photo
ஆரோக்கியம் குறிப்புகள்

முதுமையும் மன ஆரோக்கியமும்

மனம்அல்லது உள்ளம் என்ற ஒன்று உயிருடனும் உடலுடனும் பின்னிப் பிணைந்தது. ஒருவருடைய உடல் ஆரோக்கியத்தைக் காட்டிலும் உள ஆரோக்கியமே அவரது வாழ்வில் கூடியளவு செல்வாக்குச் செலுத்துகிறது எனலாம்.

பண்டைக் காலந்தொட்டு இவ் உள அல்லது மன சம்பந்தமான கோட்பாட்டை தொட்டு வைக்காதவர்களே இல்லை. பொய்யாமொழியார் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் “மனத்துக்கண் மாசிலன் ஆதல்” என்பது அறத்திலே சிறந்தது என்றும் “வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு” என்றும் மனம் அல்லது உளம் என்ற இருகருப் பொருட்களையும் விபரிக்கின்றார்.

இந்தமனம் வயது முதிரும் போது அனுபவத்தில் திளைத்து முழு நிறைவடைகின்றது. ஆனால் பல கார ணங்களால் அது முதியவர்களில் அழுத்தத்திற்கு உள்ளாகின்றது அல்லது சோர்வடைகின்றது. இதனால் பொக்கிசமானஅவர்கள் பெற்ற அனுபவங்கள் அவர்களைச் சார்ந்தோரிடம் சென்றடைய முடியாது போகின்றது. மாறாக சிலவேளைகளில் பராமரிப்பாளர்களுக்கு சுமையாகவும் ஆகிவிடுகின்றது.

முதியவர்களின் மனஅழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினை. மன அழுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அல்லது அதைநிவர்த்தி செய்வதற்கும் பல வழி முறைகளுண்டு. இவற்றில் பிள்ளைகளுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் நிறையவே பங்குண்டு. ஏன் இந்த மன அழுத்தம் முதியவர்களுக்கு ஒரு பொதுவான பிரச்சினை என்பதை உற்று நோக்கினால் பல காரணங்களை மனவள மருத்துவர்களும் ஆராய்ச் சியாளர்களும் முன்வைக்கின்றனர்.

உண்மையில் இது மூளையில் ஏற்படும் நரம்புக் கலங்களுக்கு இடை யேயான தொடர்பாடலில் உண்டாகும் ஒரு இரசாயன மாற்றமாகும். இது தற்செயலான ஒருநிகழ்வு அல்ல. இந்த மாற்றங்களுக்கு பலகாரணங்கள் உள்ளன. பரம்பரையில் யாராவது மனஅழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருப்பின் அது ஒருமுக்கியமான காரணியாக அமைகின்றது.

முதியவர் ஒருவரின் மிக அன்புக்குரிய நெருக்கமான ஒருவரின் இழப்பு அல்லது பிரிவு திடீரென ஏற்படும் ஒரு பாரதூரமான மருத்துவ பிரச்சினை குறிப்பாக மாரடைப்பு, பாரிசவாதம், புற்றுநோய் என்பனவும் முக்கிய ஏதுக்களாக கருதப்படுகின்றது.

இதைவிட நீண்ட நாட்கள் சேவையிலிருந்து ஓய்வுபெறல், அதனால் ஏற்படும் நிதி நெருக்கடியும் மற்றவர்களில் வாழ்வாதாரத்திற்கு தங்கவேண்டிய தேவை, அளவுக்கு அதிகமான மதுபாவனை, இடமாற்றம் போன்ற சமூக, பொருளாதார பிரச்சினைகளும்பமிகுந்த செல்வாக்கைச் செலுத்துகின்றன.

இந்த மன அழுத்தத்தின் குணங்குறிகள் என்ன?

இவற்றை ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணல் ஒரு முக்கியவிடயமாகும். குடும்ப அங்கத்தவர்களே பொதுவாக இக்குணங்குறிகளை இனங்கண்டுகொள்ள முடியும். காரணமில்லாத கவலை, எளிதில் கோபமடையக் கூடியதன்மை, களைப்பு (தஞ்சக்கேடு), கிரகிக்கும் தன்மையில் குறைவு, நித்திரையின்மை, பசியில் மாற்றம், அழுதல் மற்றும் தற்கொலை எண்ணங்களை வெளிப்படுத்துதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

முதியவர்களில் பொதுவாக உடம்பில் வேறுபட்ட பல இடங்களில் நோ அல்லது வலி ஏற்படுவதை ஒருமுக்கியமான நோய் அறிகுறியாகக் கொள்ளலாம். நித்தரையின்மை, களைப்பு, உடம்புவலி என்பனவையே பொதுவாக மன அழுத்தத்திற்குள்ளான ஒரு முதியவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் குணங்குறிகளாகும்.

மன அழுத்தத்திற்குரிய பரிகாரத்தை இனி உற்று நோக்குவோம்.

எவ்வாறு மனஅழுத்தம் ஒரு காரணியால் மட்டு மல்லாது பல காரணங்களால் ஏற்படுகின்றதோ அதே போன்றே அதற்குரிய பரிகாரமும் ஒன்றல்ல. மாறாக பல வழிமுறைகளைக் கையாள்வதே ஆகும். இது மூளையின் நரம்புக் கலங்களுக்கிடையில் ஏற்படும் இரசாயன சமச்சீரின்மை. ஆதலால் மருந்துகள் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இம் மருந்துகள் பல ஆண்டுகாலங்கள் ஆராய்ச்சிசெய்யப்பட்டு பாதுகாப்பானவை என்று நிரூபிக்கப்பட்ட பின்னரே பாவனையில் உள்ளன. இம்மருந்துகள் பொதுவாக மன அழுத்தத்தை குறைக்க அல்லது குணப்படுத்த 4 அல்லது 5 வாரங்கள்கூட ஆகலாம். முதியவர்கள் இம்மருந்தைதாமே உள்ளெடுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. எனவே பராமரிப்பாளர்களே பொறுமையாகவும் ஒழுங்காகவும் இம் மாத்திரைகளை நோயாளிக்கு அளிப்பதனால் நிச்சயமாக பலன் கிட்டும்.

இம் மாத்திரைகளில் பலவகை உண்டு. முதியவர்களுக்கு நித்திரை ஒருதேவையாக உள்ளதா, வேறு ஏதாவது மருத்துவ நோய்கள் உள்ளனவா என பல காரணிகளை ஆராய்ந்து ஒரு மருத்துவர் அந்த முதியவருக்குரிய மருந்தை தேர்ந்தெடுப்பார். மருந்துகள் மட்டுமல்லபல வாழ்க்கை முறை மாற்றங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதை ஊக்குவிக்கின்றன. உடற்பியற்சி இவற்றில் முக்கிய மானது. அரைமணி நேரமாவது முதியவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்ந்தெடுத்து நடைப்பயிற்சியை செய்யலாம்.

தங்களுக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்கை அவர்கள் தேர்ந்தேடுக்க வேண்டும். கோயில் முன்றலிலோ, சனச மூக நிலையங்களிலோ, சகமுதியவர்களுடன் உரையாடல், மன்றங்களிலும், பரிபாலனசபைகளிலும் அங்கத்துவம் பெறுதல், இசைக்கச்சேரிகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தலும் பங்கு பற்றலும் போன்றன முதியவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பொழுதை இனிமையாக களிப்பதற்கும் உதவும்.

முதியவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களுடன் அதாவது தமது பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் கிரமமாக தமது நண்பர்கள் வீடுகளுக்கோ உறவினர் வீடுகளுக்கோ சென்றுவருவது சாலச்சிறந்தது. இதன் மூலம் பல நீண்டகால சுவாரஸ்யமான சம்பவங்கள் மீட்கப்படுகின்றன. புதிய உறவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நித்திரை முதியவர்களுக்கு இன்றியமையாதது. ஆனால் இந்தநித்திரை தொடர்ச்சியாக பலமணித்தியாலங் களுக்கு அவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக சில சில மணித்தியாலங்களாக பலமுறை அவர்கள் படுத்துறங்குவதுண்டு. எனவே முதியவர்கள் பகல்துாக்கம் கொண்டால் அது சாதாரண சுகமான தூக்கமே.நித்திரைகொள்வதற்கு அவர்களுக்கு ஒரு அமைதியான கழலும் நேரமும் ஒதுக்கப்படவேண்டும்.

குழந்தைகளுக்கு எவ்வாறு ஒரு சீரான உணவு வளர்ச்சிக்கு அவசியமோ அதுபோன்று ஒரு சரியான போசணையான உணவு முதியவர்களுக்கு தேவைப் படுகின்றது. குறிப்பாக புரத உணவு இன்றிமையாதது.விற்றபமின் B12, விற்றமின் D என்பன குறிப்பாக வயது முதிர்ந்தவர்களிடம் தேவைக்கு குறைவாக காணப்படுவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே மேலதிக விற்றபமின்களும் கனியுப்புக்களும் நிறையுணவுடன் சேர்க்கப்படவேண்டும். எனவே மன அழுத்தம் என்பது முதுமையால் உடலில் ஏற்படும் உபாதைகளுக்கும் மற்றும் பல நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்கும் எமது குடும்பத்தின் தூண்களான மூத்த உறுப்பினர்களுக்கு ஒரு நேர்மாறான விளைவை ஏற்படுத்துகின்றது.

இதை மிக இலகுவாக கண்டுபிடிப்பது என்பது சிரமம். அப்படி கண்டறிந்தாலும் அதற்குசிகிச்சை அளிப்பது ஒரு சவாலான காரியமாகும். ஆம், மன அழுத்தம் குடும்பத்தின் மற்றைய அங்கத்தவர் வாழ்விலும் பாரிய தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. எனவே குடும்ப அங்கத்தவர்கள் தான் இதில் உரிய அக்கறை செலுத்தி தமது அன்புக்குரியவர்களின் ஓய்வான காலங்கள் வளமாக இருப்பதற்கு வழிவகை செய்யவேண்டும்.
photo
வைத்திய கலாநிதி திருநாவுக்கரசு குமணன்
பொது வைத்திய நிபுணர்.

Related posts

இதில் நீங்க எப்படி தூங்குவீங்கன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ஒரு விஷயத்தை சொல்றோம்..

nathan

ஒவ்வொரு தாயும் தன் மகனுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

இந்த மாதிரி இருக்குறவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா…

nathan

உங்களுக்கு தெரியுமா மாதுளை இலைகளும் மருந்தாகும்..

nathan

அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

nathan

எப்போதும் கவலைப்படுகிறீர்களா? சிறப்பான தீர்வு!…

nathan

இதோ 5 சூப்பர் டிப்ஸ்! எதிர்மறை சிந்தனை அதிகமா வருதா? நேர்மறையா சிந்திக்க ஆசையா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பமாக இருந்தால் கத்திரிக்காயை சாப்பிடலாமா?

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan