நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான்.
உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பார்த்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது அதனால் ஏற்படும் பிற விளைவுகளில் இருந்தும் தவிர்க்க உதவும். அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது.
கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்சினை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும்.
அதனால் கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.
கருஞ்சீரக டீ
தேவையான பொருள்கள்
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
புதினா – 1 கைப்பிடியளவு
இஞ்சி – 1 துண்டு
தேன்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.
புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ ரெடி.