26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.0.560.35
ஆரோக்கிய உணவு

மருத்துவ குணம்மிக்க பப்பாளி – தெரிஞ்சிக்கங்க…

பப்பாளி இளம் சிவப்பு நிறத்தில் தளதள வென்று எண்ணையில் முக்கி எடுத்தது போன்ற சிறிய விதைகளை உள்ளடக்கியுள்ள பழம். இந்தப் பழ மரத்தை நீங்கள் மெனக்கெட்டு வைக்க வேண்டியதே இல்லை. எங்காவது அணிலோ, காக்கையோ பப்பாளிப் பழத்தைத் தின்று விட்டு அங்கங்கே விதையைப் போட்டு வைக்கத் தானாகவே குழந்தை உள்ளங்கையை விரித்தது போன்ற இலைகளை கண்ணுக்கு இதமான குளிர்வுப் பச்சையில் மலர்த்தி வளர்ந்து கொண்டிருக்கும். வாசல் தெளிக்கும் நீரே கூட பப்பாளிக் கன்றிற்குப் போதும் அதன் ஈரப்பதத்தைக் குடித்தே வளர்ந்து விடும். கொஞ்சம் வெயில் கிடைத்தாலும் போதும் சடசடவென்று மேல்நோக்கி வளரும். கிளைகள் பரப்புவதில்லை. அதனால் பெரிதாக இடத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கொள்ளும். ஆனால் பழம் தருவதில் குறைச்சல் வைப்பதில்லை.

வளர்ந்து ஆறு மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்குள் காய்க்க ஆரம்பித்து விடும். பருவம், காலம் ஏதுமின்றி காய்க்கத் தொடங்கிய நாளில் இருந்து வருடம் முழுவதும் காய்த்துக் கொண்டே இருக்கும். பப்பாளியைப் பழமாக உண்பது குறித்து அப்பறம் பார்க்கலாம். பெருமனதோடு கணுக்கணுவாகக் காய்த்துக் கொண்டிருக்கும் பப்பாளி, கனியாகப் பழுக்கும் வரைக் காத்திருக்க வேண்டியதில்லை. காயாகப் பறித்தே மேல் தோலினைச் சீவி நீக்கி விட்டு பூசணிக்காய் போலக் கூட்டாகவோ, பொரியலாகவோ சமைத்து உண்ணலாம். நிறைய நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் இருப்பதால் பப்பாளிக் காயில் சமைக்கும் கூட்டு வயிற்றிற்கு இதமாக இருக்கும். குடல் தொடர்பான நோய்களை நீக்கும். மலச்சிக்கல் உடையவர்களுக்கு மிக எளிமையான மருந்தாக இருக்கும்.

சிலருக்கு வயிற்றுப் பகுதியில் வெப்பம் அதிகரித்து பெருங்குடலில் நீர் வறட்சி ஏற்பட்டு மலம் வெளியேற முடியாமல் குதப் பகுதியில் வலி ஏற்படும். மலம் போக வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டுக் கழிவறையில் போய் அமர்ந்தாலும் மலம் கீழிறங்குமே தவிர வெளியேறாது. காரணம் பெருங்குடலில் ஏற்பட்டுள்ள நீர் வறட்சி.

குறிப்பாக ப்ரைடு ரைஸ் போன்ற அதிக வெப்பமேற்றப்பட்ட உணவு வகைகளை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு இத்தகைய பிரச்சினை இளம் வயதிலேயே ஏற்பட்டு விடும். அதேபோல் நெருப்பில் சுட்ட கோழி இறைச்சி( தந்தூரி சிக்கன்), எண்ணையில் இட்டுப் பொறித்த வறள் தன்மையிலான சிக்கன் 65, கனமான தோசைக்கல்லில் சூடேற்றிய நார்சத்தற்ற பரோட்டா, சப்பாத்தி போன்ற உணவுவகைகளை அடிக்கடி உண்போருக்கு இந்த பிரச்சனை தோன்றுவது சர்வ இயல்பாக இருக்கும். மேற்படியான உணவுப் பழக்கமும் தொடர்ந்து உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாத வேலைச் சூழலும் இணைந்தால் சொல்லவே வேண்டாம். இத்தகையவர்களுக்கு பப்பாளிக் கூட்டு அருமருந்தாக இருக்கும்.

மேற்படிப் பிரச்சினை உள்ளவர்கள் காலை உணவுக்கோ அல்லது மதிய உணவிற்கோ உணவின் ஒரு பகுதியாக இல்லாமல் பப்பாளிக் கூட்டை மட்டுமே முழு உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் மேலே சொன்னது போல நார்ச் சத்தும், நீர்ச்சத்தும் இருப்பதோடு கார்போ ஹைடிரேட் எனும் எரிமச் சத்தும் இருப்பதால் உடலின் இயல்பான இயக்கத்திற்குத் தேவையான சர்க்கரைச் சத்தினையும், உணவின் வழியாகக் கிடைக்க வேண்டிய வெப்ப ஆற்றலையும் இது வழங்கும்.

பப்பாளிக் காயைத் தோல் நீக்கி அரையங்குல கியூப்களாக வெட்டி கனமான கடாயில் நல்லெண்ணை விட்டுக் கடுகு, உளுந்தம் பருப்புப் போட்டுத் தாளித்து உடன் மிகச் சிறிதளவு காய்ந்த மிளகாய்ப் போட்டு தாளிதம் முடிந்ததும் வெட்டிவைத்த காய்த் துண்டுகளைப் போட்டு மிதமான சூட்டில் வேகவிட வேண்டும். சுமார் பத்து நிமிடம் வெந்த பின்னர் தேங்காய் பூ போட்டு இறக்கி அப்படியே உண்ணலாம். மலச் சிக்கல் பிரச்சனை இல்லாத வர்கள் சோற்றுடன் பிசைந்தோ சப்பாத்திக்குத் தொட்டுக் கொண்டோ சாப்பிடலாம்.

இதன் இனிப்புச்சுவை மிதமாக இருப்பதால் சர்க்கரை நோயாளி கள் எடுத்துக் கொள்வதும் பிரச்சி னையாக இருக்காது. (இதற்கு அப்பால் சென்று பழம், காய் இனிப்பை சர்க்கரைக் கணக்கில் வைக்க வேண்டியதில்லை என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டியது). மூலநோய்ப் பிரச்சினை உள்ளவர்கள், நரம்பு சுருட்டல் பிரச்சினை உள்ள வர்களும் மேற்படி பப்பாளிக் காய்க் கூட்டினை தொடர்ந்து எடுத்து வர நல்ல தீர்வு கிடைக்கும்.

அதேபோல பப்பாளிக் கொழுந்து இலையை அரைத்துச் சாறு வடித்தோ அல்லது அவித்து ரசமாக வடித்தோ உள்ளுக்குள் அருந்த ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். முதிராத பப்பாளி இலையை பொடியாக அரிந்து போட்டு பருப்பு, தேங்காய்ப் பூ போட்டு கூட்டாகச் சமைத்து உண்ணலாம். இது ரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையை உடனடியாக நீக்கும்.

வீட்டிற்குப் பக்கத்தில் பப்பாளி மரம் இருந்தால் அதில் இருந்து வெளி வரும் காற்றே நமது சுவாசப் பாதையை இலகுவாக்குவதுடன் நுரையீரலில் தங்கியுள்ள நீர்த் திவலைகளை அகற்றும். எனவே காய் காய்க்கும் பெண் பப்பாளி அல்லது பூ மட்டுமே பூக்கும் ஆண் பப்பாளி எதுவானாலும் தானாக வளர்ந்து வரும் பப்பாளி மரத்தினை ஒடிக்க எளிதாக இருக்கிறதே என்றோ களையாகக் கருதியோ ஒடித்துப் போட வேண்டாம். உங்களிடம் ஒரு குவளை நீரைக் கூடக் கேட்காத பப்பாளி மரம் வளர்ந்து விட்டுப் போகட்டுமே. சாக்கடை நீரைக் குடித்து வளரும் அம்மரம் மிகையாகத் தேங்கி நாற்றமடிக்கும் சாக்கடையின் அளவைக் குறைக்கிறது என்கிற அளவிலும் வரவேற்கப்பட வேண்டியது தானே.

கூடாகவும் நாராகவும் இருக்கும் பப்பாளி மரம் காய்ந்த பின்னர் வீட்டுத் தோட்டத்தில் பரப்பி வைத்தால் நல்ல உரமாக இருப்பதோடு நீர் ஆவியாதலையும் தடுக்கும். அதேபோல செடித் தொட்டியிலும் மண் மீது காய்ந்த பப்பாளி மரத்துண்டுகளைப் போட்டு வைக்கலாம். தொட்டிச் செடிக்கு நாம் ஊற்றும் நீரினை உள்வாங்கி நிதானமாக வேர்களுக்கு வழங்கும். ஆக பனை, தென்னை மரங்கள் அளவிற்கு இல்லா விட்டாலும் பப்பாளியின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக் கூடியவை தான்.

பப்பாளிப் பழத்தின் வாசனை சிலருக்குப் பிடிக்காது. அத்தகையவர்கள் அதனைத் தவிர்ப்பது தவறில்லை. ஆனால் அதற்கு மாறாக பழம் முழுதாகப் பழுக்கும் முன்னர் தேங்காய்ப் பதத்தில் உள்ள அதன் சதைப் பாகத்தைக் கடித்துத் தின்பார்கள். ஜெல் தன்மையிலான இந்தப் பகுதி குழந்தைகளுக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். ஆனால் முக்கால் பழத்தை உண்பது பலருக்கும் வயிற்று வலியை உண்டாக்கும். சீதபேதி ஏற்படவும் காரணமாகி விடும். சிலர் இந்தக் கெட்டியான சதைப்பகுதியை உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து உண்பார்கள். இது நிச்சயமாக வயிற்றிற்கு ஒவ்வாது.

பூப்பெய்திய இளம் பெண்கள் இதே முறையில் உண்டால் உதிரப் போக்கு இல்லாத பருவத்திலும் போக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. உதிரப் போக்கு செல்லும் நாட்களில் மேற்படி விதமாக உண்டால் நிச்சயமாக உதிரப் போக்கின் அளவு கூடுதலாக இருப்பதோடு சூட்டுடன் கூடிய வயிற்று வலியும், இடுப்பு வலியும் குறிப்பாக இடுப்பும் முதுகெலும்பும் இணையும் பாகத்தில் கடும் வலியும் இருக்கும். எனவே முழுதாக பழுக்காத பப்பாளிப் பழத்தை உண்பதைத் தவிர்ப்பதே நல்லது.

முழுதாகப் பழுக்காத இந்தப் பழத்தின் சதையை சிறு துண்டுகளாக டைமண்ட் கற்கண்டு வடிவிலோ நீள வாக்கிலோ அரிந்து நிறமேற்றிப் பக்குவப்படுத்தி கேக் போன்ற இனிப்பு வகைகளில் அலங்காரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். முக்கால் பழத்தை வேகவைத்து சோற்றுடன் பிசைந்தும் சாப்பிடலாம். அரிசி வேகும் போது பொதித்து வேகவிட்டும் உண்ணலாம். ஆனால் பச்சையாக உண்பது உடல் நலனுக்கு ஏற்றதல்ல.

இனி பப்பாளிப்பழத்தைப் பார்ப்போம். சதைப் பகுதியைப் பாதுகாக்கும் தோலானது (நாட்டுப் பப்பாளி) நல்லக் கெட்டித் தன்மை கொண்டதாக இருக்கும். ஓரளவு கனிந்த பப்பாளித் தோலை எடுத்து குளிப்பதற்கு முன்னர் மேலுக்குத் தேய்த்து விட்டால் விழு விழுப்பாக இருக்கும். காயும் போது தோல் முடியை இழுப்பது போலவும் இருக்கும். நன்றாகக் காய்ந்த பின்னர் நிதானமாகத் தேய்த்துத் தளர நீர் விட்டுக் குளித்தால் பத்து எண்ணைக் குளியலை ஒரே நேரத்தில் எடுத்தது போல அத்தனை புத்துணர்ச்சியாக இருக்கும். இந்தக் குளியலால் வியர்வைத் துளைகளை அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்கு நீங்குவது போக தோலில் உள்ள சிறுசிறுத் தழும்புகள் மறையத் தொடங்கும். கண் பார்வைத் துலக்கமாக இருக்கும்.

சிலருக்கு தோலில் சில இடங்களில் திட்டுப் போன்றோ கருப்பாகவோ சில பாகங்கள் நிலைத்து இருக்கும். அந்தப் பகுதியில் இறந்த செல்கள் புதுப்பிக்கப்படவில்லை என்று பொருள். அதற்கு மருந்து மாத்திரைகள், தைலங்கள், லோசன்கள் பயன்தராது. நாம் சொன்னது போல பப்பாளித் தோலினை மேலே தேய்த்து ஆறவிட்டுக் குளித்தால் நான்கைந்து முறைக் குளியலிலேயே நல்ல பலனைப் பார்க்கலாம்.

பப்பாளித் தோலில் பூஞ்சைத் தென்பட்டாலோ அல்லது மருந்து வாசம் அடித்தாலோ அத்தோலைக் குளிப்பதற்குப் பயன்படுத்தக் கூடாது. பப்பாளிக் காயின் தோலை அதில் உள்ள பால், பிசின் போக கழுவி விட்டு எண்ணையிட்டு வதக்கி வறுத்த பயிறு அல்லது கடலை, மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து சட்னியாக அரைத்து உண்ணலாம். இது கண்ணுக்குக் குளுமையைத் தரும்.

பழ உணவு எடுத்து விரதம் இருக்கிற நாட்களில் முழுப் பப்பாளியை அப்படியே உண்ணலாம். குடல் சுத்தத்திற்கு நல்ல பலனைக் கொடுக்கும். நோன்புப் பயிற்சியின் தொடக்க நாட்களில் உப்பு, காரம் சேர்க்காமல் வெறும் பழம் மட்டும் என்கிற போது சிலருக்கு நோன்பு தண்டனையாக இருக்கும். அப்படிக் கருதுகிறவர்கள் பப்பாளியைத் துண்டுகளாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு அதன்மீது உப்பும், மிளகுத் தூளும் லேசாகத் தூவி அதனை உண்டால் உண்ணச் சுவையாக இருப்பதோடு உப்புக் காரத்தின் மீதான வேட்கையும் தணியும். தற்காலத்தில் ஜாம் தடவி சப்பாத்தித் தோசை உண்ணும் பழக்கம் பரவலாகிக் கொண்டு வருகிறது. ஜாம் ஒன்றும் மேல் நடுத்தர வர்க்கத்தினருக்குக் கூடக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதில்லை. ஆனால் அவசரத்திற்கு ஆகுமென்று வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். அதிலும் செயற்கை நிறமிகளும், பாதுகாவினிகளும் உள்ளதால் ஜாம்கள் உடல் நலனுக்குப் பாதுகாப்பானதில்லை. எனவே ஜாம் விரும்பிகள் தாமாகவே பப்பாளி ஜாம் தயாரித்துக் கொள்ளலாம்.

எப்படி? மசித்தால் மசியும் நிலையில் உள்ள பப்பாளியைத் துண்டுகளாக அரிந்து கனமான பாத்திரத்தில் இட்டு மிதமாகச் சூடேற்றி ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து விட்டால் பழம் வெந்து மசியும் நிலைக்கு வந்து விடும். பாத்திரத்தை இறக்காமலே மத்து வைத்து மசித்து விட்டால் பழம் கூழாகி விடும். இதில் சிறிது சிறிதாக நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் தூள் சேர்த்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாகும் சமயத்தில் அதனோடு சிறிதளவு நெய் அல்லது எண்ணை விட்டு புரட்டிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கிண்ட முடியாத நிலையை எட்டிய பிறகு அப்படியே அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஆற வைத்த பிறகு இறுக்கமாக மூடும் பாட்டில் போன்ற கலத்தில் இட்டு மூடி வைத்து அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்தலாம். ஒரு வாரம் பத்து நாட்களுக்குள் இதனைக் காலி செய்து விடுவது நல்லது. இந்த ஜாமினைச் சுவைத்துப் பார்த்து விட்டால் வெளியில் இருந்து வாங்கும் ஜாம் நமது பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போய்விடும். இந்த ஜாம் பிள்ளைகளின் இளம் வயிறு மற்றும் குடலுக்கு மிகவும் ஏற்றது. நாவின் சுவை மொட்டுக்களையும் பாழாக்காது.

தொடர் பயணம் வெயிலில் அலைந்து உடலின் நீர் வற்றி விடுகிற போது மறுநாள் மலம் கழிப்பதில் சிலருக்குச் சிக்கல் தோன்றலாம். அதுபோன்ற நிலையில் மேற்சொன்னவாறு பப்பாளிப் பழத்துண்டுகளோடு சற்றே தூக்கலாக மிளகுத் தூள் சேர்த்து உண்டால் மலம் கழிப்பது எளிதாகி விடும். உடலுக்கு நலனும் தோலுக்குப் பதத்தன்மையும் தரும் பப்பாளியை நுகர்வதற்கு மேலும் பல வழிமுறைகள் உண்டு.

அவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

Courtesy: MalaiMalar

Related posts

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியம் தரும் இயற்கை உணவு

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பலாக்காய் உணவுகள்

nathan

உணவுகளின் மூலம் வரும் கொழுப்புச் சத்தை உடல் உறுஞ்சுதலைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

உடல் வறட்சி அடையாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள்!

nathan

ஊதா முட்டைகோஸ் சாப்பிட்டா இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமாம்…

nathan

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்

nathan

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan