் தொக்கு

தேவையானவை: சின்ன வெங்காயம் உரித்தது – 20, காய்ந்த மிளகாய் – 10, தக்காளி பழுத்தது – 3, கடலைப்பருப்பு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு சிட்டிகை, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – தலா ஒரு கைப்பிடி, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடலைப் பருப்பு, உளுந்து, சீரகம், சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புளி சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சிறிது கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து சுருள வதக்கவும். இது இட்லி, தோசை என அனைத்துச் சிற்றுண்டிகளுக்கும் ஏற்ற சைடு டிஷ்.

6
திப்பிலித் தொக்கு

தேவையானவை: கண்டந்திப்பிலி – 5,6 குச்சி, அரிசித் திப்பிலி – 5, 6 குச்சி, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 2, மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சாம்பார்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், புளிக்கரைசல் – அரை கப், வெல்லம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

செய்முறை: இருவகை திப்பிலிகளை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி பிழிந்துவிட்டு, உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும், திப்பிலிப் பொடி, மிளகு சீரகத்தூள் சேர்த்து, மறு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்ததும் இறக்கி வைக்கவும். அடிக்கடி சளி பிடிப்பவர்கள் வாரம் இருமுறை இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

7
மருந்துத் தொக்கு

தேவையானவை: சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மல்லித்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டி.

அரைக்க: ஃப்ரெஷ் ஆன வெற்றிலை – 2, கற்பூரவல்லி இலை- 2, எலுமிச்சை இலை -2, துளசி – ஒரு கைப்பிடி, சித்தரத்தை இலை (அ) பொடி – ஒரு டீஸ்பூன்(அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்).

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கி, சுக்குப்பொடி, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து, இறுதியாக எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். இதை சூடான சாதத்தில் பிசைந்தும், இட்லிக்குத் தொட்டும் சாப்பிட சுவை அள்ளும். ஒரு வாரம் முதல் 10 நாள் வரை கெடாது. காய்ச்சலுக்கு நல்ல மருந்து.

8
புளி இஞ்சித் தொக்கு

தேவையானவை: புளி – பெரிய எலுமிச்சம் பழம் அளவு, இஞ்சி துருவியது – 50 கிராம், வெல்லம் – 100 கிராம், பச்சை மிளகாய் கீறியது – 5, 6, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து இஞ்சித் துருவலை வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, பிறகு பச்சை மிளகாய் சேர்த்துப் பிரட்டி, புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதித்து நல்ல வாசனை வந்ததும் வெல்லம் சேர்த்து, இறுகி கெட்டிப் பதம் வரும்போது இறக்கவும்.

இது கேரள மக்களின் பாரம்பர்யத் தொக்கு. அனைத்து உணவுகளுக்கும் சூப்பர் தொடுகை.

9
கற்பூரவல்லித் தொக்கு

தேவையானவை: கற்பூரவல்லி இலை – 20 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), புளிக்கரைசல் – கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி – தலா ஒரு டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை: வாணலியில் நல்லெண் ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த கற்பூரவல்லி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். வற்றியதும் இறக்கி வைக்கவும். இதை பிரெட், சப்பாத்தி, தோசையில் தடவி ரோல் செய்து கொடுக்க, பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அடிக்கடி சளி், தலைபாரம், சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள், வாரம் இருமுறை இதைச் சாப்பிட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.

10
நெல்லிக்காய்த் தொக்கு

தேவையானவை: முழு நெல்லிக்காய் – 10, கீறிய பச்சை மிளகாய் – 10, புளி – கோலிகுண்டு அளவு, நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு டீஸ்பூன், கடுகு, உளுந்து – தாளிக்க, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து, நெல்லிக்காய்த் துண்டுகள், பச்சை மிளகாய், புளி, இஞ்சி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, இறுதியில் உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி இறக்கவும். 15 நாள் வரை இந்தத் தொக்கு கெடாது. விட்டமின் சி நிறைந்த இந்தத் தொக்கை, முடி உதிர்தல், ரத்தச்சோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் தினமும் சாப்பிடலாம்.

11

தக்காளி இனிப்புப் பச்சடி

தேவையானவை: பழுத்த தக்காளி – 5, சிவப்பு பேடகி (காஷ்மீரி சில்லி) மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், சர்க்கரை (அ) வெல்லம் – கால் கப், புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, வெந்தயப்பொடி – கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு, சீரகம், நல்லெண்ணெய்.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து, வெல்லம், உப்பு, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்தயப்பொடி சேர்த்து, நன்றாகக் கொதித்து, கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி, ஆறியதும் ஸ்டோர் செய்யலாம். இது அனைத்து டிபன்களுக்கும் ஏற்ற சைடு டிஷ். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். 10 நாட்கள் வரை கெடாது.

12

புரோட்டின் பொடி

தேவையானவை: துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு கப், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கொள்ளு – கால் கப், மிளகு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, பெருங்காயம் – கால் டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் அனைத்துப் பருப்பு வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து வைக்கவும். அதே வாணலியில் மற்ற அனைத்துப் பொருட்களையும் வறுத்து எடுக்கவும். இறுதியாக அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, கல் உப்பு சேர்த்து பொடித்து வைக்கவும். புரோட்டின் பொடி ரெடி. இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம். சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும். புரதச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் நல்ல உணவு இது.

15
முருங்கை இலைப் பொடி

தேவையானவை: ஆய்ந்து, நிழலில் உலர்த்திய முருங்கை இலை – ஒரு கப், உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், எள் – 2 டீஸ்பூன், பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 8, புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயப் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: முருங்கை இலைகளை வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பு, எள், பூண்டு, காய்ந்த மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். புளியைச் சுட்டு வைக்கவும். பிறகு அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த முருங்கை இலைப் பொடியை கர்ப்பிணிகள் தினமும் சாப்பிடலாம். பாலூட்டும் தாய்மார்கள் இதை ஒரு டீஸ்பூன் மோரில் கரைத்துச் சாப்பிடலாம். இரும்புச்சத்து பற்றாக்குறை உள்ளவர்களும் தினமும் காலை சாப்பிடலாம்.

14
அரைத்து விட்ட சாம்பார்ப் பொடி

தேவையானவை: தனியா (கொத்தமல்லி விதை) – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 2 கைப்பிடி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா கால் கப், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – 2 கைப்பிடி, புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு.

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் வெறும் சட்டியில் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். வேகவைத்த பருப்புடன் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துத் தாளித்துக் கொதிவிட்டு இறக்கினால் மணக்கும் சாம்பார் ரெடி. இட்லி, தோசை, பொங்கல் என அனைத்துக்கும் சூப்பர் ஜோடி. விரும்பினால் கொப்பரையும் சேர்த்துப் பொடிக்கலாம்.

16
கறிவேப்பிலைப் பொடி

தேவையானவை: கறிவேப்பிலை – 5 கைப்பிடி, கறுப்பு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், புளி – ஒரு கொட்டைப்பாக்கு அளவு (விரும்பினால்), கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சுத்தம் செய்த கறிவேப்பிலை மற்றும் மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (விரும்பினால் புளியை நெருப்பில் இட்டு, அதையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்). இந்தப் பொடியை தினசரி பொரியலில் தூவி இறக்கலாம். கூந்தல் உதிரும் பிரச்னை உள்ளவர்கள், தலைசுற்றல், பித்தம் உள்ளவர்கள் இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்க, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

17
அங்காயப் பொடி

தேவையானவை: மணத்தக்காளி வற்றல் – கால் கப், சுண்டக்காய் வற்றல் – கால் கப், உலர்ந்த வேப்பம்பூ – ஒரு கைப்பிடி, தனியா – கால் கப், உலர்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, சுக்கு – ஒரு சிறிய துண்டு, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உளுந்து அல்லது துவரம் பருப்பு – கால் கப், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக்கி, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பாரம்பர்ய பொடி மாதக்கணக்கில் கெடாது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் நெய் (அ) நல்லெண்ணெயுடன் பிரட்டிச் சாப்பிடலாம். வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி போன்ற பிரச்னைகளுக்கு ஏற்ற மருந்து இது. பாலூட்டும் தாய்மார்களுக்கும், மூலம் பிரச்னை உள்ளவர்களுக்கும் கைகண்ட மருந்து.

18
பொட்டுக்கடலை பூண்டுப் பொடி

தேவையானவை: பொட்டுக் கடலை – ஒரு கப், பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், கடலைப் பருப்பு (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் பூண்டு (தோலுடன்) மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி, மேலே குறிப்பிட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும். இந்தப் பொடி, வாயு, அஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும். நீர்த்துப்போன குழம்பை கெட்டியாக்க, இந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் கரைத்துச் சேர்க்கலாம். குழம்பு, கூட்டு வகைகளுடன் இதைச் சேர்க்க, நல்ல வாசனையுடனும் கெட்டியாகவும் இருக்கும்.

20
எள்ளு வற்றல் பொடி

தேவையானவை: கறுப்பு எள் – அரை கப், உளுத்தம் பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும், வெறும் கடாயில் தனித்தனியாக வறுத்து, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, சூடான சாதம் போன்றவற்றுடன் சாப்பிட, சுவை வெகு ஜோர். இந்தப் பொடியை பூப்பெய்திய பெண்களும், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களும் வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்.

21
மோர்க்குழம்புப் பொடி

தேவையானவை: தனியா (கொத்தமல்லி விதை) – கால் கப், கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பச்சரிசி – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயப்பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், கொப்பரைத் துருவல் (விரும்பினால்) – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் தனியா, கடலைப்பருப்பு, பச்சரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கொப்பறைத் துருவல் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து மிக்ஸியில் பொடித்து, மஞ்சள்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்தப் பொடியை தேவையானபோது கடைந்த மோருடன் கலந்து, தாளித்து, நுரைத்து வரும்போது இறக்கினால் மோர்க்குழம்பு நொடியில் ரெடி.

கொள்ளு வெற்றிலைப் பொடி

தேவையானவை: கொள்ளு – ஒரு கப், வெற்றிலை – 5, காய்ந்த மிளகாய் – 8, மிளகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – கால் கப், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், மிளகு ஆகிய வற்றைத் தனித்தனியாக வறுத்து வைக்கவும். வெற்றிலையை நிழலில் உலர்த்தி, அதையும் வாணலியில் பிரட்டி வைக்கவும். இவை அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் பொடி தயார். எடை குறைக்க விரும்புபவர்கள் இதைக் காலை வேளையில் எடுத்துக்கொள்ளலாம்.

22
மிக்ஸ்ட் கீரைப் பொடி

தேவையானவை: பொன்னாங் கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, கறிவேப்பிலை – தலா ஒரு கட்டு, கறுப்பு உளுந்து – அரை கப், காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 5 பல், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரை வகைகளை நிழலில் உலர வைத்து வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் கறுப்பு உளுந்து, காய்ந்த மிளகாய், பூண்டை
ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து, அவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதனுடன் வறுத்த கீரை வகைகள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொள்ளவும். விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், இரும்புச்சத்துக் குறைபாடு, பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்தப் பொடியை தினமும் சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்.

ரைஸ் சூப்

தேவையானவை: புழுங்கல் அரிசி – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்து, அதனுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்து, ஆரிகானோ, உப்பு சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு தம்ளர் கொதிக்கும் நீரில் இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து சேர்த்துக் கரைத்து, ஒரு கொதி வந்ததும் சோளமாவு ஒரு டீஸ்பூன் சேர்த்து, நுரைத்து வந்ததும் இறக்கினால் சத்தான சூப் ரெடி.

23
தால் சூப்

தேவையானவை: துவரம் பருப்பு – கால் கப், பாசிப்பருப்பு – கால் கப், உலர்ந்த துளசி – ஒரு கைப்பிடி, பச்சரிசி – ஒரு டீஸ்பூன், பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசியை வெறும் கடாயில் ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து, உலர்ந்த துளசி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில், தயாரித்து வைத்துள்ள பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்துக் கலந்துவிட்டு, 2 கொதி வந்ததும் இறக்கினால் தால் சூப் தயார். காலை நேரத்தில் நிமிடங்களில் செய்யலாம் புரதச் சத்து நிறைந்த இந்த சூப்.

24
கீரை சூப்

தேவையானவை: முருங்கைக் கீரை – ஒரு கட்டு, பொன்னாங்கண்ணிக் கீரை – அரைக் கட்டு, துளசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், ஓமம் – ஒரு டீஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரை வகைகளை நிழலில் உலர்த்தி, வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

ஒரு தம்ளர் தண்ணீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கரைத்துவிட்டு, மறு கொதி வந்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துச் சேர்த்து, நன்றாகக் கொதித்து சேர்ந்து வரும்போது இறக்கினால் கீரை சூப் ரெடி. விட்டமின் பற்றாக்குறையை சரிசெய்யும் சூப் இது.

25
பெப்பர் அண்ட் ஜீரா சூப்

தேவையானவை: மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, ஒரு கப் அரிசி களைந்த நீரில் கலந்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும், சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் பெப்பர் அண்ட் ஜீரா சூப் ரெடி. விரும்பினால் கட் செய்த ரஸ்க் துண்டுகள் தூவிப் பரிமாறலாம்.

26
மழைக்கால சூப்

தேவையானவை: சுக்கு – ஒரு துண்டு, மிளகு, சீரகம், திப்பிலி, ஓமம், தனியா (கொத்தமல்லி விதை) – தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சோளமாவு தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து, சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து இதில் சேர்த்து, மறுகொதி வந்ததும் இறக்கினால் ரெய்னி சூப் ரெடி. மழைக்கால நோய்களில் இருந்து தற்காப்பு பெற, அடிக்கடி இதை குடும்பத்தோடு அருந்தலாம்.

27
சிறுதானிய சூப்

தேவையானவை: குதிரைவாலி, பாசிப்பருப்பு, சாமை அரிசி – மொத்தமாக 100 கிராம், மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், உலர்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் அரிசி களைந்த நீரில் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால் மில்லட் சூப் ரெடி.

சிறுதானியங்களை உண்ண விரும்பாதவர்களும் சூப்பாகக் கொடுத்தால் பருகிவிடுவார்கள்.

28
காய்ச்சல் சூப்

தேவையானவை: பாசிப்பருப்பு – 50 கிராம், துவரம் பருப்பு – 50 கிராம், மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வசம்பு – சிறிய துண்டு, திப்பிலி – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, எலுமிச்சை சாறு – சிறிதளவு, பெருங்காயப்பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, மிளகு, சீரகம், வசம்பு, திப்பிலி, கறிவேப்பிலை ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துப் மிக்ஸியில் பொடித்து, அத்துடன் எலுமிச்சை சாறு, பெருங்காயப்பொடி, மஞ்சள்தூள், உப்பு கலந்து வைக்கவும். அரிசி கழுவிய நீர் ஒரு கப் எடுத்துக் கொதிக்கவைத்து, நன்றாகக் கொதித்ததும் இந்தப் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் சேர்க்கவும் (தேவையெனில் ஒரு டீஸ்பூன் சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இதில் சேர்த்துக்கொள்ளலாம்). காய்ச்சலின்போது இந்த சூப் தினம் இருவேளை எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

29
மூலிகை சூப்

தேவையானவை: மிளகு – 20 கிராம், சீரகம் – 20 கிராம், கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம், ஓமம் – 20 கிராம், துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி, உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும், ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்ததும் இறக்கினால் மூலிகை சூப் தயார். இதை அருந்திய 20 நிமிடத்தில் கபகபவெனப் பசிக்கும்.

30
கார்ன் சூப்

தேவையானவை: வேகவைத்து வெயிலில் உலர்த்தி ஒன்றிரண்டாகப் பொடித்த மக்காச் சோளம் – அரை கப், மிளகு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், ஆரிகானோ (காய்ந்த கற்பூரவல்லி இலை) – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அனைத்துப் பொருட்களை யும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு தம்ளர் நீரைக் கொதிக்க வைத்து, இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அதில் சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் இறக்கி அருந்தலாம்.

32

மசாலா சூப்

தேவையானவை: பிரிஞ்சி இலை – 2, தனியா (கொத்தமல்லி விதை), சீரகம், மிளகு – தலா ஒரு டீஸ்பூன், லவங்கம் – 6, பட்டை – சிறிய துண்டு, சோம்பு – அரை டீஸ்பூன், பாசிப்பருப்பு, உளுந்து – இரண்டும் சேர்ந்து அரை கப், சோளமாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து இந்தப் பொடியில் ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து, இறுதியாக சோளமாவை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து அதில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினால் மசாலா சூப் ரெடி. இது செரிமானத்தை நன்கு தூண்டும்.

Related posts

அடேங்கப்பா! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகளா ??

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு துண்டு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

nathan

விந்தைகள் செய்யும் விதைகள்!

nathan

பாலில் இந்த அதிசய பொருளை சேர்த்து குடித்தாலே போதும்! சக்தி பலமடங்கு அதிகரிக்கும்

nathan

தெரிஞ்சிக்கங்க…பால் குடிப்பதனால் தீமைகள் ஏற்படுமா?

nathan

யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்? 10 பழச்சாறுகள்… பிரமாதப் பலன்கள்!

nathan

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

nathan

ஊதா முட்டைகோஸ் அல்லது சிவப்பு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் ஆயுளை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா?

nathan

முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்கி வைத்து வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுபவரா நீங்கள்? இதையும் படிங்க

nathan