நம் அனைவருக்குமே ஃபிட்டாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், அது கடினமான ஒன்றாக உள்ளது. ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடையுடன் இருந்தால், அவர் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார். அதுவே ஒருவரது உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், அதன் விளைவாக உடலின் பல செயல்பாடுகளில் இடையூறு ஏற்பட்டு, பல்வேறு நோய்களுக்கு ஆளக்கூடும். எனவே ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், முதலில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயல வேண்டும்.
பெரும்பாலானோர் உடல் எடை அதிகரித்த பின்னர், அதைக் குறைப்பதற்காக சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பது, மற்றும் பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது என்பன போன்ற விஷயங்களைப் பின்பற்றுவதில் ஆர்வத்தைக் காட்டுவார்கள். ஆனால் உடல் எடை அதிகரித்த பின்பு இம்மாதிரியான விஷயங்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருவரது உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து அவற்றைத் தவிர்த்து வருவதே புத்திசாலித்தனம். எனவே கீழே ஒருவரது உடல் எடையை அதிகரிக்க காரணமாக இருக்கும் சில காலைப் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது
காலை நேர உடற்பயிற்சி உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவி புரிந்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும். மேலும் உடற்பயிற்சியானது உடலினுள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.
அதிக நேரம் தூங்குவது
தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது தான். ஆனால் அளவுக்கு அதிகமான தூக்கம், உடல் ஆரோக்கியத்தைத் தான் பாதிக்கும். அதுவும் பகல் நேரத்தில், குறிப்பாக காலையில் நீண்ட நேரம் தூங்கினால், அது ஒருவரது உடல் எடையை எதிர்மறையாக பாதிக்கும்.
காலை உணவைத் தவிர்ப்பது
ஒரு நாளில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலை உணவைத் தவிர்த்தால், உடலின் மெட்டபாலிசம் குறைவதுடன், அது உடல் பருமனுக்கும் வழிவகுக்கும். எனவே ஃபிட்டாக இருக்க வேண்டுமென நினைத்தால், இம்மாதிரியான தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யாமல் இருப்பது
ஸ்ட்ரெட்சிங் பயிற்சி செய்யாமல் இருப்பது
உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், பின்பும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சியை செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் இது உடற்பயிற்சியால் சந்திக்கும் வலி மற்றும் காயங்களை இது குறைக்கும். மேலும் ஸ்ட்ரெட்சிங் பயிற்சி தொப்பையைக் குறைக்க உதவக்கூடியது.
போதுமான நீரைக் குடிக்காமல் இருப்பது
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால், உடலின் உள்ளுறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, அது உடல் எடையைக் குறைக்கவும் உதவி புரியும். சொல்லப்போனால், உடல் நீரேற்றத்துடன் இருப்பது, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுவதோடு, செரிமானமும் சிறப்பாக இருக்கும்.
தவறான உணவுகளை காலையில் உண்பது
காலை உணவானது ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும். அதைவிட்டு, காலையில் கலோரி அதிகமான பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டால், அது ஒருவரது உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கம். எனவே உங்கள் எடை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமானால், காலையில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.
டிவி பார்த்துக் கொண்டே உண்பது
பலருக்கும் காலையில் டிவியில் செய்தியைப் பார்க்கும் பழக்கம் இருக்கும். இது நல்ல பழக்கம் தான். ஆனால் சாப்பிடும் போது டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால், அது அதிகளவு உணவை உண்ண வழிவகுக்கும். நாளடைவில் இது உடல் பருமனை உண்டாக்கும். எனவே எந்த வேளையில் சாப்பிடும் போதும், உண்ணும் உணவை மெதுவான மென்று, அதன் சுவையை அனுபவித்து உண்ண பழகுங்கள்.
க்ரீம் மற்றும் சர்க்கரை நிறைந்த காபியைக் குடிப்பது
சிலர் காலையில் க்ரீம் மற்றும் சர்க்கரை நிறைந்த காபியைக் குடிப்பார்கள். இம்மாதிரியான பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உடல் பருமனுக்கு தான் வழிவகுக்கும். உங்களின் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், ப்ளாக் காபி குடியுங்கள். இல்லாவிட்டால் க்ரீன் டீ, எலுமிச்சை நீர் போன்ற ஆரோக்கிய பானங்களைப் பருகுங்கள்.