வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கீரையைக் கொண்டு வெறும் பொரியல் மட்டும் தான் செய்யத் தெரியும். ஆனால் அந்த கீரையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கீரை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.
இங்கு கீரை குழம்பை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.
Keerai Kuzhambu Recipe
தேவையான பொருட்கள்:
பசலைக்கீரை/புளிக்கீரை – 5 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
தேங்காய் – 1 கப்
சின்ன வெங்காயம் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வடகம் – 2 துண்டு
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவி போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் சுத்தம் செய்த கீரையை போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இறுதியல் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள வடகத்தை சேர்த்து தாளித்து, அதனை குழம்புடன் சேர்த்து கிளறினால், கீரை குழம்பு ரெடி!!!