மைக்ரோவேவ் சமையல் பாதுகாப்பானதா?
ஹெல்த்
இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் பொறுமையாகச் சமைப்பதற்குக்கூட பலருக்கு நேரம் இல்லை. அதனாலேயே, கிச்சனை பிரெட் டோஸ்டர், டீப் ஃப்ரையர், ஃபுட் ஸ்டீமர், மைக்ரோவேவ்அவன் என விதவிதமான சமையல் கருவிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. `எப்போ பார்த்தாலும் கிச்சன்லயே இருக்கவேண்டியதா இருக்கே’ என்று சலித்துக்கொண்டவர்களுக்கு, இந்தக் கருவிகள் பெரும் உதவியாக அமைந்துவிட்டன. நேரமின்மையைப் பார்க்கும் நாம், இவை ஆரோக்கியமானவைதானா என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.
அடுப்பு, கேஸ் என வழக்கமாக நாம் சமைக்கும் முறைகளில், முதலில் பாத்திரம் சூடாகி, அந்த வெப்பமானது ‘வெப்பக் கடத்தல்’ முறையில் உணவுப் பொருட்களுக்குச் செல்கிறது. ஆனால், மைக்ரோவேவ் அவனில் நடக்கக்கூடிய செயல்முறையானது முற்றிலும் மாறானது. இதில், மின்சாரத்தின் மூலம் சக்தி வாய்ந்த மைக்ரோ அலைகள் உருவாகின்றன. இந்த நுண் அலைகள் மைக்ரோவேவ்அவனில் வைக்கப்பட்ட பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருட்களின் நீர் மூலக்கூறுகளை அசைத்து, அவற்றில் அதிர்வை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில், மூலக்கூறுகளில் உராய்வு ஏற்பட்டு, வெப்பம் உண்டாகிறது. இந்த வெப்பம், உணவின் அனைத்துப் பாகங்களிலும் ஒரே நேரத்தில் சென்றடையும் என்பதால், உணவுப் பொருள் விரைவில் வெப்பமடைந்து சமைக்கப்படுகிறது.
இந்த முறையில் சமைக்கும்போது உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. திரும்பத் திரும்ப உணவைச் சூடாக்குவதன் மூலம், அதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துகளும் அழிந்து, உணவுப் பொருள் நஞ்சாகிறது.
மைக்ரோவேவ்அவனில் சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதால், பல உடல் நலக்கேடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொடர்ந்து மைக்ரோவேவ்அவனில் சமைத்த உணவை உட்கொள்பவர்களுக்கு ரத்த அழுத்தப் பாதிப்பு, இதயத் துடிப்பு குறைதல், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஹெச்.டி.எல் கொழுப்பு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், ரத்த வெள்ளை அணுக்களில் இருக்கக்கூடிய லிம்போஸைட் குறைந்து, நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
மைக்ரோவேவ்அவனில் சமைக்கப்பட்ட உணவைத் தொடர்ச்சியாகச் சாப்பிடும்போது, மூளை செல்கள் சிதையவும் இனப்பெருக்க ஹார்மோன்களின் சுரப்புக் குறைந்து, குழந்தைப்பேறு தாமதமாகவும் வாய்ப்புகள் உள்ளன.