மருத்துவ குறிப்பு

அவசியம் இல்லாமல் அவசரம் வேண்டாம்!

கர்ப்பப்பையை நீக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், அதன் வகைகள், அந்த அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய தருணங்கள் பற்றி எல்லாம் கடந்த இதழில் பார்த்தோம். அவசியம் ஏற்படுகிற போது கர்ப்பப்பையை நீக்காமல் விடுவது எத்தனை ஆபத்தானதோ, அதைவிட ஆபத்தானது அவசியமில்லாமல் அதை நீக்கி விடுவது! அப்படி தேவையின்றி செய்யப்படுகிற கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சையின் பின் விளைவுகள் பற்றியும், கர்ப்பப் பையைப் பாதுகாக்கும் வழிகள் பற்றியும் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி.

"கர்ப்பப்பை நீக்கம் என்பது எந்த வயதில் செய்யப்படுகிறதோ, அதற்கேற்ற பின் விளைவுகளைத் தரக்கூடியது. உதாரணத்துக்கு 50 வயதுக்கு மேல், ஒரு பெண் ஏற்கனவே மெனோபாஸ் வயதில் இருக்கும்போது கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளை எடுப்பதில் பெரிய பிரச்னைகள் வராது. 40 வயதுக்குக் குறைவாக உள்ள பெண்களுக்கோ அந்த அறுவை சிகிச்சை அத்தனை உசிதமானதல்ல. பெண்ணின் சினைப்பை தான், ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அந்த ஹார்மோன்தான் பெண்ணை பெண் தன்மையுடன் வைக்கிறது. பெண்களுக்கு ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதும் அதுதான்.

அதாவது, அவர்களை எதையும் தாங்கும் இதயத்துடன் வைத்திருப்பது அந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்தான். கர்ப்பப்பை அறுவை சிகிச்சையுடன் சேர்த்து சினைப்பையையும் எடுக்கும் போது, அந்தப் பெண்களுக்கு நீரிழிவு, மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வரும் அபாயங்கள் அதிகரிக்கும். நம்மூரில் புற்றுநோய் மரணங்களைவிட, நீரிழிவாலும், மாரடைப்பாலும், பக்கவாதத்தாலும் நிகழ்கிற மரணங்களே அதிகம். கர்ப்பப்பையில் லேசான கட்டி எனத் தெரிந்தாலே, அதைப் பெரிதுபடுத்தி, புற்றுநோயாக இருக்குமோ, பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம் பயந்து, இள வயதில் தேவையின்றி கர்ப்பப்பையை அகற்றச் சொல்கிற பெண்கள் யோசிக்க வேண்டும்.

கர்ப்பப்பையை அகற்றுவதால் (சிறுநீர்ப்பைக்கு சப்போர்ட்டாக இருந்த கர்ப்பப்பை அகற்றப்படுவதால்) பல பெண்களுக்கும் சிறுநீரைக் கட்டுப்படுத்துவதில் கட்டுப்பாடு இல்லாமல் போகலாம். கர்ப்பப்பையை இழப்பதால் தன்னால் முழுமையான பெண்ணாக இருக்க முடியாதோ என்றும் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியாமல் போய் விடுமோ என்றும் மனரீதியான பயங்கள் பல பெண்களுக்கும் உண்டு. சிலர் தாம்பத்திய உறவில் சிரமங்களை உணர்வதுண்டு.

ஆனால், கர்ப்பப்பையை எடுத்தே தீர வேண்டும் என மருத்துவர் எச்சரித்த பிறகு, இந்த விஷயத்துக்குப் பயந்து கொண்டு அதைத் தவிர்க்க வேண்டாம். ஏனென்றால் அந்தச் சூழ்நிலையில் HRT எனப்படுகிற ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி அவர்களுக்கு கை கொடுக்கும். கர்ப்பப்பையை நீக்கிவிடலாம் என்கிற எண்ணம் எழுகிற போது, அதிலுள்ள சாதக, பாதகங்களைப் பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசித்து, பிறகு முடிவெடுப்பதே பாதுகாப்பானது.” கவனம் இருக்கட்டும்!

அந்தரங்க உறுப்பில் அரிப்பு, அசாதாரண வாடையுடன் வெள்ளைப் போக்கு இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்கவும்.

அதீத ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், ஃபிராக்‌ஷனல் கியூரெட்டேஜ் என்கிற டி அண்ட் சி செய்து கொள்ளலாம். அதன் பிறகும் பிரச்னை சரியாகவில்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்கலாம்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 40 வயதுக்கு உள்ளான எல்லா பெண்களும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

கர்ப்பவாய் புற்றுநோயைக் கண்டுபிடிக்க, வருடம் ஒரு முறை பாப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். சந்தேகம் இருந்தால் மருத்துவர் செர்வைகல் பயாப்சி என்கிற சோதனைக்கு அறிவுறுத்துவார். அதில் புற்றுநோய் வரலாம் என்பதற்கான அறிகுறிகளை சந்தேகித்தால், கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு அவர் உங்களை அறிவுறுத்தலாம். ld4491

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button