10 1515562804 3
மருத்துவ குறிப்பு

நீச்சல் அடிப்பதால் என்னென்ன நோய்கள் குணமாகும்னு தெரியுமா?

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொண்டால், வருங்காலத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வாழலாம் என்பது மூதோர் வாக்கு, கைத்தொழில் போலவே, நீச்சல் அறிந்த ஒருவர், வாழ்வில் தன்னம்பிக்கையுடன் வாழமுடியும். தினமும் உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லாதவர்கள், அடிக்கடி நீச்சல் மேற்கொண்டாலே, உடற்பயிற்சி மூலம் அடையும் எல்லா உடல் நலனையும் பெற்று நலமுடன் வாழலாம். நீச்சல் அறிந்தவர்கள் மற்றவர்களைவிட, நெடுநாட்கள் நலமுடன் வாழ்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

உடற்பயிற்சிகளைவிட, சிறந்ததாகத் திகழ்கிறது, நீச்சல். உடலின் அனைத்து பாகங்களும் நீச்சலின் போது இயங்கி, உடலின் அனைத்து உறுப்புகளையும், வலுவாக்குகிறது. பல்வேறு வியாதிகளின் பாதிப்புகளைக்குறைக்கிறது.

உலகில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழ்ந்திருந்தாலும், அநேகம் பேருக்கு நீச்சல் தெரிவதில்லை என்பதுதான் உண்மை. நகரங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் நீச்சல் பயிற்சி இன்றியே, இருக்கிறார்கள். நீச்சல் என்பது நீர்நிலைகளில் நீந்த மட்டும்தான், என்ற ஒரு அறியாதமனநிலையும் காரணமாக இருக்கலாம், நீச்சல் அத்தியாவசியமான ஒன்று, உடல் நலம் காப்பதில் அது தனிப்பங்கு வகிக்கிறது, மேலும் நீச்சல் என்பது மார்ஷியல் ஆர்ட்ஸ் எனும் தற்காப்புக்கலைக்கு நிகரானது, அந்தக்கலைகளைக் கற்றவர்கள் எப்படி, தன்னம்பிக்கையுடன் திகழ்வார்களோ அதுபோன்றே, நீச்சல் அறிந்தவர்களும் தன்னம்பிக்கை பெற்று திகழமுடியும் என்கிறார்கள், வல்லுனர்கள்.

பொதுவாக கிராமங்களில் உள்ள சிறுவர் சிறுமியர் எல்லோரும் நீச்சல் அறிந்திருப்பார்கள். அதற்கு காரணம், அநேக கிராமங்களில் ஆறு, குளம், ஏரி, வாய்க்கால் மற்றும் கிணறு போன்ற நீர்நிலைகள் மிகுந்து இருப்பதுதான். நகரங்களில் இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை, செயற்கை நீச்சல் குளங்களில் நகரத்து இளைஞர்கள் பயிற்சி பெற்றாலும், அவர்கள் வெளிப்புற நீர்நிலைகளில் இறங்கி, நீச்சலடிக்க அச்சம் கொள்கின்றனர் என்பதே உண்மை. நகரங்களில் உள்ள நீச்சல் குளங்களில், பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுப்பார்கள், கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள், நன்கு நீச்சல் அறிந்தவர்கள் துணையுடன் கற்றுக்கொள்ள, விரைவில் நீச்சல் வசப்படும்.

நீச்சல் பழக சிறந்த நீர்நிலை எது? தண்ணீரில் கரண்ட் எனும் நீரோட்டம் இல்லாத நீர்நிலைகளில்,ஆரம்ப பயிற்சியை மேற்கொள்ள எளிதாக இருக்கும். கிராமங்களில் உள்ள குளங்கள் ஆரம்ப நீச்சலுக்கு ஏற்றவையாகும். முதன்முறையாக நீச்சல் பழகுபவர்கள் நீச்சல் அறிந்தவர்களின் கைகால்கள் அசைவை கவனித்து, அதுபோல பயிற்சிசெய்துவரவேண்டும். ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல், இடுப்பளவு நீரில், முதலில் நீச்சல் பழகவேண்டும்.

பழகும் முறை : நீச்சல் பழகும்போது, தலை நீருக்கு மேலேயே இருக்கவேண்டும், காதுகளில் தண்ணீர் புகாதவண்ணம் கவனமாக இருந்து, இரு கைகளையும் படகுகளின் துடுப்புகள் போல நன்கு அசைக்க, உடலின் இயக்கம் முன்னோக்கி செல்லும். நாம் தரையில் நடக்க கால்கள் உதவுவதைப்போல, நீரில் நீந்த கைகள் முக்கியமாகின்றன.

நீச்சல் அறிந்தவர்கள், தங்கள் கைகளில், நீச்சல் பழகுபவர்களை இருத்திக்கொண்டு, கைகால்களை அசைக்கவைப்பார்கள், இதுபோல, சிறிதுநேரம் பயிற்சி பெற்றதும், சட்டென தாங்கிய கைகளை விட்டுவிடுவர். பயிற்சியாளரின் கைகளின் துணையில் நீரில் கை கால்களை அசைத்தவர்கள், பிடிமானம் விலகியதும், அனிச்சைசெயலாக, தங்கள் கைகால்களை வேகமாக அசைப்பார்கள். ஆயினும் சிலர் பதட்டத்தில், தண்ணீரைக்குடித்து விடுவார்கள். இதை கவனித்துக்கொண்டிருக்கும், பயிற்சியாளர்கள், மீண்டும் வந்து தாங்கிக் கொள்வார்கள். இதுபோல, சில நாட்கள் பயிற்சிகள் மேற்கொள்ள, விரைவில் நீச்சல் பழகி விடும். ஆயினும், நன்கு தேர்ச்சி அடையும் வரை, குறிப்பிட்ட தூரத்திலேயே நீந்தி வருவது நலமாகும். ஆழமான பகுதிகளுக்கு சென்று நீச்சல் பழக விருப்பம் வரும்போது, தக்க துணையுடன் செல்வதே, நன்மைதரும்.

குளங்கள் போன்ற நீரோட்டம் இல்லாத நீர்நிலைகளில் நீச்சல் பழகியபிறகு, ஆற்றில் நீச்சல் அடிக்க விருப்பம் கொள்வது இயற்கைதான், ஆயினும் அந்த நீரோட்டத்தை அறிந்தபின், நீச்சல் அடிப்பது நலமாகும். ஆற்றில் உள்ள நீர்ப்போக்கின் திசை அறிந்து, அந்த திசையில் நீச்சல் அடிக்க வேண்டும். அப்போது, இலகுவாக, நீரில் முன்னேற முடியும். நீரோட்டம் இருக்கும் ஆறுகளில், விரைவாக அதிக தொலைவு உடனே சென்றுவிட முடியும். அங்கிருந்து, நாம் புறப்பட்ட இடத்திற்கு திரும்ப வருவதற்கு, எதிர்நீச்சல் எனும், நீரோட்டத்தின் திசைக்கு மாறான நீச்சல் அடிக்க வேண்டும். இது சிரமமாக இருக்கும், நீரோட்டத்தோடு இலகுவாக வேகமாக சென்றவர்கள், திரும்பவரும்போது, சிரமப்படுவார்கள், கைகளை வேகமாக அசைத்துக்கொண்டு, கால்களை நீரின் மேற்புறத்தில் நன்கு வீசிக்கொண்டு முன்னேற வேண்டும். இப்படி நீந்தப்பழகி, கரைகளை எட்டிவிட்டால், மனதில் உற்சாகம் பொங்கும். உடற்பயிற்சி இல்லாமல், கை கால்களை மடித்து உட்கார சிரமப்பட்டவர்கள், நீச்சலின் மூலம், தங்கள் கை கால்கள் இலகுவாகி, மடக்கி நிமிர்த்த முடிவது கண்டு மகிழ்ந்து, உடலில் புதுஇரத்தம் பாய்ந்தது போன்ற, உற்சாகத்தை அடைவார்கள்.

இந்த அளவுக்கு உள்ள நீச்சல் பயிற்சி இருந்தாலே, உடல் நலம், மன வளம் மேம்படும், ஆயினும் சிலருக்கு டைவ் அடிக்க வேண்டும், நீரில் மிதக்க வேண்டும் என்பது போன்ற ஆவல்கள் ஏற்படும். ஆறுகளின் பாலங்கள் மேல் நின்றுகொண்டு, பாலத்தில் பேருந்து அல்லது கார் போன்றவை வரும்போது, ஆழமாக நீர் நிறைந்து இருக்கும் இடங்களின் மேல் தலை குப்புற டைவ் அடிப்பது என்பது, அக்கால சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிறந்த பொழுதுபோக்காக இருந்தது. இவர்கள் பாலத்தில் இருந்து நீரில் குதிக்கும்போது எழும் நீர்த்திவலைகள் பாலத்தின் மேற்புறம் வரை எழும்பி, பாலத்தில் செல்லும் பேருந்து, கார் போன்றவற்றின் மீது தெளிக்கும்போது இடும் உற்சாகக்கூக்குரலை இரசித்தபடியே, பயணம் செய்வோரும் தங்கள் இளம்வயது ஞாபகத்தில், பாலத்தைக் கடப்பார்கள்.

கடலில் நீச்சல் அடிப்பது பாதுகாப்பானதா சிலருக்கு கடலில் நீச்சல் அடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். ஆனால், கடல் நீச்சல் என்பது முற்றிலும் வேறுபட்டது. ஆறு, குளம் போன்ற தன்மைகளில் இல்லாமல், அதிக சுழல் மற்றும் நீரோட்டம் கொண்டது. கடலின் ஆழம் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும், சில கடற்கரைகளில், ஆழம் குறைவாக இருக்கும், சில கடற்கரைகளில், ஆழம் சிறிது தொலைவிலேயே அதிகமாகும் அத்துடன் அலைகளும் இணைந்து, நீச்சல் அடிப்போரை, வெகு தூரம் கொண்டுபோய்விடும் என்பதால்,கடலில் நீந்தும் முயற்சிகளில், தக்க துணையுடன் செல்வதுடன், தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்வதே, விவேகமானது.

நீச்சல் பயிற்சி உடலுக்கு உரமூட்டுவது மட்டுமன்றி, மனதுக்கும், உற்சாகம் அளிக்கக்கூடியது. நீச்சல் பழகிவிட்டால், சீக்கிரம் கரையேற மனம் வராது, சிறுவர்கள் போல, வெகுநேரம், நீரில் கிடக்கத்தோன்றும்.

நீச்சலின் நன்மைகள்: மலச்சிக்கல் பாதிப்புகளைப்போக்கும், செரிமான ஆற்றலை அதிகரித்து, பசியைத் தூண்டும் தன்மைமிக்கது. குளித்தவுடன், வெகுவாக பசிக்க ஆரம்பிக்கும்.

கொழுப்பு குறையும் : பருத்தவயிறு கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீச்சல், சிறந்த பயிற்சியாகும், இதன்மூலம், உடலிலுள்ள நச்சுக்கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைகிறது. உடலின் உள் உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு சிறந்த பயிற்சி ஆதலால், உடல் இயக்கச்செயல்கள் சீராகின்றன.

மூட்டு வலி விலகும் : உடலின் மொத்த எடையையும் தண்ணீரே தாங்குவதால், கால்மூட்டுக்களும் தசைகளும் இலகுவாகி இயங்குவதன் மூலம், மூட்டுவலி மற்றும் கழுத்துவலி, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் விலகுகின்றன.

மன அழுத்தம் குறையும் : மனக்குழப்பம், கவலை, மனஅழுத்தம் போன்ற மனநல பாதிப்புகள் மற்றும் மனவேறுபாடு போன்ற பாதிப்புகள் நீங்கி, மனம் ஒருமையாகி, சிந்தனைத் திறன் மேம்பட்டு, மனநல பாதிப்புகள் சரியாகி, மனதில் புத்துணர்வு தோன்றும்.

உடலை வலுவாக்கும் : இரத்தஓட்டத்தை மேம்படுத்தி, இதயம், நுரையீரல் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளையும் வலுவாக்குகிறது, நீச்சல்.சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைத்து, உடல் நலம் காக்கிறது.

வலிகள் குணமாகும் : தொடை, கைகளில் உள்ள தளர்வுகள் நீங்கி, தசைகள் இறுகி, உடல் வனப்பாகிறது. உடலில் உள்ள இதர பாதிப்புகள் மற்றும் வலிகள் குணமாகிறது.

மெனோபாஸ் குணமாகும் : பெண்களின் பருவமாற்ற நிலையான மெனோபாஸ் காலங்களில், உடல் சோர்வு, மனதில் வெறுப்பு, எதிலும் ஈடுபாடில்லாதநிலை மற்றும் கவலை போன்றவை ஏற்படக்கூடும், இந்த பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வை, நீச்சல் கொடுக்கும். தினமும், சிறிது நேரம், நீச்சல் பழகுவதன் மூலம், மனம் இலேசாகி, கிடைக்கும் புத்துணர்வில், உடலின் இயல்பான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டு உண்டாகும் உற்சாக மனநிலையால், குடும்பத்தாரும் நண்பர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

தொப்பை குறைய : அதிக உடல் எடை மற்றும் தொப்பை உள்ளவர்கள், தினமும் நீச்சல் மேற்கொள்ள, உடல் தளர்வாகி, நச்சுக்கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறைந்து, உடலில் வலிமை ஏற்படும். நீச்சல் மனதுக்கு புத்துணர்ச்சி அளித்து, மன அழுத்த பாதிப்புகளை சரிசெய்து, புது உற்சாகத்தை அளிக்கிறது.

தற்காப்புக் கலை : நீச்சல் பழகியதன் மூலம், ஒரு சிறந்த தற்காப்புக்கலையைக் கற்று தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டு, மனதில் உற்சாகமும் செயல்களில் தெளிவும் ஏற்படும். நீச்சல் என்பது உடலின் அனைத்து உறுப்புகளும் ஒருங்கே செயல்படும் ஒரு சிறந்த உடற்பயிற்சி.

நீச்சல் அடிக்க பயப்படுபவர்கள், முழங்காலளவு நீரில் நின்றுகொண்டு, கைகளின் மூலம், உடலைத்தாங்கும் சில பயிற்சிகள் செய்துவர, கால் மூட்டு வலிகள் மற்றும் கழுத்து வலிகள் நீங்கும். உடல் நலம் பெறும்.10 1515562804 3

Related posts

பெண்களுக்கான சுகாதார குறிப்புகள்

nathan

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதை தடுக்கணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்கள் மண்ணீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால்… என்ன பிரச்சனை!

nathan

தாய்மை அடைவதற்கான சரியான வயது

nathan

“எத்தனை நாளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்துவது’

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்களது ரத்த பிரிவு என்ன?… உடல் எடையைக் குறைக்க இந்த மாதிரியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

nathan

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்!

nathan

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

nathan

உங்கள் கவனத்துக்கு கல்லீரல் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!

nathan