26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
11
ஆரோக்கிய உணவு

நல்ல சோறு – 1–சிறுதானிய உணவுகள், உணவே மருந்து!

‘நீங்கள் யார்..?’
இந்தக் கேள்விக்கு உங்கள் பெயரையோ, வீட்டில், அலுவலகத்தில் நீங்கள் வகிக்கும் பொறுப்பையோ பதிலாகச் சொல்லக் கூடாது. உங்கள் வசதி, திறமை, பாலினம், சமூக அந்தஸ்து எதையும் சொல்லக் கூடாது. இப்போது சொல்லுங்கள்… ‘நீங்கள் யார்?’
நீங்கள் உண்ணும் உணவுதான் நீங்கள்!
ஆம்… உங்கள் உடம்பின் ஒவ்வோர் அணுவும் உறுப்பும் செயல்பட சக்தியளிப்பது நீங்கள் உண்ணும் உணவுதான்.
உடல் வளர்த்து, உயிர் வளர்க்க, உண்ணும் உணவே அடிப்படை. ஆரோக்கியமான உணவு என்பது, ஆடம்பரம் அல்ல; அத்தியாவசியம். நவீன வாழ்க்கை முறை நம்மை அனைத்திலும் வேகப்படுத்திக்கொண்டு இருக்கிறது. ருசித்து, ரசித்து சாப்பிட்ட காலங்கள் கடந்து, மறந்து… இப்போது துரித உணவுகளில் உயிர் வாழ்கிறோம். ஆனால், பல நூறு ஆண்டுகளாகப் பழகியிருக்கும் உணவுப் பழக்கத்தில் இருந்து வேறுபட்டு, சமீபமாக தன்னிடம் வந்துசேரும் புதிய உணவுத் துணுக்குகளைக் கண்டு பதறுகிறது நம் செரிமான அமைப்பு. நமது புற உலகின் பதற்றங்களுக்கு உள் உறுப்புகளால் ஈடுகொடுக்க முடியாதபோது அவை ஒவ்வாமைகளாகவும் நோய்களாகவும் வெளிப்படுகின்றன. உணவின் மீது பல மடங்கு கவனத்துடனும் கரிசனத்துடனும் இருக்கவேண்டிய காலம் இது. உலகத்தை உணவு அரசியல் ஆட்சி செய்யும் நிலையில், நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சோற்றின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். அந்த ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ளவும் திட்டமிடவும் இனி வழிகாட்டும் ‘நல்ல சோறு’. நளபாகத்தில் எவையெல்லாம் நல்லவை என வாராவாரம் பரிமாறும் ‘நல்ல சோறு’!

1

கோடை விடுமுறை வந்தாச்சு. நம் பள்ளி நாட்களில் இந்த விடுமுறை நாட்களை எவ்வளவு ஆனந்தமாகக் கொண்டாடினோம். ‘வெயில்ல போகாத… சன் ப்ளாக் வந்துரும். கறுத்துப் போயிடுவ’ என்கிற எந்தத் தடைகளும் நமக்கு இருக்கவில்லை. ‘விடுமுறையை எதுக்காக வேஸ்ட் பண்ணணும்? ஏதாவது கிளாஸ் சேர்ந்துக்கோ’ என லன்ச் பாக்ஸோடு பூட்டப்பட்ட அறைகளுக்குள் நம்மை யாரும் அடைக்கவில்லை. அப்போது விடுமுறையிலும்கூட அட்டவணையிடப்பட்ட நாட்களுக்குள் நாம் வாழவில்லை. பறவைகளுக்கும் நமக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்ததா அன்று?! ஆனால், இன்று?
‘நோய் பற்றிய விழிப்புஉணர்வு எல்லாம் அன்றைக்கு இல்லை; இன்று இருக்கிறது. வெயிலில் அலைந்தால், கண்ட உணவையும் சாப்பிட்டால் நோய் தாக்கும். குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும். அதற்காக சில விஷயங்களை நாம் செய்யத்தான் வேண்டும்’ எனக் குழந்தைகளை கூண்டுக்குள் அடைப்பதற்கு காரணம் சொல்லப்படுகிறது. ஒரு விநாடி யோசித்துப்பாருங்கள். நெல்லிக்காய், இலந்தைப்பழம், மாங்காயில் ஆரம்பித்து, பள்ளியின் வெளியே பாட்டியம்மா விற்கும் எல்லா தின்பண்டங்களையும் நாம் வாங்கிச் சாப்பிட்டோம். நமக்கு எத்தனை முறை காய்ச்சல் வந்திருக்கிறது? இன்றைக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டாலே, காய்ச்சல் வந்து ஒரு வாரம் படுத்துக்கொள்ளும் குழந்தைகளோடு ஒப்பிடும்போது, நாம் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்?

2

ஹெல்த்தி ஸ்நாக்ஸ்’ என லன்ச் பாக்ஸில் குழந்தைகள் கொண்டுசெல்லும் எதையும் நாம் தூக்கிச்சுமந்தது இல்லை. ஆனாலும் நாம் ஆரோக்கியமாக இருந்தோம். ஆனால், இன்று குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸில் தஞ்சம் புகுந்திருக்கும் பாக்கெட் சிப்ஸ், நூடுல்ஸ், பிரெஞ்சு ஃப்ரைஸ் என வறுத்த, பொரித்த உணவுகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கொஞ்சம்,
கொஞ்சமாக அவர்களிடம் இருந்து பிடுங்கிக்கொண்டிருக்கிறது. அந்த விபரீதத்தை அறிந்தும் நாம் அதை அனுமதித்துக்கொண்டிருக்கிறோம்.
‘கேழ்வரகு, தினை எல்லாம் எங்களாலேயே சாப்பிட முடியலை. குழந்தைங்க எப்படிச் சாப்பிடும்? பருப்பு சாதம் கொடுத்தாலே அவன் துப்புறான்’ என்கிற அங்கலாய்ப்பில் நியாயம் இல்லை. இன்றைய எல்லா நோய்களுக்கும், நம் உணவுப்பழக்கம்தான் காரணம் என நவீன மருத்துவமே ஒப்புக்கொண்ட பிறகும் அதை மாற்றிக்கொள்வதில் நமக்கு என்ன தயக்கம்?
ஆறு வயது குழந்தையை மடியில் இருத்தி, ‘நீ பொய் சொல்லக் கூடாது’ என ஒரு கதை மூலம் சொன்னால், அந்தக் குழந்தை வாழ்நாள் முழுக்க அதை நினைவில் வைத்திருக்கும். அதே குழந்தையை மடியில் இருத்தி கேழ்வரகு லட்டை சாப்பிடக் கொடுத்தபடி, ‘நம் பாரம்பர்ய உணவில் என்னவெல்லாம் சத்துக்கள் இருக்கின்றன, அதைச் சாப்பிட்டால் நம் உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்கும், பாரம்பர்ய உணவுகளைப் புறக்கணித்ததால் நோய்கள் எப்படித் தாக்கின, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் வரும் ஆரோக்கியச் சீர்கேடுகள் என்ன… என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தால், அந்தக் குழந்தைக்கு அது வாழ்நாள் பாடம் இல்லையா? ஒவ்வொரு வீட்டிலும் இதைச் செய்வோம் என முடிவெடுத்தால், அடுத்த தலைமுறை ஆரோக்கியமாகிவிடுமே. கூடவே நம் விவசாயமும் காக்கப்படுமே!
‘பாரம்பர்ய உணவு சாப்பிடச் சொல்றதெல்லாம் சரி. ஆனா, யாருக்கு சமைக்கத் தெரியும்? தினை, சாமை, கேழ்வரகுனு வாங்கி டப்பால அடைச்சு வெச்சு என்ன பண்றது? நல்லது, கெட்டது தெரிஞ்சு ருசியா சமைக்கத் தெரியணும்ல’ என்ற பலரின் விசாரணைகளுக்கு விரிவான பதிலே… இந்தத் தொடர். சத்தான பாரம்பர்ய உணவின் நன்மைகளையும்… அவற்றை எப்படிச் சேகரிப்பது, எப்படிச் சமைப்பது என்றும் தெரிந்துகொள்ளலாம்!
– பரிமாறலாம்… ‘என் பையனுக்கு ஃப்ரைடு ரைஸ்தான் பிடிக்கும். பாஸந்தி விரும்பிச் சாப்பிடுவான். அவனைப் போய் சத்துமாவும், குதிரைவாலி சோறும் சாப்பிடச் சொன்னா எப்படி?’ எனக் குழம்ப வேண்டாம். நம் குழந்தைகள் விரும்பும் அனைத்துவிதமான உணவுகளையும் நம் பாரம்பர்ய தானியங்கள் மூலமே செய்ய முடியும். தேவை, கொஞ்சம் மெனக்கெடலும் ஆர்வமும் மட்டுமே.
மாற்றத்தை நம் வீட்டில் இருந்தே தொடங்குவோம். அன்பும் அரவணைப்புமாக நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் புகட்டுவோம்!
கேழ்வரகு அல்வா
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு 200 கிராம்
வெல்லம் 200 கிராம்
நெய் 100 மி.லி
உப்பு 1 சிட்டிகை
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை
சுக்குத் தூள் 1 சிட்டிகை
முந்திரி தேவைக்கேற்ப
திராட்சை தேவைக்கேற்ப

3

செய்முறை:
வெல்லத்துடன் அரை கப் நீர் சேர்த்து மாவைக் கரைத்துக்கொள்ளவும். அதேபோல் கேழ்வரகு மாவையும் கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். சிறு தீயில் நெய்யைச் சூடாக்கி கேழ்வரகு மாவுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லக் கரைசலை மண்போக அரித்து இதில் கலக்கவும். இந்தக் கலவை சட்டியில் ஒட்டாமல் வரும் வரை சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, ஏலக்காய் தூள், சுக்குத் தூள் சேர்த்தால்… ஆரோக்கியத்துக்கு ‘அல்வா’ தராத அல்வா தயார்!
ஏன் நல்லது?
கேழ்வரகு அல்வா, குதிரைவாலி கீரை ஃப்ரைடு ரைஸ் ஆகியவற்றின் பலன்களைச் சொல்கிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி.

4

கேழ்வரகு அல்வா
”கேழ்வரகில், கால்சியம் சத்து மிக அதிகம்; கொழுப்பு, சிறிய அளவு புரதம் மற்றும்
மாவுச்சத்தும் உள்ளது. நெய்யில் வைட்டமின் ஏ சத்தும், வெல்லத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் இரும்புச் சத்தும் கிடைத்துவிடுவதால், இது ஒரு சமச்சீரான உணவு. எலும்புகளின் வளர்ச்சிக்கு நல்லது. எளிதில் செரிமானம் ஆகும். கண்ணுக்கு மிகவும் நல்லது. கேழ்வரகு மாவைச் சலிக்காமல் பயன்படுத்துவது சிறந்தது.
நேரடியாக கேழ்வரகை அரைத்துச்செய்வதைவிட, முளைகட்டி காயவைத்து பிறகு அரைத்தால் நல்ல வாசனையாக இருப்பதுடன், உடலுக்கு நல்ல எனர்ஜியும் தரும். குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள அனைவரும் சாப்பிடலாம்.
குதிரைவாலி கீரை ஃப்ரைடு ரைஸ்
சிறுதானியங்கள் அனைத்துமே இயற்கை உரத்தில் வளரக்கூடியவை. இவை வளர்வதற்கு மருந்தோ உரமோ தேவை இல்லை. மழைக்காலத்தில் பயிரிட்டால், தானாகவே வளரும். குதிரைவாலி அரிசியில் தாது உப்புக்கள் மிக அதிகம். ரிபோஃப்ளேவின், தையமின், பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் நார்ச் சத்துக்கள் கிடைக்கும். எனர்ஜியைத் தரக்கூடியது. புரதம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் சிறிய அளவு கொழுப்பும் இருக்கிறது; தவிரவும் பசியையும் தூண்டக்கூடியது. நல்ல செரிமானம் தரும். சிவப்புத் தண்டுக் கீரையில், தாது உப்புக்களும் பீட்டா கரோட்டினும் இருப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. வளரும் குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள்  அனைவரும் சாப்பிட தகுந்த சூப்பர் ரெசிப்பி இது!

குதிரைவாலி கீரை ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி புழுங்கல் அரிசி 200 கிராம்
சீரகம் 1/2 தே.க
எண்ணெய் 5 தே.க
உப்பு      தேவைக்கேற்ப
பூண்டு (நறுக்கியது) 5 பல்
மிளகுத் தூள் தேவைக்கேற்ப
சிவப்புத் தண்டு கீரை (நறுக்கியது) 1/2  கட்டு

5

செய்முறை:
குதிரைவாலி புழுங்கல் அரிசியைச் சுத்தம்செய்து இரண்டு பங்கு நீர் சேர்த்து, உதிரியாக வேகவைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கீரையை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும். கீரை வதங்கியவுடன் வேகவைத்த சோற்றைச் சேர்த்து பிரட்டி மிளகுத் தூள் தூவி இறக்கினால்… சுடச்சுட ஃப்ரைடு ரைஸ் தயார். இதை, தயிர் பச்சடியுடன் சேர்த்துப் பரிமாறலாம் அல்லது உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற குருமாவுடனும் சாப்பிடலாம்!


Related posts

எந்த மீனில் மாசு கலந்திருக்கிறது தெரியுமா?

nathan

சுடு தண்ணீரில் 2 கிராம்பு போட்டு குடிங்க! சளி, இருமலுக்கு உகந்த மருந்து..

nathan

அடேங்கப்பா! பழைய சாதத்தில் இத்தனை மருத்துவ பயன்கள் உள்ளதா…?

nathan

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

nathan

உங்களுக்கு தெரியுமா இதை சாப்பிட்டா குழந்தையின்மை பிரச்சனைக்கு பை பை சொல்லலாமாம்.

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாளை குறி வைக்கும் குளிர் பானங்கள்!

nathan

செரிமான பிரச்சனையை குணமாக்கும் அப்ரிகாட் பழம்

nathan

சோடா, கோலா பானங்கள் குடிப்பதை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்!

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் புளியந்தளிர்

nathan