ஆரோக்கியம் குறிப்புகள்

கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்!

”வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சருமச் சுருக்கம், வேர்க்குரு, தோல் கறுத்துப் போவது, முகப்பரு, பசியின்மை, டயரியா, உடம்பில் நீர்ச்சத்து வற்றிப் போவது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இவையெல்லாம் கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்னைகளையும் உருவாக்கும். எனவே, மனமும் உடலும் குளுமையாக… இதையெல்லாம் ஃபாலோ செய்யுங்கள்… கோடையிலும் தளதளவென புத்துணர்ச்சியுடன் நடைபோடுங்கள்…” என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா தரும் கோடை ஸ்பெஷல் டிப்ஸ்…

தாகம் எடுத்தால் உடனே மடமடவென தண்ணீர் அருந்தவும். ‘அப்புறமா குடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப்போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.

இயற்கை அந்தந்த காலநிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்பவே சீஸனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது. எனவே, ஒவ்வொரு சீஸனிலும் அந்த சீஸனுக்குரிய பழத்தை அதிகளவில் சாப்பிடவும்.

இந்த சீஸனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம்.

வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் ஜலதோஷத்துக்கு எண்ணெய்க் குளியல் பெஸ்ட் சாய்ஸ். தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கலாம். வெயிலில் அலைபவர்கள் எண்ணெய்க்குப் பதில் உடலில் நெய் தடவி ஊறவிட்டுக் குளித்தால், வெயிலால் கறுத்த சருமம் நிறத்தை மீட்கும்.

பன்னீர் ரோஜா இதழ்களைப் பாலுடன் சேர்த்து அரைத்து முகம், கழுத்து, கை மற்றும் கால் போன்ற வெயில் நேரடியாகப் படும் இடங்களில் தடவி பத்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவினால், சருமக் கருமை நீங்குவதோடு முகம் பட்டுப்போல மிருதுவாகும்.

பச்சையாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் சாப்பிடலாம்.

கார்பன் டை ஆக்ஸைடு அடைத்த குளிர்பானங்கள் உடம்பின் எரிச்சலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அவற்றைத் தவிர்த்து ஃபிரெஷ் ஜூஸ், நீர் மோர் போன்றவற்றை ஐஸ் சேர்க்காமல் குடிப்பது உடம்பையும் சருமத்தையும் குளிர்ச்சியாக்கும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் உள்ளங்கால்களில் விளக்கெண்ணைய் தடவிவிட்டு படுத்தால் உடல் குளிர்ச்சியாகும்.

கோடையிலும் இருப்போம் குளுகுளுவென!
p26

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button