பெண்கள் அனைவரும் கவர்ச்சியான, எடுப்பான, கட்டுக்கோப்பான உடல்வாகுவைப் பெற ஆசைப்படுகிறார்கள். அது அவர் களது மனதுக்கும், உடலுக்கும் அழகு சேர்க்கும். எந்தவிதமான உடை அணிந்தாலும் உடலுக்கு பொருத்தமாகவும் இருக்கும். ஆடி, பாடி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க வித்திடும். ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும். கட்டுக்கோப்பான உடல் என்பது சரியான அளவுள்ள உடல். மெலிந்தும், இளைத்தும், ஒல்லியாகவும் இருக்கக்கூடாது. அதுபோல் குண்டாகிவிடவும் கூடாது. சராசரி உடல் வாகுவை கொண்டிருக்க வேண்டும்.
கட்டுக்கோப்பான உடலைப்பெற இரண்டு வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். முதலாவது, சரியான உணவை தேர்ந்தெடுத்து, சரியான அளவு சாப்பிடுவது. இரண்டாவது, முறையான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்து முடங்காமல் தொடர்ந்து அதனை செய்து வருவது. இந்த இரண்டும்தான் கட்டுடலுக்கு அச்சாரமிடுபவை.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதமாவது உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கவழக்கத்தையும் முறையாக பின்பற்றி தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.
ஒருவருடைய கட்டுக்கோப்பான உடல்வாகு என்பது அவருடைய உயரத்தையும், உடல் தன்மையையும் வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. பெண்கள் பலர் இயல்பாக குண்டான உடல்வாகுவை கொண்டிருப்பார்கள். அல்லது ஒல்லியாக இருப்பார்கள். சிலர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுவார்கள். இவை கட்டுக்கோப்பான உடலுக்கு எதிரானவை.
கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு மாறுவதற்கு முயற்சிப்பவர்கள் முதலில் தங்கள் எடை, முன்பக்க, பின்பக்க அளவு, மார்பளவு போன்றவற்றை துல்லியமாக அளவிட வேண்டும். உடையின் அளவு என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருந்த போதும், உடல் எடை குறைந்த பின்னரும் உடல் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கணக்கிட தற்போதைய போட்டோ ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது பின்னாளில் ஏற்படும் மாற்றத்தை கணக்கிட உதவும்.
உடல் பருமனாக இருப்பவர்கள் முதலிலேயே எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்துவிட வேண்டும். அதுபோல் ஒல்லியாக இருப்பவர்களும் எவ்வளவு எடையை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும். அதனை முடிவு செய்வதற்கு முன்பு ஊட்டச்சத்தியல் நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சியை வீட்டில் செய்யப்போகிறீர்களா? அல்லது ஜிம்முக்கு செல்லப்போகிறீர்களா? என்பதையும் முடிவு செய்துவிட வேண்டும்.
வீட்டில் செய்வதாக இருந்தால் உடற்பயிற்சி ஆலோசகரிடம் முறையான ஆலோசனை பெற்று தொடங்க வேண்டும். அவர் உடலின் தன்மை, கட்டுக்கோப்பான உடலை பெற தடையாக இருக்கும் விஷயங்கள், உடல் ஆரோக்கிய குறைபாடு, வயது போன்ற எல்லா பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு எந்தமாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வார். குடும்ப டாக்டரின் கருத்தை கேட்டறிவதும் முக்கியமானது.
பொதுவாக குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் உடற்பயிற்சி அவசியமானது என்பது தவறான கருத்து. குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும் அதற்கான முறைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சியை பெற்றால்தான் உடல் உறுப்புகளின் செயல்பாடு முழுமையாக இருக்கும். ஜீரண சக்தியும் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் அதிகமாக உடலில் சேரும் கலோரி கொழுப்பாக மாறி வயிற்று பகுதியில் சேர்ந்துவிடும்.
உடற்பயிற்சி செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் சவுகரியமான உடைகள், ஷூக்கள் போன்றவற்றை வாங்க வேண்டும். அவை உடற் பயிற்சி மீது முழுமையான ஈடுபாட்டை உருவாக்கும். டிரட்மில், டிரம்பல் போன்ற உபகரணங்களை வாங்கிவிட்டால் வீட்டில் வைத்தே உடற் பயிற்சி செய்யலாம்.
குண்டாக இல்லாமல் இருந்தாலும் வயிறு மட்டும் தொப்பையாக இருக் கிறதே? என்று கவலைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களிடம் இத்தகைய வருத்தங்கள் எட்டிப்பார்க்கும். தொப்பை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க தொப்புள் பகுதியில் டேப் வைத்து அளந்து பார்க்கலாம். அளவெடுக்கும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும். சுவாசமும் சீராக தொடர வேண்டும். சுவாசத்திற்கு இடையூறு விளைவிக்காமல் டேப்பை இறுக்கி பிடிக்காமல் அளவெடுக்க வேண்டும். வயிற்றின் அளவு 85 செ.மீட்டருக்கு அதிகமாக இருந்தால் ‘அப்டோமினல் ஒபிசிட்டி’ என்ற தொப்பை இருப்பதாக அர்த்தம். 80 செ.மீட்டருக்கு மேல் இருந்தாலே தொப்பை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டும். சரியான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து தொப்பையில் இருந்து மீளலாம்.
‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (பி.எம்.ஐ) என்ற பரிசோதனையை செய்து பார்த்தால் அந்தந்த வயதுக்கு ஏற்ப உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தெரிந்து விடும். கட்டுக்கோப்பான உடல் இருப்பதற்கு பி.எம்.ஐ. அளவு 19-க்கும் 24-க்கும் இடையே இருக்க வேண்டும். பி.எம்.ஐ. அளவு 25 முதல் 27-க்குள் இருந்தால் அதிக எடை இருப்பதாக அர்த்தம். 27-க்கு மேல் இருந்தால் குண்டான உடல்வாகுவுடன் இருப்பதை உறுதி செய்துவிடலாம். பி.எம்.ஐ. 18-க்கு கீழ் இருந்தால் உடல் மெலிந்து இருப்பதாக அர்த்தம். உடனே டாக்டரை சந்தித்து நோய் பாதிப்பு எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
உணவு கட்டுப்பாட்டை தொடருவதற்கு முன்பாக ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையையும் பெற வேண்டும். பசி இல்லாமல் இருந்தால் பசியை தூண்டும் மருந்துகளையும், ஜீரணமாகும் மருந்துகளையும் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். பி.எம்.ஐ. 19-க்கு மேல் இருக்கும்போது உணவு மீதான விருப்பமும், பசியும் அதிகரிக்கும்.
உணவை தேர்ந்தெடுக்கும்போது எவ்வளவு கலோரி உடலுக்கு தேவை என்பது முக்கியம். சாதாரண வேலை செய்பவர்களுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரிகள் தேவை. ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த கலோரி அளவை குறைத்தால்தான் எடையை குறைக்க முடியும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் மூன்று வேளை உணவை 6 வேலையாக பிரித்து 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிட வேண்டும். அப்படி தொடர்ந்து சத்தான உணவை சாப்பிட்டு வந்தால் வாரத்திற்கு 2 கிலோ வரை எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட எடை வந்த பிறகு உணவை சராசரி அளவாக குறைத்துவிட வேண்டும்.
ஒல்லியாக இருந்தவர்கள் சாப்பிட்டு பி.எம்.ஐ. அளவை 22 முதல் 24-க்குள் இருக்கும்போது என்ன எடை இருக்கிறதோ அந்த எடையை 3 மாதங்கள் கூடாமல், குறையாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் கனவு காணும் கட்டுடல் பெறுவதற்கு வழி வகுக்கும்.
அதுபோல் கட்டுடலை சீராக பராமரிப்பதற்கு நல்ல தூக்கமும், ஓய்வும் மிக அவசியம். 5 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள் எடை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பெண்கள் போதுமான அளவு ஆழ்ந்து தூங்க வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, உடல் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளை கவனமாக கடைப்பிடித்தால் கனவு காணும் கட்டுடல் எல்லா பெண்களுக்கும் சாத்தியம்தான்!
Courtesy: MalaiMalar