சோப்பு நுரை போல சிறுநீர் நுரைத்து போனால் அது சிறுநீரக பாதிப்புக்கான முதல் கட்ட அறிகுறியாக இருக்கலாம். உடலில் உள்ள புரதத்தை வடிகட்ட முடியாமல் சிறுநீரகம் அதை வெளியேற்றுவதால் தான் சிறுநீர் நுரைத்து போகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக 50-70% சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட பிறகே நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். எனவே முதல்கட்ட அறிகுறிகளை கண்டிப்பாக தவறவிடக்கூடாது என அறிவுறுத்துகின்றனர்.
பலருக்கு எந்தவித அறிகுறிகளுமே இல்லாமல் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். சில நேரங்களில் அறிகுறிகள் தென்படும். அதை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக 24 மணி நேரத்தில் 150 மிகி புரதம் மட்டுமே உடலிலிருந்து வெளியேறும். அதைவிட அதிகமாக வெளியேறும் போது சிறுநீர் நுரைத்து போகும். சிறுநீரகத்தில் உள்ள 10 லட்சம் நெப்ரோன்கள் வடிகட்டும் தன்மையை மெல்ல இழக்கும் போது புரதம் வெளியேறக்கூடும். இது சிறுநீரகம் செயலிழப்பின் முதல் கட்ட அறிகுறியாகும்”
எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?
அதீத உடல் பயிற்சி, புரதம் அதிகமான உணவை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரில் புரதம் வெளியேறி சிறுநீர் நுரைத்து போகலாம். அது ஓரிரு நாட்கள் மட்டுமே அப்படி இருக்கும்.
ஆனால் தொடர்ந்து சிறுநீர் நுரைத்து போனால், எந்த வயதினராக இருந்தாலும் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும் என சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் கணேஷ் பிரசாத் கூறுகிறார்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் புதிதாக சிறுநீரக கோளாறு ஏற்படலாம் என்பதால் அனைவருமே கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.