29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
p60a
ஆரோக்கிய உணவு

பித்தம் தணிக்கும் பழைய சோறு!

‘அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம்… வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம் சாமி!” – வெயில் காலத்தில், வேப்ப மரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்கூடிய டயலாக் இது. கையில் பனை மட்டை விசிறியோடு, மேல் துண்டால் வியர்வையைத் துடைத்தபடி பெரிசுகள் பேசும் இந்த டயலாக், வெறும் வார்த்தை மட்டுமல்ல… 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில்தான் அத்தனை சத்துகளும் இருக்கின்றன’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பயோடெக்னாலஜி துணைப் பேராசிரியர் உஷா ஆன்டனி. பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சிக்கு இவர் எடுத்துக்கொண்ட தலைப்பு ‘பழைய சாதம்’.

p60a
‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்தது பழைய சாதம். காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயம், பச்சை மிளகாயோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது. அப்படி என்னதான் அந்த உணவில் என்று தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சியில் இறங்கினேன்’ என்ற உஷா, தொடர்ந்து அதன் நன்மைகளைக் கூறினார்.

‘சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தோம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம். சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.

மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறுமுட்ட சாப்பிட்டால்தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும்.

பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அதற்குமேல் பழைய சாதத்தை அறையின் வெப்பநிலையில் வைக்கக் கூடாது. சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்’ என்கிற உஷா ஆன்டனியின் மாணவிகள் தற்போது, சாமானியர்கள் சாப்பிடும் சத்து நிறைந்த உணவுகளான கேப்பைக் கூழ், கம்மங் கூழ் பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.

பழைய சாதம், பச்சை மிளகாய் ஒரு பார்சல்….!

p60c
செரிமானத்துக்கு சோற்று நீர்!

”பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?” என்று சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம்.

‘அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில் காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு (Digestive Fire) அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் ‘நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழைய சோறு. ‘பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத் தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால்தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது.

சுருங்கச் சொன்னால், ‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்’ ” என்கிறார் திருநாராயணன்.

p60a

Related posts

உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்

nathan

மாப்பிள்ளை சம்பா சாதம் சாப்பிட்டால் ஆண்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இவர்கள் வாழைப்பழத்தை தொட்டு கூட பார்க்க கூடாதாம்!

nathan

தெரிஞ்சிக்கங்க…கசகசாவை குறைந்த அளவில் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

முடியின் பராமரிப்பிற்கு தக்காளி

sangika

பெருஞ்சீரகம்! வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… பச்சை மிளகாய்- சிவப்பு மிளகாய்: இவற்றில் உங்க ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

nathan

வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷம் கடுக்காய்!

nathan

குடல் நோய், நுரையீரல் கோளாறை குணமாக்கும் கொய்யா

nathan