அழகு, ஆரோக்கியத்திற்காக தரமான உலர்திராட்சையை வாங்கி, அன்றாடம் பயன்படுத்துங்கள்.
ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை
காய்ந்த திராட்சை, உலர்ந்த திராட்சை என்று அழைக்கப்படுபவை, பழமாக இருந்த திராட்சையை காய வைத்து பதப்படுத்துவதால் கிடைப்பதே! 4 டன்னுக்கும் மேலாக உள்ள திராட்சைப் பழங்களைக் காயவைத்தால், கிட்டத்தட்ட ஒரு டன் காய்ந்த திராட்சை கிடைக்கும்.
திராட்சைப் பழங்களில் பலவகைகள் இருக்கின்றன. ஆனால் எல்லா வகை திராட்சைப் பழங்களைக் காய வைத்தாலும், ருசியான, சத்தான, காய்ந்த திராட்சை கிடைக்காது. அதிக இனிப்புள்ள திராட்சைப் பழங்கள் மட்டுமே, காய்ந்த திராட்சை தயாரிப்பதற்கு ஏற்றதாகும்.
ஆதி காலத்திலிருந்தே காய்ந்த திராட்சை உணவாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் விலை அதிகமாக இருப்பதால், எல்லோராலும் போதுமான அளவு இதனை உபயோகப்படுத்த முடிவதில்லை.
காய்ந்த திராட்சையை தயாரித்து, உணவில் உபயோகிக்கும் பழக்கம் 1490-ம் ஆண்டிலேயே இருந்திருக் கிறது. கிரேக்கர்களும், ரோமானியர்களும் உலர்திராட்சையை உணவில் அதிகம் பயன்படுத்தி வந்திருக் கிறார்கள்.
உலகம் முழுவதும் காய்ந்த திராட்சை தயாரிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் உற்பத்தியாகும் மொத்த உலர் திராட்சையில் பாதி அளவு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் தயார் ஆகிறது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உலர் திராட்சை அதிகம் உற்பத்தி ஆகிறது.
திராட்சைப் பழங்களைக் காயவைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீர்ச்சத்து நீங்கி, உலர்ந்து காய்ந்த திராட்சை கிடைக்கிறது. பெரிய திராட்சைப் பழம் காய்ந்து, உலர் திராட்சையாக ஆகும்போது அதிலிருக்கும் சத்துக்களும் போய்விடுமல்லவா?- என்ற கேள்வி பலருக்குள்ளும் ஏற்படுவதுண்டு.
சத்துக்கள் நீங்குவதில்லை. அதிலே நீடிக்கிறது என்பதே உண்மை!
சர்க்கரையை அதிகமாக உபயோகப்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்களைவிட, உலர் திராட்சை சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு மிக மிக நல்லது. ‘என்டு திராக்ஷா’ என தெலுங்கிலும், ‘ஒனக்க முந்திரிங்கா’ என்று மலையாளத்திலும், ‘ஒன திராக்ஷி’ என்று கன்னடத்திலும், ‘மனுக்கா’ என்று மராத்தியிலும் அழைக்கப்படும் காய்ந்த திராட்சையில், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து ஆகியவை அடங்கியிருக்கின்றன. இந்த அனைத்து சத்துக்களும் உடலுக்கு தினமும் தேவை.
முதியோர்கள் இரண்டு டீஸ்பூன் அளவு உலர் திராட்சையை தண்ணீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, அந்த நீரை தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் கொழுப்பு சேராது என்று கருதுகிறார்கள்.
தினமும் ஒரு டீஸ்பூன் அதாவது சுமார் பத்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டால், உடலில் இரும்புச்சத்து அதிகமாகும். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இரும்புச்சத்து ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராமும், பெண்களுக்கு 18 மில்லி கிராமும் தேவை. 45 கிராம் அளவுள்ள உலர்திராட்சையில் 0.81 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
திராட்சை பழம் பார்ப்பதற்கு கோலிகுண்டு போன்று கவர்ச்சியாக இருக்கும். உலர் திராட்சை காய்ந்து,
உலர்ந்து போய் கவர்ச்சியின்றி காணப்படும். கவர்ச்சியை கருத்தில்கொண்டு காய்ந்த திராட்சையை ஒதுக்கிவிடாதீர்கள். தினமும் பத்து காய்ந்த திராட்சைகளை சாப்பிடுவது, உங்கள் வயிற்றுக்கும், இரைப்பைக்கும் ரொம்ப நல்லது. அதிலுள்ள நார்ச்சத்து, தண்ணீரை இழுத்து, உறிஞ்சி, ஊறி, பெரிதாகி விடு கிறது. இந்த செயலாக்கம் வயிற்றுக்கு மிக அவசியம். வயிற்றுப் பிரச்சினைகளையும், மலச்சிக் கலையும் போக்கும். உடலில் தினமும் சேரும் கழிவுப்பொருட்களை வெளியேற்றவும், கழிவுப்பொருட்கள் வெளியேறவும் உலர் திராட்சை உபயோகமாக இருக்கிறது.
‘கேட்டசிங்’ ( Cateching ) என்று அழைக்கப்படும் ஒரு பொருள், உலர் திராட்சையில் இருக்கிறது. இது உணவுப்பாதையில் புற்றுநோய், கட்டி போன்றவை உருவாகுவதை தடுக்கும். ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை தோன்றாமலும் பார்த்துக்கொள்ளும்.
ஒரு திராட்சைப்பழத்தில் எவ்வளவு சர்க்கரைச் சத்து இருக்கிறதோ, அதைப்போல எட்டு மடங்கு சர்க்கரை, ஒரு உலர் திராட்சையில் இருக்கிறது. அதனால் உடனடி சக்தி தேவைப்படுகிறவர்களுக்கு உலர் திராட்சையை சாப்பிட கொடுத்துவிடுவார்கள். வயதானவர்களுக்கும், நடக்கவே சக்திஇல்லாதவர்களுக்கும், நீண்டநாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்கும் காய்ந்த திராட்சையை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து கொடுக்கலாம்.
ஐரோப்பிய நாடுகளில், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர் களுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின்பு கடைசியாக ‘உலர் திராட்சை சிகிச்சை’ ( Ra-is-in Cure ) என்பதனை கிட்டத்தட்ட ஒரு மாதம் கொடுப்பார்கள். இந்த சிகிச்சைக்குப் பின்பு அவர் உற்சாகமடைந்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடுவார். ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் இப்போதும் இந்த சிகிச்சை நடைமுறையில் உள்ளது.
உலர் திராட்சை காரத்தன்மை கொண்டது. ஆகவே உடலில் அதிகமாகும் அமிலத்தை இதன் மூலம் சீராக்கலாம். குறிப்பாக சிறுநீரின் அமிலத் தன்மை குறையும். சிறுநீரில் வெளியாகும் அம்மோனியாவின் சக்தியும் குறைக்கப்படும். இறைச்சியை அதிக அளவில் சாப்பிட்டால், சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாகும். உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால், அமிலத்தன்மை தானாக குறைத்துவிடும்.
ஒரு டம்ளர் குடிதண்ணீரில், இரண்டு டீஸ்பூன் அளவு உலர் திராட்சையை ஒரு நாள் முழுக்க ஊற வையுங்கள். பின்பு அந்த தண்ணீரையும் ஊறிய காய்ந்த திராட்சைப் பழங்களையும் சாப்பிடுங்கள். மலச்சிக்கலுக்கு இது சிறந்த நிவாரணம். வயிற்றுப் பிரச்சினை உள்ள பள்ளி குழந்தைகளுக்கும் இதை கொடுங்கள்.உடல் எடை மிகவும் குறைந்து, ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடையைக் கூட்டதினமும் அதிக அளவில் காய்ந்த திராட்சைகளை அப்படியே சாப்பிட்டு வரலாம்.
இவை தவிர அழகை விரும்புகிறவர்கள் அவசியம் உலர்திராட்சையை விரும்பியாக வேண்டும். இதில் இருக்கும் சத்துக்கள் சரும அழகை ஜொலிக்கவைக்கும். சருமத்தில் புது செல்களை உருவாக்கி பளபளப்பை தந்து இளமையாக தோன்றச் செய்யும். அழகு, ஆரோக்கியத்திற்காக தரமான உலர்திராட்சையை வாங்கி, அன்றாடம் பயன்படுத்துங்கள்.