வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
மென்மையான மெத்தையில் படுப்பதற்குதான் பலரும் விரும்புகிறார்கள். முன்னோர் காலத்தில் தரையில் தூங்கும் பழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். தரையில் படுத்து தூங்குவதன் மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மை என்னவென்றால் உடல் தோரணையை சரியாக வைத்திருப்பதுதான்.
மெத்தையில் படுத்து தூங்கும்போது பெரும்பாலும் உடலை நிமிர்த்தி வைத்திருக்க முடியாது. மெத்தையின் மென்மை தன்மைக்கு ஏற்ப உடலை வளைத்து சவுகரியமாக தூங்குவார்கள். அப்படி தூங்குவது முதுகெலும்பு தோரணையை சீராக பேணுவதற்கு உதவாது. தரையில் தூங்கும்போது முதுகெலும்பை நேராக வைத்திருப்பதற்கு எளிதாக இருக்கும்.
ஏனெனில் தரையில் படுக்கும்போது பெரும்பாலும் கால்களை நேராக நீட்டி முதுகு தண்டுவடம் நேர் நிலையில் இருக்கும்படிதான் தூக்க நிலை அமையும். வளைந்து படுத்தாலும் முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படாது. தரையில் படுக்கும்போது கிடைக்கும் மேம்பட்ட தோரணை முதுகெலும்பின் இயற்கையான வளைவை ஆதரிக்கும். இருப்பினும் முதுகெலும்பின் அழுத்தத்தைக் குறைக்க சிலர் தலையணைகளை பயன்படுத்த வேண்டியிருக்கலாம். அதாவது முதுகின் கீழ் மெல்லிய தலையணையை வைக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், மெத்தையில் படுப்பது உடலுக்கு மென்மையாக இருப்பதுபோல் தோன்றும். ஆனால் உடல் எடைக்கு ஏற்ப அழுத்தம் உண்டாகும். அதனால் முதுகுவலி அதிகரிக்கக்கூடும். சமதளமான மேற்பரப்பில் தூங்குவதன் மூலம் வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.
தரையில் தூங்குவது குளிர்ச்சியான தூக்க சூழலை வழங்கும். அதாவது தரை குளிர்ச்சியாக இருக்கும் போது, உடல் வெப்பம் விரைவில் தணிந்துவிடும். குறிப்பாக வெப்பமான கோடை மாதங்களில் அதிக உடல் உஷ்ணம் கொண்டவர்களுக்கு இந்த தூக்கமுறை சவுகரியமாக இருக்கும். கோடையில் படுக்கை அறை சூழல் குளிர்ச்சியாக அமைந்திருக்க வேண்டும். அதற்கேற்ப ஏ.சி. பயன்படுத்தாதவர்களுக்கு தரையில் தூங்குவது சிறந்த பலனை கொடுக்கும்.
இருப்பினும், எல்லோரும் தரையில் தூங்கக்கூடாது. வயதானவர்கள், மூட்டுவலி உள்ளவர்கள், தரையில் இருந்து எழுந்து நிற்பதில் சிக்கல் உள்ளவர்கள், ஒவ்வாமை பாதிப்பு கொண்டவர்கள் தரையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று தூக்க நிலையை தீர்மானித்துக்கொள்ளலாம்.-News & image Credit: maalaimalar