சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது.
குழந்தைகள் தனியாக தூங்க ஏற்ற வயது
நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.
சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை ‘இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.