28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ht4068
மருத்துவ குறிப்பு

ரத்தத்தில் ஒளிந்திருக்கும் 3 மாத ரகசியம்!

ஆரோக்கியமாக வாழ்வது என்பது பயணத்தின் கடைசி இலக்கு அல்ல… அது வாழ்க்கைப் பாதை!

நீரிழிவு மருத்துவரை சந்திக்கச் செல்கையில், வழக்கமான ஃபாஸ்ட்டிங், போஸ்ட் பெரெண்டியல் ரத்தப் பரிசோதனைகளோடு, HbA1c எனும் ரத்தப் பரிசோதனையையும் செய்யச் சொல்கிறாரே? இது என்ன சோதனை? க்ளைகேட்டட் ஹீமோகுளோபின் (Glycated hemoglobin) என்பதையே HbA1c எனக் குறிப்பிடுகிறோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கான பிளாஸ்மா குளுக்கோஸ் அடர்த்தியை அறிவதற்காக க்ளைகேட்டட் ஹீமோகுளோபின் எனும் ஒருவகை ஹீமோகுளோபினை ஆராயும் சோதனைதான் இது.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ரத்தச் சிவப்பு அணுக்களில் இருந்து தொடங்க வேண்டும். சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் என்கிற இரும்புப் புரதம் இருக்கிறது. இது ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும் போதெல்லாம் சிறிதளவு குளுக்கோஸை தன்னிடம் கிரகித்துக் கொள்கிறது. அப்படிக் கிரகித்துக்கொள்ளப்படும் குளுக்கோஸை (இதுதான் க்ளைகேட்டட் ஹீமோகுளோபின்), அந்தச் சிவப்பணுவின் வாழ்நாள் முடியும் வரை தக்க வைத்துக் கொள்கிறது.

ஒரு சிவப்பணுவின் வாழ்வுக்காலம் 120 நாட்கள். அதனால் ஒரு சிவப்பணுவில் ரத்தச் சர்க்கரை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை இருக்கும். இச்சிவப்பணுக்களில் உள்ள சர்க்கரையை அளந்தால், ரத்த சர்க்கரையின் அளவு கடந்த 3 மாதங்களில் சராசரியாக எப்படி இருந்திருக்கிறது என அறிய முடியும். இயல்பான அளவு குளுக்கோஸ், அதற்கேற்ப இயல்பான அளவு க்ளைகேட்டட் ஹீமோகுளோபினையே உருவாக்கும். குளுக்கோஸ் அளவு அதிகமாகும் போது, இதன் அளவும் அதற்கேற்ப அனுமானிக்கக்கூடிய அளவில் அதிகரிக்கும். அதனால், இதுவே கடந்த 3 மாத கால ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை அறிய உதவும் அளவீடாக உதவுகிறது.

க்ளைகேட்டட் ஹீமோகுளோபினின் அளவு தாறுமாறாக இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? ரத்த சர்க்கரை எகிறிக் கிடக்கிறது என்று அர்த்தம். அதாவது, நீரிழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். உணவிலும் உடற்பயிற்சியிலும் மருந்து மாத்திரைகளிலும் கவனமே செலுத்தவில்லை என்றும் அர்த்தம். க்ளைகேட்டட் ஹீமோகுளோபின் அதிகமாவது என்பது நீரிழிவு தொடர்புடையது மட்டுமல்ல… இது இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், பார்வைக் குறைபாடுகள் உள்பட அனைத்துக்கும் அகலப்பாதை அமைத்துத் தரும். ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் உயர் ரத்த அழுத்த பிரச்னை தொடங்கும். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற பெரிய சிக்கல்களுக்கும் இது வழி வகுக்கும். விழித்திரையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பார்வை
பறிபோகவும் கூடும்.

நரம்புகளையும் இது பாதிப்பதால் காலில் எரிச்சல், மதமதப்பு, தொடு உணர்வு குறைதல், பாதத்தில் புண்கள், அவை குணமாக நீண்ட காலம் ஆவது உள்பட ஏராளமான சிக்கல்கள் ஏற்படும். சரும நோய்கள் தொற்றும். விதவிதமான வலிகள் வாழ்வில் வந்து சேரும். பல், காது, மூக்கு, எலும்பு என உடலின் சகல பகுதிகளையும் தாக்கும். அது மட்டுமல்ல… தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவதோடு, விறைப்புத்தன்மை குறைதல் போன்ற பிரச்னைகளும் உண்டாகும். கர்ப்பிணிகளின் HbA1c அளவு அதிகமாக இருப்பின், பிரசவத்திலும் சிக்கல்கள் ஏற்படும்.

இதனால்தான் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது HbA1c அளவைப் பரிசோதித்து, அதற்கேற்ப மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கிறோம்.

உங்கள் ரத்தம் எல்லாம் சொல்லும்!

HbA1c IFCC
(mmol/mol) என்ன ரிசல்ட்?
5.6 %க்குக் கீழ் 38க்குக் கீழ் நீரிழிவு இல்லை Normal
5.6 – 7.0 % 38-53 நீரிழிவு நல்ல கட்டுப்பாட்டில் உள்ளது Good Control
7.1 – 8.0 % 54-64 நீரிழிவு சுமாரான கட்டுப்பாட்டில் உள்ளது Fair Control
8.0 % க்குமேல் 64க்கு மேல் நீரிழிவு கட்டுப்பாடே இல்லை Worst Control

வெறும் வயிற்றில் (12 மணி நேர ஃபாஸ்ட்டிங் நல்லது) நாம் எடுக்கிற ஃபாஸ்ட்டிங் குளுக்கோஸ் சோதனையானது, குறிப்பிட்ட அந்த நாளில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவை மட்டுமே காட்டும். HbA1c சோதனையோ 3 மாதங்களுக்கான சராசரி சர்க்கரை அளவைத் துல்லியமாகக் காட்டி விடும்.

நம்மில் சிலர் நீரிழிவு பரிசோதனைக்குச் செல்வதற்கு சில நாட்கள் / ஒரு வாரம் முன்பிருந்து பயங்கரக் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வார்கள். அதற்கு முந்தைய 2-3 மாத காலத்தில் டயட், மருந்து, உடற்பயிற்சி என எதையும் ஒழுங்காக பின்பற்றி இருக்க மாட்டார்கள். இவர்களின் குட்டும் இந்தச் சோதனையில் வெளிப்பட்டு விடும். என்னதான் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் நாளின் போது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாலும், HbA1c பரிசோதனையே 2-3 மாதங்களாக ஒழுங்காக சிகிச்சை எடுக்காமல் இருந்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடும். நம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்பதை 3 வழிகளில் நிரூபிக்க வேண்டியது அவசியம்.

1. ஃபாஸ்ட்டிங் சர்க்கரை (வெறும் வயிற்றில் எடுக்கப்படும் போது இந்த அளவு 70 முதல் 100 மில்லிகிராம் அளவுக்குள் இருக்க வேண்டும். சில ஆய்வகங்களில் 80 – 110 வரை அளவுகோலாகக் கொள்ளப்படும்).

2. சாப்பிட்ட பின் எடுக்கக்கூடிய போஸ்ட் பெரெண்டியல் சர்க்கரை (இந்த அளவு 140 – 180 மில்லிகிராம் தாண்டாமல் இருக்க வேண்டும்).

3. HbA1c (7 சதவிகிதத்தைத் தாண்டாமல் இருக்க வேண்டும்). கடந்த 3 மாதங்களாக ஒவ்வொரு நாளும் ஃபாஸ்ட்டிங் 100 மில்லிகிராமை ஒட்டியும், சாப்பிட்டு ஒன்றரை மணி கழித்து எடுக்கக்கூடிய பிபி சர்க்கரை 140-180 மி.கி. அளவிலும்தான் இருந்தது என்றால், HbA1c அளவும்

7 சதவிகிதத்தை ஒட்டியே இருக்கும்… இருக்க வேண்டும்.’நான் உணவுக் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறேன்… மருந்து, மாத்திரை சாப்பிடுகிறேன். உடற்பயிற்சி செய்கிறேன்’ என ஒருவர் டாக்டரிடம் திட்டு வாங்குவதற்கு பயந்துகொண்டு, கூட்டிக் குறைத்துச் சொன்னாலும், அதை நிரூபிக்கப் போவது HbA1c அளவுதான். இது 7 சதவிகிதத்தை ஒட்டி இல்லாமல், அதற்கு மேல் 8% அல்லது 9% என்று வந்தால், அவர் மருந்து, மாத்திரைகள் விஷயத்தில் கோட்டை விட்டிருக்கலாம்… உணவுக் கட்டுப்பாட்டை உணர்ச்சிவசப்பட்டு மீறியிருக்கலாம்… உடற் பயிற்சி விஷயத்தையே மறந்திருக்கலாம். இப்படி எங்கோ தவறு செய்கிறார் என்பது மருத்துவருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கி விடும்.

ஓர் உதாரணம்…

Fasting Blood Sugar – 110 mg/dl
Post Prandial Blood Sugar – 145 mg/dl
HbA1c – 10.9 % (Average Sugar 280 mg/dl )

இச்சோதனை முடிவுகளில் அன்றைய தின குளுக்கோஸ் அளவானது 145 மி.கி. என்பது அற்புதமான செய்தி. ஆனால், கடந்த 3 மாத காலகட்டத்திலோ ஒவ்வொரு நாளும் 280 மி.கி. என்பது மிக மிக மோசமான அளவு. மருத்துவர்களைப் பொறுத்தவரை அன்றைய தினத்தின் அளவுகளை விட HbA1c அளவுதான் மிக முக்கியம். அது 7 சதவிகிதத்தை ஒட்டி வந்தால்தான், பரிசோதனை நாள் மட்டுமின்றி, மற்ற எல்லா நாட்களிலும் சர்க்கரை 145 மி.கி. அளவில் இருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியும்.

இந்த நீரிழிவாளருக்கு ஏன் இப்படி ரிசல்ட் வருகிறது?

1. மாத்திரைகள் உட்கொள்வதில் நிச்சயம் விடுபடுதல் / அலட்சியம் / கவனக்குறைவு இருக்கிறது.

2. டயட் கட்டுப்பாடு அறவே இல்லை… இனிப்பு வகைகள், பாட்டில் பானங்கள், எண்ணெய் பண்டங்கள், ஆகாத உணவுகள் எல்லாவற்றையும் ஒரு கட்டு கட்டியிருக்கிறார். 5 வேளைகளாகப் பிரித்துச் சாப்பிடுவதும், அளவாகச் சாப்பிடுவதும் மறந்தே போயிருக்கக்கூடும்.

3. உடற்பயிற்சியா? அது எந்தக் கடையில் கிடைக்கும்? இப்படி கேட்கிற நிலையில்தான் அவர் இருக்கிறார்.இப்படிப்பட்ட ஆசாமிகள் கடைசிக் கட்டத்தில் எப்படியாவது குளுக்கோஸ் அளவைக் குறைத்து விட வேண்டும் என்பதற்காக அசுரத்தனமாக ஏதாவது செய்வதுண்டு. குருலிங்கம் என்ற நீரிழிவாளர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பொதுவாக எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. திடீரென ஒரே நாளில் பல கிலோமீட்டர் நடப்பார். அப்போது மட்டும் டயட் விஷயத்திலும் செம கட்டுப்பாடு (ஒருமுறை மதுரை முதல் தேனி வரை நடந்தே கடந்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!).

இப்படி குண்டக்க மண்டக்க நடைப் பயணம் செய்ததன் விளைவாக, அதற்கு முன் 300 மி.கி. அளவையும் தாண்டி வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருந்த ரத்த சர்க்கரை, சடாரென 150 மி.கி. என்கிற அழகான அளவுக்கு வந்து விடும். இவர் HbA1c பரிசோதனையும் செய்வதில்லை. மருத்துவரையும் சந்திக்க மாட்டார். அதனால் இந்த அளவிலேயே அவரே திருப்தியாகி அகமகிழ்வார். ‘தனது சர்க்கரை தன் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. அது பற்றி கவலை கொள்ள தேவையில்லை…’ – இப்படியெல்லாம் நினைத்துக் கொள்வார்.

அடுத்த நாள்… மீண்டும் பழைய கதைதான். உடற்பயிற்சி கிடையாது… உணவுக் கட்டுப்பாடு கிடையாது… மருந்தையும் மறந்தே போவார். இப்படிப்பட்ட நபர்களிடம் குடும்பத்தினர் எவ்வளவுதான் ஆலோசனையோ அறிவுரையோ சொன்னாலும், கண்டுகொள்ளாமல் விதண்டாவாதமே செய்வார்கள். ‘என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்’ என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்கும். யாரை ஏமாற்ற இவர்கள் இப்படிச் செய்கிறார்கள்?

ஸ்வீட் டேட்டா

ஒவ்வொரு 30 வினாடிகளுக்கும் நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அறியப்படுகிறார்.
ht4068

Related posts

அவசியம் படிக்க..கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

விலங்கொன்றினால் கடியுண்டால் செய்யவேண்டிய முதலுதவி. விலங்கு விசர் நோயும் அதன் கட்டுப்பாடும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாவதற்கு முன்பே இதை செய்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்!

nathan

ஃபேமிலி டாக்டர் சரி. .. ஃபினான்ஷியல் டாக்டர் தெரியுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! தோல் பிரச்சனைகளைப் போக்கும் துளசி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

nathan

குழந்தையின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்

nathan

குழந்தையின் விக்கலை நிறுத்த இதை ட்ரை பண்ணுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான சில எளிய வழிகள்

nathan