கர்ப்பம் என்பது ஒரு அற்புதமான அனுபவம். இருப்பினும், பிரசவம் வரை முழு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாத ஒரு கருச்சிதைவு ஏற்படுவது ஒரு சோகமான தருணம். அந்த நேரத்தில், பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறாள்.
கருச்சிதைவுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. விபத்துக்கள், தீவிர தாய்வழி பாதிப்புகள், புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை உதாரணங்களாகும்.
இந்த எண்ணத்தில் சிறிது நேரம் மூழ்கிவிட்டு முழுமையாக திரும்பி வருவதே நல்லது. உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவுகள் ஏற்பட்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
அடிக்கடி உடல் வெப்பநிலையை பரிசோதியுங்கள்
கருச்சிதைவிற்கு பின் ஒரு வாரத்திற்கு உங்கள் உடல் வெப்பநிலை குறித்து அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். வெப்பநிலையை தினமும் குறித்துக் கொள்ளுங்கள். 100° F க்கு அதிகமான வெப்பநிலை காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் தெரிவியுங்கள். உயர் வெப்பநிலை, உடலில் உள்ள தொற்று பாதிப்பு அல்லது இதர சிக்கல்களின் குறியீடாக இருக்கலாம் என்பதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.
உதிரப்போக்கு நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம்
பொதுவாக பெண்களுக்கு கருச்சிதைவிற்கு பின்னர் மாதவிடாய் காலங்கள் போல் உதிரப்போக்கு ஏற்படலாம். திட்டுக்கள் வடிவத்திலும் உதிரப்போக்கு தென்படலாம். சிலருக்கு அதிகமான அளவும் ஏற்படக்கூடும். பெரும்பாலும் 4 வாரங்கள் வரை இந்த உதிரப்போக்கு நீடிக்கலாம். நீங்கள் அந்த நேரத்தில் சானிட்டரி பேட் அல்லது டேம்பான்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
வலி மற்றும் பிடிப்பு
கருச்சிதைவிற்கு பின்னர் பெண்களுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படக்கூடும். கருப்பை சுவர்களை சுத்தம் செய்யும் ஒரு வழியாகவே இந்த வலிகள் பெரும்பாலும் உள்ளன. ஆகவே இந்த வலி குறித்து பயம் கொள்ள வேண்டாம். ஒருவேளை இந்த வலி பொறுக்கமுடியாததாக இருந்தால், வலியுடன் குமட்டல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது மருத்துவரை அணுகுங்கள்.
பாலியல் தொடர்பை தவிர்ப்பது நல்லது
உதிரப்போக்கு நிற்கும்வரை பாலியல் தொடர்பை தவிர்க்கவும். இதனால் பெண்களின் உடல்நிலை வழக்கமான நிலைக்கு திரும்ப போதிய அவகாசம் கிடைக்கும். எந்த கட்டத்தில் கருச்சிதைவு ஏற்பட்டதோ அதனைப் பொறுத்து அதன் தீவிர நிலை அறியப்படும். கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் ஏற்படும் கருச்சிதைவு தாயின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும். இந்த நிலையில் நீங்கள் மீண்டு வந்தபின் மறுபடி எப்போது கருத்தரிக்க முயற்சிக்கலாம் என்பது குறித்த ஆலோசனையை மருத்துவரிடம் கேட்கலாம்.
மறுமுறை கருத்தரிக்க குறைந்தது 5-6 வாரங்கள் காத்திருக்கவும்
மீண்டும் கருத்தரிக்க முயற்சிப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் இடைவெளி அவசியம். கருச்சிதைவிற்கு பின்னர் ஒரு முறை மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட்டால் கருப்பை குணமடையும் செயல்முறைக்கு உதவியாக இருக்கும். கருச்சிதைவு ஏற்பட்ட பெண்கள் உணர்ச்சி ரீதியாக பெரும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும். நீங்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பூரண குணமடைய போதுமான காலம் எடுத்துக் கொள்ளுங்கள். உடலுக்கு போதிய ஓய்வு அவசியம் தேவை. உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் அன்பாக பேசுங்கள். பதட்டம், பயம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க உங்களுக்கு விருப்பமான பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.