ஆரோக்கிய உணவு

நீர்மோர் (Buttermilk)

தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.

வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.

கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.

நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள்.

இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..

தேவையான பொருட்கள்:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும்.
இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும்.
கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு:
1. வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
2. கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
neer+more2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button