பருவ வயதை எட்டியதில் இருந்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை ஏற்படும் இயற்கையான நிகழ்வே மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்று பெயர்.
இந்த சமயத்தில்., பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் இரத்தத்தை சுத்தமாக வெளியேற்ற வேண்டும். மாதவிடாயின் போது வெளியேறும் இரத்தத்தை அப்புறப்படுத்த முதலில் துணிகள்., அதற்கு பின் நாப்கின்கள் மற்றும் துணி நாப்கின்கள் என்று பயன்படுத்தி வந்தனர்.
இந்த நேரத்தில்., தற்போதுள்ள காலநிலைக்கேற்ப மென்சுரல் கப் என்ற பொருளானது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த வகை பொருட்கள் நாப்கின்களை போல இல்லாமல்., பெண்களின் பிறப்புறுப்பில் வைத்து பயன்படுத்த கூடியதாகும். கூம்பு வடிவிலான இருக்கும் சிலிகான் பொருளால் செய்யப்பட்ட இந்த மென்சூரல் கப்பை பெண்களின் பிறப்புறுப்பில் மாதவிடாய் நேரத்தில் பொருத்திக்கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் உடலில் ஏற்படும் துர்நாற்றம்., அரிப்பு மற்றும் நாப்கின் அலர்ஜி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நல்ல உதவியாக மென்சுரல் கப் இருந்து வருகிறது.
இந்த கப்பை பிறப்புறுப்பில் பொருத்தும் சமயத்தில் குத்தவைத்து அமர்ந்தோ அல்லது ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை உயர்த்தி., கால்களை நன்றாக அகற்றி மென்சுரல் கப்பின் வாய்ப்பகுதியை நன்றாக ஆங்கில எழுத்து சி (C) போன்று அழுத்தி மடித்த பின்னர் பிறப்புறுப்பின் உள்ளே வைக்க வேண்டும். நாம் சரியாக பிறப்புறுப்பில் மென்சுரல் கப்பை பொறுத்திவிட்டால் மாதவிடாயின் போது வெளியாகும் இரத்தம் சரியாக மென்சுரல் கப்பில் தேங்கிவிடும். எந்த விதமான கசிவும் இருக்காது. இந்த மென்சுரல் கப்பை புதியதாக பயன்படுத்தும் சமயத்தில் சரியாக மென்சுரல் கப் பொறுத்தப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும்.
இந்த சந்தேகத்தை தீர்க்க முன்னெச்சரிக்கையாக மென்சுரல் கப்பை பொருத்திய பின்னர் நாப்கின்னை அதற்கு அடியில் வைத்து கொள்ளலாம். பின்னர் சுமார் ஐந்து மணிநேரங்கள் கழித்த பின்னர் மீண்டும் ஒரு முறை வெளியே எடுத்து சுத்தப்படுத்தி பொருத்திக்கொள்ளலாம். இந்த நேரத்தில்., மென்சுரல் கப்பில் இருக்கும் இரத்தத்தை அப்புறப்படுத்தும் போது கழுவ வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நாட்கள் முழுமையாக பயன்படுத்திய பின்னர் கொதிக்கும் நீரில் இட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதுகாப்பான அல்லது மென்சுரல் கப்பிற்கான பையில் போட்டு வைக்க வேண்டும்.
இந்த கப்பை தேவையற்ற இடங்களில் வைப்பதால் சில நேரம் கிருமித்தொற்றுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது. மேலும்., திருமணம் முடிந்த பெண்கள்., பருவமடைந்த பெண்கள் என அனைவரும் இந்த மென்சுரல் கப்பை உபயோகம் செய்யலாம். புதிதாக பருவமடைந்த அல்லது திருமணம் முடியாத பெண்களுக்கு என பிரத்தியேக மென்சுரல் கப்பும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பருவமடைந்த பெண்களுக்கு சில சமயம் மென்சுரல் கப்பை பயன்படுத்தும் போது சிரமம் இருப்பதாக உணர்ந்தால் காட்டன் துணியினால் ஆன நாப்கின்னை உபயோகம் செய்யுங்கள்.
இதுமட்டுமல்லாது குழந்தையை பெற்றெடுத்து சில மாதங்கள் ஆன பெண்களின் பிறப்புறுப்பில் அதிகளவு புண் காயங்கள் இருக்கும். இதன் காரணமாக இந்த சமயத்தில் மென்சுரல் கப்களை தவிர்ப்பது நல்லது. மேலும்., மென்சுரல் கப்பை பயன்படுத்தும் பெண்கள் நீளமாக நகம் வைத்திருக்க கூடாது. இதனால் பிறப்புறுப்பில் காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்., மென்சுரல் கப்பை பயன்படுத்தும் போது கைகளை நன்றாக சுத்தம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யாத பட்சத்தில்., பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. (இது நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கும் பொருந்தும்.. சுத்தம் என்பது அவசியம்).
மென்சுரல் கப்கள் குறித்த வதந்திகள் என்று பார்த்தோம் என்றால்., மென்சுரல் கப்கள் பிறப்புறுப்பின் வழியாக சென்றுவிடலாம் என்ற வதந்தி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது… ஒரு அழுத்தத்தின் மூலமாக மென்சுரல் கப்கள் அதனை வைக்கப்பட்ட இடத்திலேயே பாதுகாப்பாக இருக்கும். இதனால் வீண் சந்தேகங்கள் தேவையற்றது. இதனை போன்று மென்சுரல் கப்பில் சேகரிக்கப்படும் இரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்லும் என்ற வதந்தியும் உள்ளது. மென்சுரல் கப்பில் வந்து தேங்கும் இரத்தம் மீண்டும் உடலுக்குள் செல்லாது.