முள் முருக்கை, கல்யாண முருக்கன், முள் முருக்கு என பல பெயர்களில் அழைக்கப்படும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. இதன் இலை, விதை, பூ, பட்டை போன்ற அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டவை.
இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் உடையது. அகலமான, பச்சை நிற இலைகளையும், வெளிர் சிவப்பு நிறப் பூக்களையும் கொண்டது. சுமார் அறுபது அடியில் இருந்து எண்பது அடி வரை வளரும். ஜூலை முதல் நவம்பர் மாதத்திற்குள் பூக்கள் பூக்கும்.
இலைகளை அரைத்து கிடைக்கும் சாற்றை, தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்பு பருகி வந்தால் கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் கருப்பையில் உண்டாகும் அனைத்து கோளாறுகளுக்கும் கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
எனவே தான் இதை ‘பெண்களுக்கான மரம்’ எனக் குறிப்பிடுகிறார்கள். அந்தக் காலத்தில், கன்னிப்பெண்கள் இருக்கும் வீடுகளில் கல்யாண முருங்கை மரத்தை வளர்ப்பது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதை உணவாகவும், சிற்றுண்டியாகவும் தயார் செய்து சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலையை வெங்காயம், தேங்காய், நெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இலையை அரைத்து உடலில் பூசி, உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சரும நோய்கள் நீங்கும்.
உடல் பருமன் குறைவதற்கு இதன் இலைச்சாறு உதவும். மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய், உதிரப்போக்கு பிரச்சினை, கருப்பைக் கட்டி, குழந்தைப் பேறின்மை போன்ற பிரச்சினைகளுக்கு கல்யாண முருங்கை சிறந்த தீர்வாகும்.
வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையை அரைத்து, மாதம் ஒரு முறை மருந்தாகச் சிறுவர்களுக்கு கொடுக்கலாம். அடையாகவும், சூப் தயார் செய்தும் மாலை நேரச் சிற்றுண்டியாக சாப்பிடலாம். கீரை வடை போன்று கல்யாண முருங்கை இலையையும் வடையில் சேர்த்து தயாரிக்கலாம்.
பிரசவத்திற்குப் பின்பு கருப்பையை தூய்மைப்படுத்தவும், வலுப்படுத்தவும் கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் கலந்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தொடர்ந்து முப்பது நாட்கள் பருகி வரலாம்.
இந்த மரத்தை வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். விதைகளைப் பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறை. கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை ஒடித்து நட்டு வைத்தாலே நன்றாக துளிர் விட்டு வளர்ந்து விடும். எல்லா மண்ணிலும் சுலபமாக வளரும்.