23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6a
ஆரோக்கியம் குறிப்புகள்

முதுமையில் இளமை சாத்தியமா?

வயதும் வனப்பும்

‘நீண்ட நாள் வாழ விரும்புவோருக்கு வயோதிகம்தான் ஒரே வழி…’கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ கதையாக நீண்ட ஆயுளும் வேண்டும்… அதே நேரம் முதுமையும் எட்டிப் பார்க்கக் கூடாது… இந்தப் பேராசையைப் பலரிடமும் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் ஆரோக்கியம் கூட இவர்களுக்கு இரண்டாம்பட்சம்தான். இளமையான தோற்றத்தைத் தக்க வைத்துக்கொள்ள எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடி ஓடுபவர்களே அதிகம். வயதும் வாழ்க்கையும் ரிவர்ஸில் செல்லப் போவதில்லை. இருப்பினும், என்றும் பதினாறாக இருக்க முனைகிற அவர்களது தேடலுக்குத் தீனி போடுகின்றன இளமைக்கு உத்தரவாதம் தருவதாகச் சொல்லப்படுகிற ஆன்ட்டி ஏஜிங் சிகிச்சைகள்!

வயதைக் குறைக்க உதவுவதாக சொல்லக்கூடிய சிகிச்சைகள் எந்தளவு உண்மையானவை? இவற்றின் பின்னணியில் உள்ள வணிக உத்திகள் என்னென்ன? நிபுணர்களிடம் பேசினோம்…

”வயதைக் குறைத்து காட்ட பல சிகிச்சைகள் இருந்தாலும், தனிப்பட்ட ஒழுக்கம் இருந்தால் மட்டுமே இளமையை தக்க வைக்க முடியும். சரிவிகித உணவுப்பழக்கம், போதுமான தூக்கம், மது, சிகரெட் பழக்கமின்மை, முறையான உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கடைப்பிடிப்பது அவசியம். இவற்றைக் கடைப்பிடிக்காமல் வயதைக் குறைக்க எவ்விதமான சிகிச்சைகள் எடுத்தாலும் அது நிலையானதாக அமையாது. உள்ளத்தில் நல்ல மகிழ்ச்சியோடு இருந்தாலே, உடலும் மனமும் இளமையோடு இருக்கும்” என்கிறார் ஆன்டி ஏஜிங் மற்றும் லேசர் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீலதா.
6a
”சருமம் பளபளப்பாக இருக்க, கருப்பு சருமம் கொண்டவர்கள் சற்று பொலிவான நிறத்துக்கு மாற ‘போடாக்ஸ்'(Botox) போன்ற மருந்துகள் இருக்கின்றன. மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. ஊசியாகவும் போட்டுக் கொள்ள லாம். இந்த மருந்தை எடுத்த சில நாட்களில் சருமம் பொலிவாக தெரியும். அதனால் ஏற்படும் நிறத்தை 2 – 3 மாதங்களுக்கு மட்டுமே தக்க வைக்க முடியும். வாழ்வியல் முறைகளை நலமாக அமைத்துக் கொண்டால்தான் நிரந்தரமாக நல்ல நிறத்தை பெற முடியும்.

‘குளுட்டோதையான்’ (Glutathione) என்ற மருந்து சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்டாக செயல்படும். இதுவும் மாத்திரை, ஊசி என இரு வகைகளில் கிடைக்கிறது. இந்த மருந்தை எடுத்துக்கொண்டு சில நடிகர், நடிகைகள் கூட நல்ல பொலிவான தேகத்தை பெற்றுள்ளார்கள். கார்போஹைட்ரேட் உணவுகளான அரிசி, கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு அதிக அளவு சரும செல்கள் சேதாரமாகும். இதனால் குறைந்த வயதிலேயே அதிக வயதான தோற்றத்தைக் காட்டிவிடும். இவ்வகை பிரச்னை உள்ளவர்கள் கார்போ உணவுகளை குறைத்து விட்டு நவதானிய பருப்புகள், பச்சைக் கீரைகள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.

இட்லி, தோசை போன்ற கார்போ உணவுகளை அதிகம் சாப்பிடும் போது எளிதில் திருப்தியான உணர்வே ஏற்படாது. சாப்பிட்ட பிறகு ‘போதும்’ என்ற உணர்வை அளிக்க லெப்டின் என்னும் ஹார்மோன் சுரக்கும். அதிகம் சாப்பிடுபவர்களுக்கு லெப்டின் அதிகமாகச் சுரந்து தனது வேலையை சரியாகச் செய்யாது. ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என அதிகம் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இதனால் எளிதில் உடல் பருமன் ஆகத் தொடங்கும். அதனால் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு சரியான உடற்பயிற்சிகளைச் செய்தால் பருமன் ஏற்படாமல் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பருமன் ஏற்படும் போது சிலருக்கு நிறம் வெளிறக்கூடும்.

இது உண்மையான நிறம் அல்ல, அவர்கள் எடையை குறைத்த பிறகு வரும் நிறமே இயற்கையானது. மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவை கூட வயதை முதிர்ச்சியாகக் காட்டும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளான யோகா, தியானம், நடனம் போன்றவற்றில் ஈடுபடுவதோடு முறையான வாழ்க்கைமுறையினை மேற்கொள்வது அவசியம். இளம் வயதிலேயே சிலருக்கு முதுமை தோற்றம் வர ஆரம்பிக்கும். அதற்குரிய சிகிச்சைகளான சரும சுருக்கங்கள் நீக்குதல், பருமன் குறைத்தல், முகப்பொலிவை அதிகமாக்குதல் ஆகியவற்றைச் செய்து இளமையோடு கொண்டு வர முடியும். முகப்பொலிவை ஏற்படுத்தும் சிறந்த க்ரீம்களை சருமநல மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

கண்ட க்ரீம்களை பயன்படுத்தினால் இருக்கும் முக அழகையும் கெடுத்து விடும். முகத்தில் உள்ள பருக்களால் ஏற்பட்ட தழும்புகள், முகச்சுருக்கங்கள் மறைய நவீன லேசர் சிகிச்சை உள்ளது. இந்த சிகிச்சைக்கு ‘லேசர் ஃபேஸ் லிஃப்ட்’ என்று பெயர். வயதான தோற்றத்தில் முகம் தெரிவதை இதன் மூலம் மாற்றலாம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் இரவில் சுரக்கும் ஹார்மோனான மெலட்டோனின் சுரப்பது பாதிக்கப்படுகிறது. மெலட்டோனின் ஒரு சிறந்த ஆன்டி ஆக்சி டன்ட். மெலட்டோனின் அளவு குறையும்போது செல்களில் பாதிப்பு அதிகமாகி, இளம் வயதிலேயே வயதைக் கூட்டிக் காட்டும். இந்த ஹார்மோன் சரியான அளவில் இருந்தால் உணர்வூக்கியாகச் செயல்பட்டு மனச்சோர்வு வராமல் செய்யும்.

வைட்டமின் சி, தயமின், சைனோகோபாலமின் போன்ற சத்துகள் குறைவாக இருந்தாலும் தோற்றப் பொலிவை குறைக்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய காரணிகள் தான் வயது முதிர்ச்சியை அதிகமாக்குகின்றன…” என ஆன்டி ஏஜிங் சிகிச்சைகள் பற்றி விளக்கும் ஸ்ரீலதா, வயதைக் குறைத்து காட்டுவதற்கு செய்யப்படும் சர்ஜரிகள் பற்றியும் பேசுகிறார். ”முகச்சுருக்கங்கள் மறைய, உதடுகளை அழகாகக் காட்டுவதற்கு, பெரிதாக உள்ள மூக்கை அளவுப்படுத்த என பல நோக்கங்களுக்காக அழகுபடுத்தும் சர்ஜரிகளை செய்து கொள்கிறார்கள்.

ஆனால், ஒருமுறை சர்ஜரி செய்து கொண்டவர்கள் அதில் திருப்தியடையாமல் மீண்டும் பல சர்ஜரிகள் செய்து கொள்வார்கள். இது சரியான முறை அல்ல… இயற்கையோடு அதிகம் மல்லுக்கட்டவே கூடாது. இயற்கையான முறையில் அழகை பராமரிப்பதே சிறந்தது. சில நடிகைகள், மாடல்கள் உதடுகளை பெரிதாக, அழகாக காட்ட ஃபில்லர்ஸ் பயன்படுத்தி சர்ஜரி செய்து கொள்வதும் சகஜமாக நடக்கிறது. இந்த சிகிச்சைகள் எல்லாம் சில காலம்தான் தாக்குப்பிடிக்கும். அதனால் 40 வயதில் 20 வயதுக்குரிய இளமையுடன் வாழ வேண்டும் என்று பேராசைப்படக் கூடாது…” ‘சில ஹார்மோன்களை புதிதாக செலுத்துவதன் மூலம் வயதைக் குறைத்து இளமையையும் சுறுசுறுப்பையும் பெற முடியும்’ என சில ஆன்டி ஏஜிங் நிபுணர்கள் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இந்த ஹார்மோன் சிகிச்சைகளால் வயதைக் குறைக்க முடியுமா? நாளமில்லா சுரப்பி நிபுணர் டாக்டர் ராம்குமார் முன் வைத்தோம்…

”வயதாவதைத் தடுக்கும் சிகிச்சைகள் என்று சொல்லப்படுகிறவற்றுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. மண்ணில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் வயதாவது இயற்கையானது. மூப்பை ‘தள்ளிப்போடலாம்’ என்பதோ, ‘தடுக்கலாம்’ என்று சொல்வதோ இயற்கைக்கு மாறானது. இயற்கைக்கு மாறான விஷயங்கள் எதையும் நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. மருத்துவம் சார்ந்தவர்கள், சாராதவர்கள் என இரு தரப்பினரும் ஆன்டி ஏஜிங் என்ற சொல்லை பிரபலமாக்கி விட்டார்கள். முடியாத விஷயத்தை ஒருவர் செய்ய முடியும் என்று சொன்னால் அவர் மீது கவனம் குவியும் அல்லவா? ஆன்டி ஏஜிங் அல்லது வயதாவதைத் தடுத்தல் என்ற கருத்தாக்கமே தவறானது.நிரூபணம் இல்லாதது.

ஆன்டி ஏஜிங் சிகிச்சைகளைவயதாவதைத் தடுப்பதற்கு, வயதான பின் குறைத்துக் காட்டுவதற்கு என்று 2 வகைகளாகச் செய்கிறார்கள். ஏராளமான ஹார்மோன்களின் மாற்றங்கள் வயதாவதில் அடங்கியிருக்கிறது. வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஹார்மோன்களும் பாலுணர்வைத் தூண்டும் ஹார்மோன்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடுத்தர வயதில் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்பட ஆரம்பிக்கும். நீரிழிவு பிரச்னை, ஹைப்போதைராய்டிசம், வளர்ச்சி ஹார்மோன்களின் குறைபாடு, பெண்களுக்கு வரும் மெனோபாஸ் நிலை, ஆண்களுக்கு வரும் ஆண்ட்ரோபாஸ் நிலை ஆகியவை வயதை அதிகப்படுத்திகாட்டும் முக்கிய காரணிகளாகும்.

இப்படி குறையும் வளர்ச்சி மற்றும் செக்ஸ் ஹார்மோன்களை புதிதாகச் செலுத்துவதன் மூலம் ஒரு நபரின் வயதைக் குறைத்து இளமையுடன் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை சிலர் விதைக்கிறார்கள். இது ஒருவகையான வணிக உத்தி. எல்லோருக்கும் இவ்வித சிகிச்சைகள் பலனளிக்குமா? இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இப்படி குறையும் ஹார்மோன்களை திரும்ப செலுத்துவது, வைட்டமின் குறைபாடுகளை நீக்குவது, சருமம் பொலிவாக இருக்க கொடுக்கப்படும் க்ரீம்கள், மருந்துகள் ஆகியவையும் ஆன்டி ஏஜிங் சிகிச்சையில் அடங்கும்.

ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான ஆண்ட்ரோஜென் சுரப்பு 45 வயதுக்கு மேல் குறையத் தொடங்கும். இதனால் ஆண்குறியில் விறைப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும். செக்ஸில் சரிவர ஈடுபட முடியாது. எலும்புகளில் உள்ள தாதுக்களின் அளவு குறையும். தசைகளில் வலுவை குறைத்து பலவீனமாக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் என்னும் உதிரப்போக்கு நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரானின் அளவு குறையும் போது முக்கிய பிரச்னைகளை ஏற்படுத்தும். செக்ஸில் ஈடுபாடு குறைதல், ஈடுபடும் போது வலி, எரிச்சல் ஏற்படுவது, எலும்பு திசுக்களின் அடர்த்தி குறைவது, மறதி அடிக்கடி ஏற்படுவது, கோபம், பதற்றம் போன்ற பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இந்த ஹார்மோன்களை அதிகரிக்க மாத்திரைகளும் ஊசிமருந்துகளும் கிடைக்கின்றன. இதை நாளமில்லா சுரப்பி நிபுணரின் ஆலோசனையின் படி எடுத்துக் கொண்டு ஓரளவு சரி செய்யலாம். இதனால் பெண்களுக்கு சரும சுருக்கங்கள் நீங்கும். எலும்பும் தசைகளும் பலப்படும். இதனால் முழு இளமையுடன் மாறிவிட முடியாது. நீரிழிவு இருந்தால் வயதை மிக அதிகமாக காட்டும். மெலட்டோனின் ஹார்மோன் சரியான அளவு சுரக்கும்படி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இது சிறந்த ஆன்டிஆக்சிடன்டாக செயல்பட்டு சருமத்தைப் பாதுகாக்கும். கார்னிடின், கோஎன்ஸைம் னி, கிரீன் டீ போன்ற பொருட்களும் சிறந்த ஆன்டி ஆக்சிடன்டுகளாக செயல்படுவதால் ஆன்டி ஏஜிங் சிகிச்சையில் முக்கிய மருந்துகளாக பயன்படுத்துகிறார்கள்.

சருமச் சுருக்கங்கள் போக ஆன்டிரிங்கிள் க்ரீம், சூரிய ஒளியில் செல்பவர்களுக்கு புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க மாயிச்சரைசர் க்ரீம் போன்றவற்றை இந்த சிகிச்சையில் தருகிறார்கள். இவற்றின் பயன்பாடு மிகவும் மேலோட்டமானதுதான். வளர்ச்சி ஹார்மோன்களை புதிதாக செலுத்தும் போது, புற்றுநோய் உருவாகும் அபாயமும் உண்டு. பெண்களுக்கு செக்ஸ் ஹார்மோன்களை செயற்கையாக கொடுப்பதன் மூலம் பக்கவாதம், மயோகார்டியல் இன்ஃபார்க்ஷன் (Myocardial infarction) என்னும் இதய நோய், மார்பக புற்றுநோய் போன்றவை வர வாய்ப்பிருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகமாக்கும் சிகிச்சையில் பக்கவாதம், டிமென்சியா என்னும் மறதி நோயும் வரக்கூடும். இத்தனை அபாயங்கள் உள்ள வயதைக் குறைக்கும் சிகிச்சைகள் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். வயதைக் குறைக்கும் மந்திர மாத்திரை இன்னும் எவராலும் கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. ஆன்டி ஏஜிங்கை முழுக்க வெற்றி பெற்ற சிகிச்சை முறை என்றும் சொல்லிவிட முடியாது. மக்களிடம் வயதைக் குறைக்கும் ஆர்வத்தை தூண்டி அதன் மூலம் லாபத்தை பெற துடிப்பவர்களின் ஆசையே ஆன்டி ஏஜிங் என்ற மந்திரமாக மாறியிருக்கிறது. இயற்கையான உணவுகளை உட்கொண்டு, நோயற்ற வாழ்க்கையை மேற்கொண்டாலே எவ்வித சிறப்பு சிகிச்சைகளும் தேவையில்லை” என்று எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் ராம்குமார்.

Related posts

நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவது ஏன்? தெரிந்துகொள்வோமா?

nathan

வெந்நீர் வெறும் வயிற்றில் குடித்தால் என்ன ஆகும்?

nathan

உங்க மனைவி உங்களோட சண்டை போடமா இருக்க என்ன பண்ணனும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்திய பாரம்பரிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan

இவைகளை நீக்கினால் ஆரோக்கியம் கூடும்

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்.. விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு ..

nathan

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

nathan

நீராவி குளியல் உடலுக்கு தரும் தீமைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

நீங்களும் இப்படியானு பாருங்க.. ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான சுவாரஸ்யமான தகவல்கள் தான் கீழே…

nathan