தற்போதுள்ள பல தம்பதிகள் பணம் செலவானாலும் பரவாயில்லை சிசேரியன் செய்துக் கொள்கிறோம் என கூறுகின்றனர்.
சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை
சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.
சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது தற்காலிகமாக வலி இல்லாமல் இருக்க உதவும்.
சிசேரியன் ஆன பெண்கள், புரோபயாடிக் உணவுகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் இருந்து கிடைக்கும் நல்ல பாக்டீரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை வலிமையடைய செய்கிறது. தயிர் ஓர் சிறந்த புரோபயாடிக் உணவு. சிசேரியன் செய்த பெண்கள் ஊட்டச்சத்துக்களில் நிறைய கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வைட்டமின் சி மற்றும் புரதம் நிறைந்த உணவுகள்.
சிசேரியன் செய்ததால், கீறல்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கும். எனவே, அந்த இடத்தில் அதிக அழுத்தம் தராமலும், தொற்று ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முக்கியமாக குளிக்கும் நீரினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிசேரியன் என சொல்லிக் கொண்டு படுக்கையில் படுத்துக் கொண்டே இருக்க வேண்டாம். நேரம் கிடைக்கும் போது கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உடலில் இரத்த கட்டிகள் உண்டாகாமல் இருக்க உதவும்.
பிரசவத்திற்கும், முன்னும், பின்னும் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக சிசேரியன் செய்த பெண்கள் உட்கார்ந்து எழுந்து மலம் கழிக்க முயற்சிக்கும் போது அழுத்தம் அதிகரித்து இரத்த கசிவு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, உதவிக்கு ஸ்டூல் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், மறவாமல் நார்ச்சத்து உணவுகள் உட்கொள்ளுங்கள் இது, மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது. இது சிசேரியன் செய்த இடத்தில் அதிக வலியை உண்டாக்கும்.
சிசேரியன் செய்த பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது வலி அதிகமாக இருக்கும். இது சிசேரியன் செய்த 18 மாதங்கள் வரை கூட இந்த பிரச்சனை இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.