மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? சுகப்பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள்!

ஒவ்வொரு பெண்ணுக்கும் சுகப்பிரசவம் என்பது மறு ஜென்மம். இந்த அனுபவம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்றாகும். பெண்கள் பிரசவ காலத்தில் மட்டும் அதிக கஷ்டங்களை சந்திப்பதில்லை. பிரசவத்திற்கு பின், அதுவும் சுகப்பிரசவம் என்றால் வெளியே சொல்ல முடியாத அளவிலான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஒன்பது மாத காலமாக ஓர் குழந்தையை சுமந்திருந்த உடல், திடீரென்று அக்குழந்தையைப் பெற்ற பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் போது, உடலில் மட்டுமின்றி, மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். கீழே சுகப்பிரசவத்தினால் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பிரச்சனை #1

இரத்த ஒழுக்கு

சுகப்பிரசவம் முடிந்த பின், கருப்பை சுருங்கி பழைய நிலைக்கு திரும்புவதால், இரத்தப் போக்கு ஓரளவு அதிகமாக இருக்கும். அதிலும் நஞ்சுக்கொடியின் ஒரு துண்டு உள்ளே இருந்தால், அப்போது இரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக இருக்கும். மேலும் பிரசவம் முடிந்த பின், ஒரு பெண் அதிகமான உடலுழைப்பில் ஈடுபட்டாலும், இரத்தப்போக்கு அதிகம் இருக்கும்.

பிரச்சனை #2

கருப்பை நோய்த்தொற்றுகள்

பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி கருப்பை சுவரிலிருந்து யோனி வழியாக வெளியேற்றப்படும் (குழந்தை வெளியே வந்து 20 நிமிடத்திற்குள் வெளிவரும்). ஒருவேளை நஞ்சுக்கொடியின் ஒரு துண்டு கருப்பையில் இருந்தால், அதனால் கருப்பையில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இம்மாதிரியான பிரச்சனை சுகப்பிரசவம் நடக்கும் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்.

பிரச்சனை #3

வேகமான இதயத் துடிப்பு மற்றும் காய்ச்சல்

பிரசவ காலத்தில் பனிக்குடப்பையில் நோய்த்தொற்றுகள் இருந்தால், அதனால் பிரசவத்திற்கு பின் கருப்பையில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்.

இம்மாதிரியான தருணத்தில் அதிகப்படியான காய்ச்சல், வேகமான இதயத் துடிப்பு, இரத்த வெள்ளை அணுக்களில் அசாதாரண உயர்வு மற்றும் துர்நாற்றமிக்க வெள்ளைப்படுதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

ஒருவேளை கருப்பையைச் சுற்றி பாதிக்கப்பட்ட திசுக்கள் இருப்பின், அதனால் காய்ச்சலும், வலியும் அப்படியே இருக்கும்.

பிரச்சனை #4

முடி உதிர்வது

பிரசவத்திற்கு பின் தலைமுடி அளவுக்கு அதிகமாக உதிரும். இதற்கு கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக இருப்பதால், தலைமுடி உதிர்ந்தது. ஆனால் பிரசவத்திற்கு பின் அதே ஈஸ்ட்ரோஜென் திடீரென்று குறைந்து, பழைய நிலைகு வரும் போது, சில மாதங்கள் தலைமுடி உதிரும்.

பிரச்சனை #5

கழிவிட வலி

சுகப்பிரசவத்திற்கு பின், பெண்களுக்கு கழிவிடத்தில் குறிப்பாக மலக்குடல் மற்றும் யோனிக்கு இடைப்பட்ட இடத்தில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு சுகப்பிரசவத்தின் போது யோனியில் கிழிவு ஏற்பட்டிருப்பது தான் காரணம்.

பிரச்சனை #6
வீங்கிய வயிறு

பிரசவத்திறகு பின், பல பெண்களும் தாங்கள் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் சுகப்பிரசவத்தினால் குழந்தைப் பெற்றுக் கொண்ட பெண்கள், தங்கள் பழைய உடலமைப்பைப் பெற 6-8 வாரங்கள் ஆகும். ஏனெனில் கருப்பையானது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அவ்வளவு காலம் ஆகும்.

பிரச்சனை #7
மார்பம் பெரிதாகி கனமாக இருக்கும்

சுகப்பிரசவத்திற்கு பின் 2-5 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மார்பகங்கள் மிகவும் கனமாகவும், வலியுடனும் இருக்கும். இதற்கு காரணம், இக்காலத்தில் தாய்ப்பாலின் சுரப்பு அதிகமாக இருப்பது தான். இந்நிலையைத் தவிர்க்கத் தான் சிறு இடைவெளியில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள்.

பிரச்சனை #8
முலைக்காம்புகளில் காயங்கள்

சிசேரியன் ஆகட்டும் அல்லது சுகப்பிரசவம் ஆகட்டும், பொதுவாக பிரசவத்திற்கு பின் சில நாட்கள் மார்பக முலைக்காம்புகளில் காயங்கள் ஏற்படக்கூடும். இதற்கு காரணம் குழந்தைக்கு சரியான முறையில் தாய்ப்பால் கொடுக்க தெரியாதது தான். ஆனால் நாளடைவில் அது சரியாகிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button