எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. இவற்றுக்குத் தீர்வு, நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி. சளி, இருமல் இதற்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.
இளம் மற்றும் நடுத்தர வயதினரிடையே `Functional foods’ என்ற வார்த்தை மிகப் பிரபலமாகிவிட்டது. விதவிதமாக கூட்டு, பொரியல் செய்து சாப்பிடுவதெல்லாம் இன்றைக்குப் போய்விட்டது. `பி.எம்.ஐ, பி.எம்.ஆர் குறைய என்ன செய்யலாம்?’, `பி.பி கூடாமல் இருப்பதற்கு வழி என்ன?’ என்பதையெல்லாம் கூகுளில் தேடுவது அதிகமாகிவிட்டது. அறிவியலின் நீட்சியும், இணையத்தின் வீச்சும் இதற்கு முக்கியக் காரணங்கள். இதில் எதிர்பாராத ஒரு பக்கவிளைவு, பழைய சமையல் பழக்கம் எல்லாம் சத்தில்லாதது என்கிற பொய் ஜோடனை உருவானதுதான். நம் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே ஃபங்ஷனல் ஃபுட்ஸ் என்பதுதான் உண்மை. ரொட்டி, கேக், பழத் துண்டுகள் மற்றும் இறைச்சி வகைகளைத் தவிர, பெரிதாக ஏதும் அறியாதது மேற்கத்தியம். தினமும் வைக்கும் நம் குழம்பு, கூட்டு, பொரியலில் இன்றைய அறிவியல் சொல்லும் உணவுக் கூறுகள், இன்னும் முழுமையாகச் சொல்லப்படாத மருத்துவ உண்மைகள் பொதிந்து இருப்பது பலருக்கும் தெரியாது.
எப்போதாவது வரும் சளி இருமல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றலே அதைக் கவனித்துக்கொள்ளும். ஆனால், அடிக்கடி தும்மல், மூக்கடைப்பு, காலை எழுந்ததும் அடுக்குத் தும்மல், நெஞ்சில் சளி, அடிக்கடி தொண்டை கட்டிக்கொண்டால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.
சளி இருமல் போக்க என்ன செய்யலாம்?
* உணவில் நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சில நாட்களுக்குத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், தடியங்காய் (வெள்ளைப் பூசணி), மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை சில வாரங்களுக்குத் தவிர்ப்பது நல்லது. கண்டிப்பாக இவற்றைச் சாப்பிடவேண்டிய சூழல் ஏற்பட்டால், மிளகுத்தூள் தூவிச் சாப்பிடலாம். இதன் மூலமாக சளி, இருமல் தவிர்க்கலாம்.
* பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் கபத்தை (சளி) சேர்க்கக்கூடியவை. இவற்றையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்க்ரீம் வேண்டவே வேண்டாம். பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை தவிர மற்றவற்றைச் சாப்பிடலாம்.
* மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
* குழந்தைக்கு இரவில் மட்டும் இருமல் ஏற்படுகிறதா? நான்கு மிளகை எடுத்து தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகக் கொடுக்கலாம். இருமல் நீங்கி, இதமான தூக்கம் கிடைக்கும். குழந்தை, வெண்பொங்கலில் இருக்கும் மிளகை பொறுக்கி எடுத்துப் போட்டால் செல்லமாக மிரட்டி சாப்பிட வைக்கலாம்.
* பாசிப் பயறு கொஞ்சம் குளிர்ச்சியானது. குளிர்காலத்தில் இரவில் தவிர்க்கவும். ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள், இரவில் வெண்பொங்கல் சாப்பிடுவதைத் தவிர்த்தால், சளி, இருமல் தவிர்க்கலாம்.
* மதிய உணவில் தூதுவளை ரசம், மிளகு ரசம் சேர்ப்பது அவசியம். மதியம் சாப்பிடும்போது, மணத்தக்காளி வற்றலை வறுத்துப்போட்டு, முதல் கவளத்தை சாப்பிட்டுவிட்டு, பிறகு குழம்பு, காய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
* மோர் சளி தராது. எனவே, அதை தாராளமாகச் சாப்பிடலாம். தயிர்தான் நல்லதல்ல. தயிர் செரிமானத்தை மந்தப்படுத்தும். மோர் சீர்ப்படுத்தும். தயிர் கபத்தை வளர்க்கும். மோர், பித்தம் நீக்கி, கபத்தைக் குறைக்க உதவும்.
* திப்பிலியை இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும்.
* காலை காபிக்கு பதில் முசுமுசுக்கை மற்றும் கரிசாலை உலர்ந்த இலைகளைக் கஷாயமாக்கி, பனங்கருப்பட்டி சேர்த்துப் பருகிவந்தால், காலை வேளையில் ஏற்படும் இளைப்பு உடனடியாகக் குறையும்.
* பிரைமரி காம்ப்ளெக்ஸ் நுரையீரல் காசநோய் (Primary Complex – Pulmonary Tuberculosis) இருக்கும் குழந்தைகளுக்கு சத்துமாவு மிக அவசியம். புழுங்கல் அரிசி, பார்லி அரிசி, உளுந்து, கேழ்வரகு, நிலக்கடலை, மக்காச்சோளம், முளைகட்டிக் காயவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முந்திரி, பாதாம் பருப்பு, ஏலக்காய் இவற்றை வறுத்து, மாவாகத் திரித்து சத்துமாவைச் செய்துகொள்ளலாம். கஞ்சி காய்ச்சிய பின் இனிப்புக்கு பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு, சிறிது சுக்குத்தூள் சேர்த்து சூடாக அருந்தக் கொடுக்கவும். அசைவப் பிரியம் உள்ள குழந்தைக்கு, பால் நண்டு சமைத்துக் கொடுக்கலாம்.
உணவு, மருந்துக்கு மாற்றல்ல. மருந்தை விரைவாகப் பணிபுரிய வைக்கவும், நோய் அணுகாமல் தடுத்து வைக்கவும், வந்த நோயை விரைவாக நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு விரட்டவும் உணவால் மட்டுமே முடியும். இதை மனதில்கொள்வது நல்லது.