இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோகுளோபினின் அடர்த்தி குறைவதே இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தசோகையினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. இரும்புசத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சோர்வடைந்துவிடுகிறது.
மேலும் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது. மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்தசோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
1. மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.
2. சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு, உணவு செரிமானமாகாமல் இருத்தல், உடல் வெளுத்துக் காணப்படுதல்.
3. முகத்தில் வீக்கம் உண்டாதல், நகங்களில் குழி விழுதல்.
4. கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்.
5. உடல் நலம் சரியில்லாதது போன்ற உணர்வு.
6. மூச்சுவிடுவதில் சிரமம்.
7. இதயம் வேகமாகத்துடிப்பு அல்லது தாறுமாறாகத் துடிப்பது.
8. குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை.
– போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க மாதவிடாய் காலங்களில் இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.