நீண்ட நாட்கள் பொருள்கள் கெடாமல் இருக்க வேண்டுமா? அதற்கான உபயோகமான சமையல் டிப்ஸ் உங்களுக்காக.
சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது அதோடு நீர்த்தும் போகாது. இஞ்சியின் தோலைச் சீவி, நீரில் அலசி சுத்தம் செய்து தயிரில் போட்டால் நீண்ட நேரம் தயிர் புளிக்காமல் இருக்கும். ரவா, மைதா உள்ள டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராது.
உடைத்த தேங்காயை கழுவிவிட்டு பிரிட்ஜில் வைத்தால் பிசுபிசுப்பு ஏற்படாமல் இருக்கும். காய்ந்த மிளகாயை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் நெடி வராது. பச்சை மிளகாயின் காம்பை நீக்கி நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும்.
அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக்கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும். கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையென்றால் பிரெட்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் அரைத்து உபயோகிக்கலாம்.