என் பெண்ணுக்கு ‘ஹைப்போ தைராய்டிசம்’ உள்ளது. இந்நோய் உள்ளவர்கள் உணவில் முட்டைகோஸ் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிறார்களே! இது சரியா?
– பி.ஜெயலட்சுமி, கோவை-16.
ஐயம் தீர்க்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோமதி கௌதமன்…
”அமினோ அமிலம் அதிகம் உள்ள முட்டைகோஸ், ப்ரக்கோலி, காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை ஹைப்போ தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும்போது தைராய்டை சமநிலைப்படுத்தும் ஹார்மோன் சுரப்பை (Thyroid Stimulating Hormone(TSH) தடுக்கும். எப்படி?
உணவிலிருந்து உடலுக்கு கிடைக்கும் அயோடின் அளவில் 80 சதவிகிதத்தை தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு எடுத்துக் கொள்கிறது. க்ளூகோசினுலேட்ஸ் (Glucosinulates) என்று சொல்லக்கூடிய சல்பர் மற்றும் நைட்ரஜன் கொண்டசேர்மங்கள், இவ்வகைக் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த சேர்மங்களினால் ஏற்படும் ரசாயன எதிர்வினையானது உணவிலிருந்து உடல், அயோடின் உள்வாங்குவதைத் தடுக்கிறது. அயோடின் குறைவதால் தைராய்டு சுரப்பு குறைந்து ஹைப்போதைராய்டிசம் ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முதல் நாள் இரவு இவ்வகைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளும்போது, மறுநாள் காலையில் கை, கால்கள் சற்று பருத்தாற்போல இருக்கும். சிலருக்கு கைவிரலில் உள்ள மோதிரத்தைக் கழற்ற முடியாமல் கூட போகும். அவர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் இருப்பார்கள்.
அதற்கு ரசாயன எதிர்வினையே காரணம்.தைராய்டு சிகிச்சைக்காக குறைந்த அளவு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள், சமைத்த கோஸை 100 கிராம் அளவு வரை தாராளமாக சாப்பிடலாம். அதுவும் இவ்வகைக் காய்களை பச்சையாக சாலட்டாகவோ, ஜூஸாகவோ உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. வேக வைத்து உண்பதே சிறந்தது. அதிக அளவு மாத்திரை எடுத்துக் கொள்பவர்களானால் தைராய்டு சிகிச்சை முடியும் வரை கோஸ், காலிஃப்ளவர், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை தவிர்ப்பதே நல்லது…”