காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் அன்றைய நாளில் என்னென்ன வேலைகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் நிறைய பேர் உண்டு. மறுநாளில் முடிக்க வேண்டிய வேலைகளை நினைத்து இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் எந்தவொரு செயல்களை செய்வதற்கு முன்பும் சரியாக திட்டமிடுவார்கள்.
முந்தைய நாள் மாலையிலோ, இரவிலோ தூங்க செல்வதற்கு முன்பு அடுத்த நாளுக்காக தங்களை தயார்படுத்திவிடுவார்கள். அதன் காரணமாக இரவில் நிம்மதியாக தூங்கி எழுந்து காலையில் திட்டமிட்டபடியே பணிகளை மேற்கொள்ள தொடங்குவார்கள். அப்படி திட்டமிட்டு செயல்படுவது வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
அடுத்த நாளுக்கு திட்டமிடுங்கள்: காலையில் எழுந்ததும் தொய்வின்றி அன்றைய நாளை தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவில் சில நிமிடங்களை ஒதுக்குங்கள். காலையில் உடுத்தும் ஆடையை தேர்ந்தெடுப்பது, காலை உணவுக்கான மெனுவை தீர்மானிப்பது, முன்கூட்டியே முடிக்க வேண்டிய பணி எது? கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய பணி எது? எந்த பணியை எப்போது செய்து முடிக்கலாம்? என திட்டமிட வேண்டும். இப்படி அடுத்த நாளில் செய்ய வேண்டிய பணிக்காக சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் தேவையற்ற நெருக்கடிகளை தவிர்க்க முடியும்.
மது-உணவு பழக்கம்: இரவில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சாப்பிடவும் கூடாது. மது மற்றும் தவறான உணவு பழக்கம் உடலின் உயிர் கடிகாரத்தை தொந்தரவு செய்துவிடும். தூக்கமின்மை, கவலை மற்றும் கனவுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக தூக்கத்தின் அளவு குறையும். உடல் இயக்க செயல்திறனும் பாதிப்படையும்.
இரவில் தியானம் செய்யுங்கள்: தூங்க செல்வதற்கு முன்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். தினமும் அப்படி செய்துவந்தால் தூக்க சுழற்சியில் வித்தியாசத்தை உணர்வீர்கள். படுக்கை நேர தியானம், மனம் ஓய்வெடுக்க உதவும். கவன சிதறலை கட்டுப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். எண்ணங்களை மேம்படுத்தும். காலையில் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்வோடு எழுந்திருக்கலாம்.
இலக்குகள்- முன்னுரிமை: அடுத்த நாளுக்கான திட்டங்களை வகுக்கும்போது எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துவிட வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கு இலக்கையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் திட்டமிட்ட நேரத்திற்குள் பணியை முடித்தாக வேண்டிய உந்துதலுடன் துரிதமாக செயல்பட முடியும். அதேவேளையில் சரியான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய, சாத்தியமான இலக்குகளை அமைக்க வேண்டும்.
காலையில் எழுந்திருக்கும் நேரம்: இரவில் திட்டங்களை வகுத்திருந்தாலும், அதனை செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். அது காலையில் கூடுதல் நேரம் கிடைப்பதற்கு வழிவகுக்கும். நிலுவையில் உள்ள பணிகளை செய்து முடித்துவிடலாம். அவசர, அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் எழாது. அதிகாலையில் எழுந்திருப்பதன் மூலம் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
தூக்கத்திற்கு உகந்த சூழல்: நம்மில் பலர் இரவில் நன்றாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறோம். பெரும்பாலும் ஏதாவதொரு விஷயத்தை சிந்தித்த படியே இரவை கழிக்கிறோம். திடீர் விழிப்பு வந்த பிறகு எதைப் பற்றியாவது யோசித்து தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க படுக்கையறையை தூங்குவதற்கு உகந்த சூழலுக்கு மாற்றுங்கள். இரவில் நன்றாக தூங்கும் வழக்கத்தை கடைப் பிடிப்பது படைப்பாற்றலை மேம்படுத்தும். செய்யும் வேலையின் செயல்திறனை அதிகரிக்கவும் உதவும். அதனால் இரவில் போதுமான அளவு தூங்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
Courtesy: MalaiMalar