ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

நல்லெண்ணெய்

ld607இந்தியாவில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்ற ஒரு சிறிய செடி எள். இதன் காயிலிருக்கின்ற ஏராளமான விதைகளைச் சேகரித்து உலர்த்தி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் தென்னிந்தியாவில் உணவு செய்தற் பொருட்டும், தலை முழுகிற்கும் பயன்படுகிறது. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகளுண்டு. மற்றும் காட்டெள், சிற்றெள், பேரெள் எனவும் பல வகுப்புகளுண்டு.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும், வெளிப்பூச்சாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் சமையலுக்குப் பயன்படுத்துவது இந்த எண்ணெய்தான். சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையுங் கொண்ட எண்ணெய் இது. எளிதாக சருமத்திற்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது. உலர்ந்த சருமத்திற்கு நல்லது.

சீனா, இந்தியா, துருக்கி முதலான நாடுகளில் எள் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது. இளவேனில் காலத்தில் பயிரிடப்பட்டு மூன்று நான்கு மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. எள்ளுச் செடி 30 செ.மீ. முதல் 90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலைகள் முட்டை வடிவிலோ, ஈட்டி வடிவிலோ 8 முதல் 13 செ.மீ. நீளம் வரை இருக்கும். இதன் பூக்கள் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்திலிருக்கும். இந்தப் பூ கண் சம்பந்தமான எல்லா நோய்களையும் தீர்க்கும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இதன் விதைகள் மிகச் சிறியது. இதில் 70 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.

ஒன்றிரண்டு பச்சை இலையை எடுத்துக் குளிர்ந்த நீரில் அலசினால் பச்சை இறங்கும். இது புண்பட்ட கண்களைக் கழுவ உதவும்.

ஒன்றிரண்டு இலைகளை ஒரு ஆழாக்கு குளிர்ந்த நீரிலிட்டு ஊற வைத்து, தினம் இருவேளையாக ஆறு அல்லது ஏழு நாட்கள் கொடுத்துவர சீதக்கழிச்சல் குணமாகும். இலையைப் பதவடையாகச் செய்து கட்டிகளுக்குக் கட்ட அவை சீக்கிரம் பக்குவமடைந்து உடையும். இதன் பூவைக் கண்ணோய்க்கு வழங்குவதுண்டு. காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டுச் சாம்பலாக்கி, புண்களுக்குத் தூவ அவை குணமாகும்.

விதையை ஊறவைத்த தண்ணீரை உதிரச் சிக்கலுக்குக் கொடுக்கலாம். விதையின் விழுது ஒரு சுண்டையளவு வெண்ணெயில் சாப்பிட குருதி மூலம் குணமாகும்.

எள்ளைச் சேர்த்துப் பக்குவப்படுத்திய அன்னத்தை உட்கொண்டால் உடல் வன்மை உண்டாகும்.

எள் நெய் புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடல் வன்மை ஆகியவற்றைத் தருவதோடு கண்ணோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவைகளைத் தணிக்கும். மனமகிழ்ச்சியைத் தரும்.

எண்ணெயில் இரண்டு அல்லது நான்கு கரண்டியளவு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குக் கொடுத்துக் கொண்டுவர உடல் பூரிக்கும்.

கோழி முட்டை வெண்கருவுடன், எண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசிக்கொண்டு வர கட்டிகளின் வலி நீங்கும்.

இதையே காலையில் இரு கண்களிலும் விட்டுக் கட்டி, தலையிலும் தடவித் தேய்த்து, காய்ந்தறிய வெந்நீரில் அடுத்தடுத்து மூன்று நாட்கள் தலை முழுகிவர கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், இவைகளுடன் சேர்ந்த மண்டைக் குத்தல் முதலியன நீங்கும்.

இந்த எண்ணெய் மார்க்ரைன், சோப்பு மற்றும் ஒப்பனை பொருள்கள் முதலியன செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button