உடலில் வாய்வு உற்பத்தியாவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் தொந்தரவு ஏற்படும். அதில் சில நேரங்களில் வயிறு உப்புசம் அதிகமாகி, வலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, எதிர்பாராத நேரங்களில் பொது இடத்தில் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது அலுவலகத்திலோ சப்தத்துடன் வாயுவை வெளியேற்றி, தர்ம சங்கடத்தை சந்திக்கக்கூடும்.
இந்த பிரச்சனைக்கு காரணம் உண்ணும் உணவுகள் தான். அதிலும் உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம் போன்றவற்றை அதிக அளவில் எடுத்தால், உடலில் வாயு உற்பத்தியாகும்.
சரி, இப்போது வாய்வு பிரச்சனைக்கு உள்ளாக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரைகளான லாக்டோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை உள்ளது. இவை வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இது கொழுப்பு நிறைந்த உணவு என்பதால் செரிமானம் சரியாக நடைபெறாமல், அதன் மூலமும் வாய்வு பிரச்சனை ஏற்படும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை எளிதில் செரிமானமாகாமல், வாய்வு தொல்லையை ஏற்படுத்தும்.
சூயிங் கம்
சூயிங் கம் மெல்லும் போது, காற்றினை உள்ளிழுப்பதாலும், சூயிங் கம்மில் சர்க்கரை அதிகம் இருப்பதாலும், அது வயிற்றில் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும், கொலஸ்ட்ராலைக் குறைத்தாலும், அதுவும் வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும். இதற்கு அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தான் முக்கிய காரணம்.
உருளைக்கிழங்கு,
சோளம் மற்றும் தானியங்கள் இந்த உணவுப் பொருட்களில் ஸ்டார்ச் அதிகம் உள்ளது. இதனால் எளிதில் செரிமானமாகாமல் வயிற்றில் வாயுவை தேக்கும். ஒருவேளை ஏற்கனவே செரிமான பிரச்சனையில் இருந்தால், மேற்கூறிய உணவுப் பொருட்களை அதிகம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மிட்டாய்கள்
மிட்டாய்களில் சர்க்கரை அதிகம் இருப்பதால், அவற்றை அதிகம் சாப்பிட்டால், வாய்வு பிரச்சனை ஏற்படும். அதுமட்டுமின்றி, மிட்டாய் சாப்பிடும் போட்டு அதனை சப்பி சாப்பிடுவதால், அதன் மூலம் அதிகப்படியான காற்றினை உள்ளிழுக்க நேரிடுவதால், வாயு பிரச்சனை ஏற்படும்.
பால் மற்றும் பால் பொருட்கள்
பால் மற்றும் பால் பொருட்களில் சர்க்கரையான லாக்டோஸ் உள்ளது. இவை எளிதில் செரிமானமாகாது. மேலும் இது வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
கார்போனேட்டட் பானங்கள்
கார்போனேட்டட் பானங்களில் கார்பன்டைஆக்ஸைடு இருப்பதால், இவற்றை குடிக்கும் போது வாய்வு பிரச்சனை ஏற்படும். மேலும் இதில் சர்க்கரையும் அதிகம் உள்ளது.
ஆப்பிள் மற்றும் பீச்
ஆப்பிள் மற்றும் பீச் பழங்களில் சோர்பிட்டால் என்னும் ஒரு வகையான சர்க்கரை மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதனால் இவற்றை உட்கொண்டால் அவை எளிதில் செரிமானமாகாது. எனவே வாய்வு பிரச்சனை உள்ளவர்கள், இதனை அதிக அளவில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
பீன்ஸ்
பீன்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றம் சர்க்கரையான ரஃபினோஸ் உள்ளது. ஆகவே இதனை உட்கொண்டாலும் வாய்வு தொல்லை ஏற்படும்.