23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Evening Tamil News Paper
ஆரோக்கிய உணவு

காய்கறிகளை பார்த்து வாங்குவது எப்படி?

நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள். நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.

வாழைக்காய்

முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவிவிட்டு, ஒரு வாளித் தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

உருளைக்கிழங்கு

செம்மண்ணில் பயிரான உருளைக் கிழங்குகளே உயர்வானவை. கெட்டியாகவும் தழும்புகள் இல்லாமலும் ஓட்டைகள் இல்லாமலும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும்.பச்சையாகவோ அல்லது பச்சை நிறத் தழும்புகள் உள்ள உருளைக்கிழங்குகள் நன்றாக இருப்பதில்லை. சிறுமுளை கண்டவற்றையும், தோல் சுருங்கியவற்றையும் வாங்குதல் கூடாது.

முள்ளங்கி

முள்ளங்கியை, சற்றுப் பருத்து நீண்டிருப்பதாகவும், நடுவில் இலைகளும் ஓரத்தில் பச்சை இலைகளும் இருப்பதாகவும் பார்த்து வாங்கவேண்டும். கையால் தட்டிப் பார்த்தால் சில பொத் பொத்தென்று சத்தம் கேட்கும். சோளத் தட்டுப் போல் இருக்கும். அவைகளை வாங்குதல் கூடாது. சமைக்க உதவாது. முக்கியமான ஒன்று வாங்கிய அன்றோ அல்லது மறுநாளோ சமைத்துவிட வேண்டும்.

முருங்கைக்காய்

முருங்கைக்காயை நல்ல கரும்பச்சை நிறத்தில் சற்றுப் பருமானாகவும் (ரொம்ப இல்ல) உருண்டையாகவும் இருந்தால் வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் வாங்கக் கூடாது. இரண்டு முனைகளையும் பிடித்துக் கொண்டு லேசாக முறுக்கினால் சற்று வளைந்துகொடுக்க வேண்டும். அது இளசாக இருக்கும். கட்டைபோல் இருந்தாலோ அல்லது முறுக்கும்பொழுது மளமளவென்று சத்தம் கேட்டாலோ வாங்காதீர்கள். அது முற்றலாய் இருக்கும். முப்பட்டையாகவோ, சற்று மஞ்சள் கலந்த பச்சைநிறத்திலோ, விதைகள் வெளியே தெரியும்படியாகவோ, முட்டி முட்டியாகவோ இருந்தால் காய் முற்றலென்று தெரிந்துகொள்ளலாம். காய்களை வாங்கி வந்தவுடன் ஒரு வாளித்தண்ணீரில் பாதிக்காய்கள் முழுகும்படி போட்டு வைக்கவேண்டும்.

தக்காளி

தக்காளியைக் கெட்டியாக உருண்டையாக, செங்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். முண்டும் முரடுமாக இருந்தால் சற்று அதிகமாகவும், சதைப்பகுதி குறைவாகவும் இருக்கும். உடனே சமைக்க வேண்டுமென்றால் நன்றாக பழுத்திருந்தாலும் கெட்டியாக இருக்கும்படி பார்த்து வாங்கவேண்டும். பழம் மெத்து மெத்தென்று இருந்தால் சாறு கெட்டுப்போயிருக்கும். காம்புக்கு அருகே நல்ல பச்சையாகவும், அடிப்பாகத்தில் சிவப்பாகவும் இருப்பதை பார்த்து வாங்கினால் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். நாளைக்கு பழம் வேண்டுமென்றால் அரிசி டப்பாவில் போட்டு வைத்தால் நன்றாக பழுத்துவிடும்.

பீன்ஸ்

பீன்ஸ் புதியவையாக இருந்தால் நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஒடித்தால் வெடுக்கென்று உடையும். சமைப்பதற்கு அதுதான் நல்லது. முற்றின காய்கள் வெளிர்ப்பச்சையாக இருக்கும். நாள்பட்டவையாக இருந்தாலும் வதங்கி வெளிர்ப்பச்சை காட்டும் அவை சமையலுக்கு உதவாதவை. விதைகள் புடைத்துக்கொண்டிருந்தால் தோல் பயன்படாது. விதைகளைத்தான் உபயோகப்படுத்த முடியும். இவை மெத்தென்றோ ஈரமாகவோ இருந்தால் சீக்கிரத்தில் அழுகிப் போய்விடும். இவற்றை ஒன்றோடொன்று படாமல் காற்றோட்டமாக வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பூஞ்சைக்காளான் பிடித்து விடும்.

அவரைக்காய்

அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். மேலும் அவரை முற்றியிருந்தாலும் மளுக்கென்று உடையாது. சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

கத்தரிக்காய்

கத்தரிக்காயை சிறு ஓட்டைகூட இல்லாமல் பார்த்து வாங்கினால்தான் உள்ளே புழு இல்லாமல் இருக்கும். காய் முழுவதும் ஒரே நிறத்தில் பளபளவென்று இருத்தல் வேண்டும். காம்புடன் கூடிய வால்பகுதி நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சி போன்று இருந்தால் காய் முற்றல். இலைப்பகுதி குட்டையாக இருந்தாலும் முற்றலே. ஆழ்ந்த ஊதா நிறத்தில் உள்ள காய்கள் நல்லது. பச்சை நிற காய்களும் ஏற்றவையே. பச்சைக் காயில் மேலே வெள்ளை வரிகள் இருந்தால் கசக்கும். குழம்பே கசப்பாகிவிடும். காம்பிள் முள் இருந்தால் நல்லவையே. காம்பு கறுத்து சுருங்கியிருந்தால் நாள்பட்ட காய் என்று அர்த்தம். காயை நறுக்கியவுடன் அரிசி கழுவும் நீரில்போட்டால் கறுப்பாகாமல் இருந்தால் நல்ல காய் என்ற அர்த்தம்.

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

வெங்காயம்

வெங்காயத்தில் நாட்டு வெங்காயம் சாம்பார் வெங்காயம்தான் ருசியானது. உடம்புக்கும் நல்லது. பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்

முட்டைக்கோஸ்

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். நடுக்காம்பு வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.

பீர்க்கங்காய்

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். காயின் மேலுள்ள நரம்புகள் மிகவும் எடுப்பாக இருந்து வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டு இருந்தால் முற்றலாகும். சற்று மெல்லிய காய்களை, நன்றாக பச்சையாக இருக்கும்படியும் நரம்புகள் உள்ளடங்கி இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சுக்காய் மேலே வரிகளுடன் மேலே வரிகளுடன் மெல்லியதாக நீண்டிருக்கும். பச்சையாக இருக்கும்.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு நீளவாட்டத்தைவிட உருண்டை வடிவமாக இருப்பதைப் பார்த்து வாங்கினால் சவுகரியாக இருக்கும். மேலே நிமிண்டிப் பார்த்தால் தோல் வரும். உள்ளெ வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு. ஆனால் நீள்வட்டக் கிழங்கில் சத்து அதிகம்.

புடலங்காய்

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்து மளுக்கென்று உடைந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும்.

பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் காம்பும் காயும் பச்சையாக இருந்தால் புதியது. காம்புகள் சுருங்கியிருந்தாலும், கறுத்து இருந்தாலும் பழையது

எலுமிச்சம் பழம்

நல்ல மஞ்சளாகவும், தோல் மெல்லியதாகவும் இருக்கும்படி பார்த்து வாங்கினால் நல்லது. காய் மெத்தென்று அமுங்கினாலும், காம்புக்கு அருகில் கன்றியிருந்தாலும் நாட்பட்ட பழமாகும். வாங்க வேண்டாம்.

கொத்துமல்லி, கருவேப்பிலை

கொத்துமல்லி, கீரை வகைகளில் பழுப்பு இல்லாமலும், பூ இல்லாமலும் பார்த்துவாங்க வேண்டும். கறிவேப்பிலையில் சிறிய வகையே மிக்க மணமுள்ளது. மெலிதாக நீண்ட இலைகளில் அவ்வளவு மணம் இருப்பதில்லை.Evening Tamil News Paper

Related posts

பீட்சாவில் சேர்க்கப்படும் பொருள் இவ்வளவு ஆபத்தா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உயிரை பறிக்கும் நிச்சயம்?தயிர் சாப்பிடும் போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

இளநீருடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

வெள்ளைப்படுத்தல் பிரச்சனைக்கு குட்பை சொல்லும் உணவுகள்

nathan

தெரிஞ்சிக்கங்க… அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ள நட்சத்திர பழத்தின் நன்மைகள்….!!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா?

nathan

உணவுகளில் உள்ள பூச்சி மருந்து, ரசாயனம் அகற்ற 6 எளிய வழிகள்..!

nathan

30 வயதை தாண்டிய ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

வயிறு கோளாறுகளை சரிசெய்யும் இஞ்சி தயிர் பச்சடி

nathan