இன்று பலருக்கு தங்கள் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகரித்துள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் உடற்பயிற்சிகளை செய்வதோடு, பலவிதமான டயட்டுகளை தெரிந்து கொண்டு அதைப் பின்பற்ற முயன்றும் வருகின்றனர். ஆனால் சிலருக்கு தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆசை இருந்தும், டயட் மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பார்கள். அத்தகையவர்கள் எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது யோசிக்கலாம். அத்தகையவர்களுக்கு கால்சியம் அதிகம் நிறைந்த பால் உதவி புரியும்.
பொதுவாக பாலை தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் பல அதிர்ச்சியூட்டும் நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய பாலுடன் ஒருசில பொருட்களை சேர்த்து கலந்து குடித்து வந்தால், எளிய முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இப்போது பாலுடன் எந்த பொருட்களையெல்லாம் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் காணலாம்.
மஞ்சள் பால்
ஆயுர்வேதத்தின் படி, மஞ்சளின் மருத்துவ பண்புகளினால், இது பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் ஒருவர் தினமும் இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, உடல் எப்போதும் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும்.
சோம்பு பால்
சோம்பு மற்றும் பால் ஆகிய இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பவை. சோம்பு பாலை குடித்து வந்தால், சுவாச பிரச்சனைகள் குணமாகும். இது தவிர, சோம்பு பால் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும் மற்றும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உடலை நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும்.
பட்டை பால்
பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். அதே வேளையில் பட்டை உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். நீங்கள் உங்களுக்கு இதய நோய் வரக்கூடாது என்று நினைத்தால், தினமும் ஒரு டம்ளர் பட்டை தூள் கலந்த பாலைக் குடியுங்கள்.
உலர் பழங்கள் கலந்த பால்
உலர் திராட்சை, உலர் அத்திப்பழம், பேரிச்சம் பழம் போன்றவற்றை பாலில் கலந்து குடித்து வந்தால், அது உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவும். மேலும், இந்த வகை பாலில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இஞ்சி பால்
பொதுவாக இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை. பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க இயற்கை மருத்துவத்தில் இது முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய இஞ்சியை பாலில் தட்டிப் போட்டு குடித்தால், அது உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியத்தை கொடுப்பதோடு, அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் பண்புகள் இருப்பதால், உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.