நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான உணவுப்பொருள். பாகற்காய் கசப்பாக இருப்பதாலேயே பலர் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதனை சாப்பிட்டால் பல பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். அதிலும் அந்த பாகற்காயை குழம்பு செய்து சாப்பிட்டால், அதன் சுவை அருமையாக இருக்கும்.
இங்கு பாகற்காய் குழம்பை எப்படி கசப்பின்றி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்களேன்…
Simple Bitter Gourd Curry Recipe
தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1 (பெரியது, நறுக்கியது)
பாகற்காய் – 1 (பொடியாக நறுக்கியது)
துவரம் பருப்பு – 1/2 கப்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காயந்ததும், அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பாகற்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பு மற்றும் பாகற்காயை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, லேசாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை ஒரு வாணலியில் ஊற்றி, அதில் உப்பு,. புளிச்சாறு, வெல்லம், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குழம்பில் சேர்த்து கிளறினால், பாகற்காய் குழம்பு ரெடி!!!