கண்கள் துடிப்பதற்கு வைட்டமினும், கால்சியமும் பற்றாக்குறையில் இருப்பதே காரணமாகும்.
கண்கள் துடிப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?
கண்களைப் பற்றி நம் மக்களுக்கு நிறைய கண் மூடித்தனமாக மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. கண்கள் சிவந்து காணப்பட்டால் போதும் உடனே குழந்தைக்கு தாய்ப்பால் தரும் பெண்ணைத் தேடி போய், தாய்ப்பாலை வாங்கி சிவந்த கண்களில் ஊற்றுவார்கள். அப்படி செய்தால் கண்ணின் சிவப்பு மறைந்துவிடும் என்பது ஒரு நம்பிக்கை. உண்மையில் கண்ணின் சிவப்புக்கும் தாய்ப்பாலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
அதேபோல சந்தனத்தை அரைத்து இட்டுக்கொள்வது, நாமக்கட்டியை உரசிப் பூசுவது, மரப்பாச்சி பொம்மையை தேய்த்து அதன் மையை கண்ணில் தேய்ப்பது என்று எல்லாமே தவறானவை.
குழந்தைகளுக்கும் வயது வந்த பெண்களுக்கும் கண்களில் மை இட்டுக்கொண்டால் கண்கள் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை தவறானது. மையில் இருக்கும் கார்பன் கண்ணுக்கு மிக கெடுதல் தரும் தன்மை கொண்டது.
தொடர்ந்து ஒரு பெண் கண்ணுக்கு மை போட்டு வந்தால் அது விஷம். இதனை ‘லெட் பாய்சன்’ என்கிறார்கள். அதாவது ‘கார்பன் விஷம்’ அதிகரிக்க அதிகரிக்க வளர்ச்சியின்மை ஏற்படும். வலிப்பு வரும். மனநிலை பாதிப்பு ஏற்படும் என்று பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகிறது, மருத்துவத்துறை.
பெண்ணுக்கு வலது கண் தானாகத் துடித்தாலும், ஆணுக்கு இடது கண் தானாகத் துடித்தாலும் அதனை அதிர்ஷ்டம் என்கிறார்கள், மக்கள். உண்மையில் கண்கள் துடிப்பதற்கு வைட்டமினும், கால்சியமும் பற்றாக்குறையில் இருப்பதே காரணம். மற்றபடி இது அதிர்ஷ்டமும் இல்லை, துரதிர்ஷ்டமும் இல்லை.
மேலும் கண் பார்வை போய்விட்டால் அவர்களின் கண்ணை முழுமையாக எடுத்துவிட்டு வேறு ஒருவரின் கண்ணை அப்படியே பொருத்திவிடுவார்கள் என்றும் இதுதான் கண் மாற்று அறுவை சிகிச்சை என்றும் பலர் தவறாக நினைக்கிறார்கள்.
உன்மையில் கண்ணை முழுமையாக மாற்றுவதில்லை. கண்ணில் இருக்கும் ‘கார்னியா’வை மட்டுமே மாற்றுகிறார்கள். நல்ல கண்ணில் இருக்கும் கார்னியாவை எடுத்து பாதிக்கப்பட்ட கண்ணுக்கு மாற்றுகிறார்கள். இது கிட்டத்தட்ட கீறல் விழுந்த கைக்கெடிகாரத்தின் கண்ணாடியை எடுத்துவிட்டு புதிய கண்ணாடியை மாற்றுவது போன்றதாகும்.