உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்று ஒரு பக்க மக்கள் கவலைக் கொள்ள, மற்றொரு பக்க மக்களோ உடல் எடை அதிகரிக்க முடியவில்லை என்று வருந்துகின்றனர். சொல்லப்போனால் உடல் எடையைக் குறைக்கவே பல இணையதளங்களிலும் குறிப்புகள் அதிகம் இருக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் வழி தெரியாமல் இருக்கின்றனர்.
உயரத்திற்கு ஏற்ற எடை இருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல், ஒல்லிக்குச்சி போன்று இருந்தால், பலரும் உங்களைப் பார்த்து கிண்டல் தான் செய்வார்கள். நீங்கள் உங்கள் எடையை அதிகரிக்க விரும்புபவரா? அப்படியெனில் இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் இங்கு ஆயுர்வேத முறையில் உடல் எடையை அதிகரிப்பதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்து எடையை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
உலர்ந்த அத்திப்பழம் மற்றும் உலர் திராட்சை
6 உலர்ந்த அத்திப்பழத்தையும், 30 கிராம் உலர் திராட்சையையும் இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து சாப்பிட வேண்டும். இப்படி செய்து வந்தால், உடல் எடை அதிகரிப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
அஸ்வகந்தா மற்றும் பால்
1 டம்ளர் சூடான பாலில் 2 டேபிள் ஸ்பூன் அஸ்வகந்தா பொடி, 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, தினமும் இரண்டு முறை என ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை அதிகரித்திருப்பதைக் காணலாம்.
மாம்பழம் மற்றும் பால்
ஒரு நாளைக்கு மூன்று வேளையிலும் 1 மாம்பழம் சாப்பிட்டு, 1 டம்ளர் பால் குடித்து வர வேண்டும். இப்படி ஒரு மாதம் பின்பற்றி வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
வாழைப்பழம் மற்றும் பால்
வாழைப்பழத்தை பாலில் போட்டு தினமும் இரண்டு வேளை குடித்து வர, உடல் எடை அதிகரிக்கும்.
கற்கண்டு மற்றும் வெண்ணெய்
கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால், எடையை அதிகரித்து குண்டாகலாம்.