மதிய வேளையில் பலருக்கு ரசம் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் எப்போதும் ஒரே மாதிரி ரசம் செய்து சாப்பிடாமல், அவ்வப்போது வித்தியாசமான ரசத்தையும் செய்து சுவைக்கலாம். அதில் ஒன்று தான் பருப்பு ரசம்.
இந்த பருப்பு ரசம் செய்வது மிகவும் ஈஸி. மேலும் சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது பருப்பு ரசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
துவரம் பருப்பு – 1/2 கப் (வேக வைத்து லேசாக மசித்தது)
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
ரசப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தாளிப்பதற்கு…
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு அதில் உப்பு, சர்க்கரை மற்றும் ரசப்பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் தண்ணீர், புளிச்சாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கொத்தமல்லியை தூவி இறக்கினால், பருப்பு ரசம் ரெடி!!!