26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
ld4533
மருத்துவ குறிப்பு

சமூக வலைத்தளங்களால் சங்கடமா? சரி செய்ய 20 பாய்ன்ட்ஸ்!

ஒரு ஞாயிறு காலை. நீங்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் உங்களை அறியாமல் உங்கள் புகைப்படம் ஆயிரக்கணக்கானோர் கைகளில் சிக்குகிறது. உங்களைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவதற்குள் நண்பர்களும் உறவினர்களும் ‘நீ உயிரோடு இருக்கிறாயா?’ என்று மாற்றி மாற்றி தொலைபேசி வாயிலாக கேட்பது ‘ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’ கதைக்குள் தூக்கத்தில் நுழைவது போலத்தான் இருக்கும்! ஒரு மாதம் முன்பே கால் உடைந்து படுத்த படுக்கையாகக் கிடக்கும் உங்களுக்கு இன்று ஒரு விபத்து என்று உங்கள் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸப்பிலும் தகவல் பரவிக் கொண்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1 உடனடியாக உங்கள் போனில் ஃபேஸ்புக்கை அன்இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் கையில் சிரங்கு வந்த குரங்கு போல மனது அலைபாய்ந்து நம்மை குறித்த பதிவுகளை தேடிக் கொண்டிருப்போம். அதிக மன உளைச்சலையே இது தரும். லேப்டாப்பை கொஞ்ச நாள் யாருக்காவது தானம் செய்யலாம். அந்த புண்ணியம் உங்களை வந்து சேரும்!

2 நெருங்கிய நண்பர்களிடம் வாட்ஸப்பில் புலம்பிக் கொள்ளலாம். பாவம். நீங்களும் பெண்தானே? ஆனால், பின்னொரு நாளில் இதே புலம்பல்கள் ஸ்கிரீன் ஷாட்டாக உங்களிடமே திரும்பி வரும் அபாயம் இருக்கிறது. யாரிடமும் பேசாமல் இருத்தல் நலம். மவுன விரதம் இரட்டிப்புப் பலன் தரும் நேரம் இது!

3 உங்களுக்கு வரும் போன் கால்களை தயவு செய்து அட்டன்ட் செய்ய வேண்டாம். ஒரு டெம்பிலேட் மெசேஜ் ‘நான் நலமாக இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை. நானே உங்களை தொடர்பு கொள்வேன்’ என்று தயார் செய்து கொள்ளுங்கள். முதல் கால் கட் ஆனதும் இதை அனுப்பி விடுங்கள். உங்கள் நலனில் அக்கறை உள்ள ஆளாக அந்த நபர் இருப்பின், இதோடு புரிந்து கொண்டு நீங்கள் மீண்டு வரும் வரை காத்திருப்பார்.

4 இதைத் தாண்டியும் அடுத்தடுத்து அதே நபர் உங்களை அழைத்தால், அவர் உங்கள் ஜென்ம விரோதி எனக் கொள்க. பயபுள்ளைய அப்றமா கவனிச்சுக்கலாம்!

5 பாட்டு கேளுங்கள். சோக கீதங்கள் வேண்டாம். இன்னும் சோகத்தை பிழிந்து கிளிசரின் இல்லாமல் கண்ணுக்குப் பயிற்சி கொடுக்கும் ஆசை இருந்தால், கேட்கலாம்!

6 நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு விஷயத்தை தெரியப்படுத்த முகநூலில் ஒரு பதிவு இட்டு விடுங்கள். இல்லையென்றால் உங்கள் நம்பர் இல்லாத நண்பர்கள் உங்களை காப்பாற்றுவதாக எண்ணி உங்களைக் குறித்த தகவலை காத்திருக்கும் வாய்களுக்கு அவலாக கொடுக்கக் கூடும். சிம்பிளாக… ‘என் புகைப்
படம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, என்னை குறித்த தகவல்களை யாருக்கும் தர வேண்டாம்… வதந்தி’ என்று ஒரு நிலைத்தகவலை பதியலாம். அதிலும் உங்கள் ‘அன்பு’ நண்பர் ஒருவர் வந்து பின்னூட்டமாக ‘இது உண்மையா?’, ‘வதந்தி வரும் அளவுக்கு நீ பெரிய ஆளா?’ என்று கேட்டால், அந்த நண்பருக்கு ஒரு பிரச்னை வரும் வரை காத்திருக்கவும். பின் மேலே குறிப்பிட்ட எண் ஒன்றை அவரை அழுத்தச் சொல்லவும்!

7 இன்னொரு டுபாக்கூர் ப்ரொஃபைலை ரெடி செய்யவும். அதிலிருந்து உங்கள் ப்ரொஃபைலை வேடிக்கை பார்த்து தேவையற்ற பதிவுகளை நீக்கவும். முக்கியமாக உங்கள் புகைப்படங்களில் எவை ப்ரைவசி செட்டிங் மாறிப் போய் உங்களை சாவடித்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

8 தேவையற்ற நட்புகளை நீங்கள் நீக்க இதுவே சரியான தருணம். ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது அவர் சார்ந்த நட்புகளோ இதை செய்ததாக நீங்கள் நம்பினால், தயவுதாட்சண்யம் பார்க்காமல் அன்ஃப்ரெண்ட் செய்து விடுங்கள். உண்மையான நண்பர்கள், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என இன்பாக்ஸில் சண்டைக்கு வருவார்கள். அவர்களை ஆழம் பாருங்கள். யார் செய்திருக்கக் கூடும் என்ற உங்கள் ஐயம் குறித்து தெரியப்படுத்துங்கள். அவர் அப்படியும் அசராமல், ‘என் தோழன், என் நட்பு, என் மதம், என் அரசியல் கட்சி, என் மொழி’ என்று பேசினால், தயவு செய்து ப்ளாக் செய்யவும். மான்களின் கூட்டத்தில் குரங்குகளுக்கு வேலை இல்லை. அதிலும் நீங்கள் கவரிமான்! நண்பனை இழப்பீர்கள். முடியை அல்ல!

9 உங்கள் ஒரிஜினல் ப்ரொஃபைலில் கவர் போட்டோ மற்றும் ப்ரொஃபைல் படத்தை மாற்றுங்கள். கவர் படத்தில் அழகான சீனரி, ப்ரொஃபைல் படத்தில் ஒரு முகமூடி, பூ அல்லது பறவை. உங்கள் பெயரை சரித்திர முக்கியத்துவம் பெற்ற பெயராக மாற்றிக் கொள்ளவும்.’ரம்பை ரம்பை, சகுந்தலை தேவி, வந்திய தேவன் (இதற்கும் சாதி சண்டையில் உங்களை நாளை கோர்த்து விடக் கூடும். ஜாக்கிரதை!) போன்ற பெயர்கள் நலம்.

10 முகநூலில் அமைதியாக இருங்கள். எல்லோரும் பேசுவதை வேடிக்கை பாருங்கள். வாயை மூடிப் பேசவும். எந்த குள்ள நரிக் கூட்டமும் உங்கள் பெயரை டேக் செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.

இல்லையெனில் மீண்டும் எங்கேயோ போற மாரியாத்தா உங்கள் மேல் ஏற வாய்ப்புள்ளது!
11 முக்கியமான நான்கு தளங்களைத் தொட வேண்டாம். சாதி, மதம், அரசியல், பெண்ணியம். இவை தவிர, உலக மகா முக்கிய விஷயங்களான எந்த தியேட்டரில் என்ன படம், சேட்டைக்கார குரங்கு, சிரிக்கும் குழந்தை வீடியோக்கள், படங்கள் பகிர்ந்து உங்கள் சமுதாய அக்கறையை ஆத்தோ ஆத்தென்று ஆத்தலாம்!

12 வடிவேலு போல வான்டனாக எந்த சண்டையிலும் போய் சிக்க வேண்டாம். மூத்திரச் சந்து நமக்கு எதற்கு? அடுத்தவர் நிலைத் தகவல்களில் சென்று பின்னூட்டம் இடும் போது ஒரு ‘.’ மட்டும் இட்டுவிட்டு சண்டையை அழகாக நமக்கு வலிக்காமல் வேடிக்கை பார்க்கலாம். உருண்டு புரண்டு வீட்டில் சிரித்துக் கொள்ளலாம்!

13 உங்கள் நண்பனுக்கு நண்பன் நிச்சயம் உங்கள் நண்பன் அல்ல. மியூச்சுவல் ஃப்ரெண்ட்ஸ் என்று வரும் நட்பு அழைப்புகளை ஓரமாக வைத்துக் கொள்ளவும். பின்னொரு நாளில் நீங்கள் ஆசுவாசமான பிறகு, உங்களுக்கு அவர் சுவரைப் பார்த்த பிறகு, நம்பிக்கை வந்தால், சேர்த்துக் கொள்ளலாம்!

14 உங்கள் மனதில் பட்டதை நீங்கள் உங்கள் சுவரில் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். ‘ஒன்லி ஃப்ரெண்ட்ஸ்’ ஆப்ஷனில்தான் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். ‘போஸ்ட்’ என்ற பொத்தானை அழுத்தும் முன், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அதே அணுகுண்டை வெடிக்க வைக்கப் போகிறீர்கள் என்ற எண்ணத்தை நெஞ்சில் இரு(று)த்தவும். அந்த பயம் இருக்கட்டும்!

15 ஒரு வாரம் இப்படியே சென்ற பிறகு உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஞானம் தோன்றும். உங்கள் முகம் உங்கள் தாய்தந்தை உங்களுக்குத் தந்த தனித்தன்மை. அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும். யாரோ ஒரு ஃபேக் ஐடி அல்ல. முகமற்ற ஃபேக் ஐடிகளை எப்படி இனம் காண்பது? உங்களுக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் தந்த நபரின் ப்ரொஃபைலில் சென்று அவரது ‘அபவுட்’ குறித்து படியுங்கள். அதில் ‘லொடுக்கு.பாண்டி.9’ என்று ஃபேஸ்புக் பெயரும், அவரது ப்ரொஃபைல் பெயர் ‘ஜார்ஜ் பெர்னாட்ஷா’ என்றும் இருந்தால் ‘போ அப்பாலே சாத்தானே!’ என்று ப்ளாக் செய்யுங்கள்!

16 விஷமிகள் வழக்கமாக வதந்திகளை பரப்ப மாவட்டங்கள், ஊர் பெயர்களில் உள்ள ‘கம்யூனிட்டி’ பக்கங்களையே உபயோகிக்கின்றனர். அத்தகைய பேஜ் அட்மின்கள் கவனத்துக்கு உங்கள் பக்கங்களில் நீங்கள் மட்டுமே தகவல் பதியுமாறு செட்டிங்ஸை மாற்றி வையுங்கள் அல்லது நிலைத்தகவலை ‘மாடரேஷன்’ செய்து பதிவேற்றும் வசதியை உபயோகியுங்கள். இல்லையெனில் உங்கள் பக்கம் வத(வா)ந்திகளை பரப்பும் கூடாரம் ஆகிப்போகலாம்! பெண்களே. உங்கள் புகைப்படம் இதுபோன்ற பக்கங்களில் இருந்தால், அந்த அட்மின்களிடம் உங்கள் நண்பர்கள் மூலம் பேசி தகவலை அழிக்கச் சொல்லுங்கள். பக்கங்களை முடக்க முகநூலுக்கு நீங்கள் அளிக்கும் தகவல்களுக்கு அதனிடம் இருக்கும் ஒரே பதில் ‘இந்த நிலைத்தகவல் முகநூலின் சமூக நியமத்துக்கு எதிராக இல்லை. உங்கள் நிலையை நாங்கள் உணர்கிறோம்’. முகநூல் ஓனரின் செத்துப்போன பாட்டனுக்குப் பாட்டனை கல்லறையில் இருந்து தோண்டி எடுத்து திட்டுவதை விட்டுவிட்டு, அட்மின்களிடம் பேசித் தொலையலாம்!

17 கண்டதையும் கண்மூடித்தனமாக பகிரும் ‘ஷேர் கான்’களே! தயவுசெய்து முகநூலிலோ வாட்ஸப்பிலோ ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை ஆராயவும். ஒரு பெண்ணின் புகைப்படம் போட்டு அதனடியில் ‘நான் காதல் திருமணம் செய்து கொண்ட பெண். என்
வீட்டில் எதிர்ப்பு. இது என் திருமணத்துக்குப் பின் முதல் பிறந்தநாள். எனக்கு லைக்ஸ் வருவது கடினம். ஷேர் செய்து வாழ்த்துங்கள் நண்பர்களே’ என்ற வசனத்தைக் கண்டதும் கம்மங்கொல்லையில் புகுந்த காய்ந்த மாடு போல அதை லைக், ஷேர் செய்யாதீர்கள். யாரோ ஒருவன்(ள்) தன் வன்மத்தை அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்துத் தீர்த்துக் கொள்கிறான்(ள்) என்பதை நினைவில் வையுங்கள்.

18 ஹேஷ் டேக் உபயோகிக்கும் முன் கொஞ்சம் நிதானம் தேவை. முகநூல் பதிவுகளில் உங்கள் பதிவை இந்த ஹேஷ் டேக் உபயோகித்தால் அழகாக தேடி எடுத்துக் கொள்ளலாம். கூடுமான வரை இந்த ஹேஷ் டேக் கொண்டு செய்திகள் உலா வந்தால், அவற்றை ஷேர் செய்யும் முன் செய்தியின் உண்மை தன்மையை அறியவும்.

19 ஜான்சி ராணியின் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்தால், போலீஸ், சைபர் க்ரைம் என்று ஹோதாவில் இறங்கலாம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற விஷமிகள் நம் அருகில் மட்டுமே இல்லை. உலகின் எல்லா மூலைகளிலும் நீக்கமற பரவி இருக்கிறார்கள். சட்டை செய்யாமல், ‘என் முகம் என் உரிமை’ என்ற மன தைரியத்துடன் கடந்து போங்கள். உங்கள் மீது நிகழ்த்தப்பட்டிருப்பது ஓர் உளவியல் தாக்குதல் மட்டுமே.

20 இறுதியாக ஆனால், உறுதியாக… உங்கள் கருத்துகளை பொதுவெளியில் எடுத்துச் செல்ல, சமூக அக்கறையுடன் வாழ, சக உயிரி மேல் கருணை கொள்ள உங்களுக்கு முழு உரிமை உள்ளது. உங்கள் முகநூல் பக்கத்தில் அதைப் பதிவிட உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அடுத்தவர் தொகுதிக்கு ஆட்டோவில் பயணிக்கும் முன்னர், உங்கள் ப்ரொஃபைலில் தகவல்கள் பத்திரமாக உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். சண்டைக்கு நம்மை அழைப்பவர் ஃபேக் ஐடி என்றால், ஆட்டோவை திருப்பி ஓடி வந்து விடுங்கள். மத, சாதி ரீதியான சண்டைகளில், தர்க்கங்களில், இரு பிரிவினருக்கிடையே சண்டையைப் பெரிதாக்கவே இந்த விஷப்பாம்புகள் முயல்கின்றன.

வாழ்க்கை என்பது ஒரு சாகசம். யார் வேண்டுமானாலும் வாழ்க்கையை வாழ்ந்து விட்டுப் போகலாம். நம் வாழ்க்கையை ரசித்து வாழ நம்மால் மட்டுமே முடியும். ‘புகைப்படம் பகிர மாட்டேன்’ என்று நாம் மனதுக்குள் அறிக்கை விட்டுக் கொண்டாலும், எங்கோ ஒரு மூலையில், வலைத்தளங்களில் அதன் சுவடை நாம் விட்டுத்தான் சென்றிருப்போம். நாம் வாழ்வது கற்காலத்தில் இல்லை. நிகழ்காலம். சமூக வலைத்தளங்களில் பெண்களின் குரல் இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. என் போன்ற சாமானியப் பெண்களுக்கும் கத்தரிக்காய் கொத்ஸு, ரெட் ரேஜ் லிப்ஸ்டிக் தாண்டிய உலகம் குறித்த சமூக அக்கறை இருக்கிறது.

ஒரு சக உயிரியான பெண் மீது பரிவு இருக்கிறது. சென்னைப் பெருவெள்ளத்தில் வளைகளை விட்டு வெளியேறி சமூக நலனுக்காக தோள் கொடுத்து
உதவிய சில எலிகளில் நானும் ஒன்று. என் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்து நட்புக்கரம் நீட்டிய ஏராளம் பேருடன் நான் கைகோர்க்கவில்லை எனில், ஒருவன் கம்பளி இல்லாமல் டிசம்பர் இரவில் விறைத்துப் போயிருக்கலாம். சேனிட்டரி நாப்கின்கள் கிட்டாத யாரோ ஒரு சிறுமி கூனிக் குறுகி வெள்ள நீரிலேயே தன் குருதியையும் கண்ணீரையும் ஒன்றாகக் கரைத்திருக்கலாம். அப்படியெல்லாம் ஆகவில்லை.

ஏனென்றால், நாம் சமூக நலன் மீது அக்கறையுள்ள ஒரு சமூகம். நல்ல நட்புகள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. கடினமான இந்த அனுபவத்தில் என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டவர்களில் முகம் அறியாத நண்பர்களே அதிகம். என்னைக் காப்பாற்றவும், தேற்றவும், அவர்கள் செய்த உதவியை அறிவேன். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! இந்த பதிவைக் கண்ட பின்னாவது கண்மூடித்தனமான ஷேர்களையும், பெண்களின் முகத்தின் மீதான இந்த உளவியல் வன்முறையையும் ஒருவரேனும் நிறுத்துவாரெனில், அதுவே ஒரு பெண்ணாக என் வெற்றி. மீண்டு(ம்) வந்திருக்கிறேன்! வாழ்த்துங்கள்… வளர்கிறேன்!ld4533

Related posts

உடலுக்கு குளிர்ச்சி தரும் உசிலமரம்

nathan

ஆண்மையை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உண்மையான தகவல்கள்!!!

nathan

வீடுகளுக்கு அவசியமான மின்சார பாதுகாப்பு உபகரணம்

nathan

மனநோயின் அறிகுறிகள்

nathan

ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள்

nathan

குழந்தைகளின் முன்னே பெற்றோர் செய்யக் கூடாத விஷயங்கள்!!

nathan

ஈறு முதல் இதயம் வரை… நலம் பல தரும் அர்ஜூனா!

nathan

பணத்தட்டுப்பாட்டை சமாளிப்பது எப்படி

nathan