நமது சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இடம்பெறும் இன்றியமையாத பொருள்.
மணம்.. குணம்.. ஆரோக்கியம்.. சக்தி தரும் கடுகு
கடுகு, நமது சமையல் அறையில் உள்ள அஞ்சறை பெட்டியில் இடம்பெறும் இன்றியமையாத பொருள். சமையலில் கடுகு பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. நாம் பெரும்பாலான உணவுகளை தாளித்தே சாப்பிடுகிறோம். தாளிப்பதற்கு முக்கிய பொருளாக திகழ்வது கடுகுதான்.
இது உணவுக்கு நல்ல சுவையையும், மணத்தையும் அளிக்கிறது. கடுகு பொரியும்போது கொழுப்பு அமிலங்கள் வெடித்து வெளியேறும். அவை ஜீரணத்திற்கு மிகவும் துணைபுரிகின்றன.
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையது!’, ‘கடுகு சாப்பிடாதவன் கிடுகு’ என்றெல்லாம் கிராமங்களில் சொல்வார்கள். ‘கிடுகு’ என்றால் ‘பலமில்லாதவன்’ என்று அர்த்தமாம்!
கடுகு உடலுக்கு தேவையான உஷ்ணத்தை கொடுக்கும். உடலில் அதிகரிக்கும் வாதம் மற்றும் கபத்தை குறைக்கும்.
இது செடி வகையை சார்ந்தது. ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். மஞ்சள் நிறத்தில் பூக்கும். அந்த பூவில் இருந்து கடுகு விதை தோன்றும். வெள்ளை, மஞ்சள், கறுப்பு ஆகிய மூன்று நிறங்களில் கடுகு உள்ளது. கறுப்பு வகையையே உணவில் அதிகம் பயன்படுத்துகிறோம்.
கடுகில் செலினியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்கள் உள்ளன. கடுகில் இருக்கும் கந்தக சத்தால் இருவித பலன்கள் கிடைக்கின்றன. இது உணவுக்கு மணத்தை தரும். உடலுக்கு சத்தை தரும்.
கடுகில் புற்றுநோய் எதிர்ப்புதன்மை உள்ளது. சிறுநீர் பிரிவதை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான வெப்பத்தை தந்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும். காலையில் ஒரு சிட்டிகை கடுகு, ஒன்றிரண்டு கல் உப்பு, ஐந்து மிளகு சேர்த்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால், விஷகடியால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை, தோல் நோய்கள் நீங்கும். ஜீரணம் தூண்டப்பட்டு, உடலில் உள்ள நஞ்சுகள் வெளியேறும்.
சிலருக்கு தலை அவ்வப்போது கனமாகும். இருமலுடன் வாந்தி, தலைசுற்றல் போன்றவைகளும் தோன்றும். இந்த பாதிப்பு கொண்டவர்கள் ஒரு தேக்கரண்டி கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிடவேண்டும். இது தலைவலி, மூக்கில் நீர்வழிதல் போன்றவைகளை கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்கும் இது ஏற்றது.
கடுகு, தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் திறன்கொண்டது. அதனால்தான் இதனை ஊறுகாய் வகைகளில் அதிகம் சேர்க்கிறோம்.
கண்களுக்கு கீழே சிலருக்கு நீர்கோர்த்து உப்பி காணப்படும். அதற்கு ஒரு தேக்கரண்டி அளவு கடுகை அரைத்து, அத்துடன் கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி கலந்து முகத்தில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் நன்கு தேய்த்து கழுவினால் முகம் பளிச்சிடும். கண்களுக்கு கீழ் நீர் உப்பியிருப்பதும் குறையும்.
படர்தாமரை மற்றும் தோல் நோய் இருப்பவர்கள் கடுகையும், இன்னும் சில பொருட்களையும் அரைத்து அதில் பற்று போடவேண்டும்.
கடுகு பற்று தயாரிக்கும் முறை:
இரண்டு தேக்கரண்டி கடுகை தூளாக்கி, அத்துடன் ஒரு தேக்கரண்டி அரிசிமாவு கலந்து களி மாதிரி கிளறி சுத்தமாக வெள்ளை துணியில் தடவி நெஞ்சு, விலா மற்றும் முதுகு பகுதிகளில் பற்றுபோடவேண்டும். ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சிரைப்பு குறையும். கபம் வெளியேறும். இதை மூட்டில் ஏற்படும் வீக்கங்களுக்கும் பயன்படுத்தலாம்.
சுளுக்குக்கும், அடிப்பட்டதால் ஏற்படும் வீக்கங்களுக்கும் கடுகை, மஞ்சளுடன் அரைத்து பற்றுபோடவேண்டும்.
கடுகில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்க உதவும்.
கடுகு எண்ணெய்யை உடலில் தடவி குளிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும் தருணத்தில் உடல் வலி தோன்றும். அப்போது இந்த எண்ணெய்யை உடலில் தேய்த்து குளித்தால் வலி நீங்கும். வயிறு, தொடை, இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பும் கரையும்.
வட இந்தியாவில் கடுகு கீரையை குளிர்காலத்தில் விரும்பி சாப்பிடுகிறார்கள். கடுகை தண்ணீரில் ஊறவைத்து, முளைகட்டவிட்டு காய்கறி சாலட்டுடன் கலந்து சாப்பிடவேண்டும். இது சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த உணவாகும்.