எப்போதும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வாரம் நண்டு மசாலா செய்து சாப்பிடுங்கள். இந்த மசாலாவானது பேச்சுலர்கள் செய்யுமளவில் மிகவும் ஈஸியாக இருக்கும்.
இங்கு அந்த நண்டு மசாலாவின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து பாருங்கள்.
Bachelors Recipe: Crab Masala
தேவையான பொருட்கள்:
நண்டு – 1/2 கிலோ (சுத்தம் செய்து கழுவியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
இஞ்சி பூண்டு விழுது – 3/4 டீஸ்பூன்
சீரகப்பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பிறகு அத்துடன் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் கழுவி வைத்துள்ள நண்டுகளை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.
பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி பிரட்டி, தண்ணீர் சுண்டும் வரை அடுப்பில் வைத்து நண்டுகளை வேக வைக்க வேண்டும்.
தண்ணீரானது சுண்டியதும், அதில் சீரகப் பொடி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி இறக்கினால், நண்டு மசாலா ரெடி!!!