தொடர்ந்து ஏசியில் இருப்பவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஒரு நோயுடனும், சோர்வுடனும் இருப்பர்.
ஏ.சி.யிலேயே இருந்தால் நிரந்தர நோயாளி
வெப்பத்தின் பிடியிலேயே சிக்கி தகிக்கும் வாழ்க்கை என இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையாகி விட்டது. வெயிலில் இருந்து வீடு திரும்பியவுடன் நாம் செய்யும் முதல் வேலை மின்விசிறியினை போடுவதுதான். இந்த மிக அடிப்படை வசதி கூட இல்லாமல் வாழ்வது மிகக்கடினம். இந்த மின்விசிறி என்ன நன்மை செய்கின்றது?
வெப்பத்தால் மனிதன் அடையும் எரிச்சலை (மன எரிச்சலையும்தான்) தணிக்கிறது.
* வெப்பத்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு சோர்வடையும். அவ்வாறு சோர்வடையாது காப்பது மின்விறிதான்.
* உடலில் ஏற்படும் வெப்ப தடிப்புகளின் வீரியத்தினை தணிக்கிறது.
* வெப்பத்தினால் உடலில் நீர்வற்றும். உப்பு குறையும். இது ஏற்படாவண்ணம் ஒருவரை மின்விசிறி குளிர வைக்கின்றது.
* வெப்பம், ரத்தக் கொதிப்பினை கூட்டும். நினைத்துப் பாருங்கள். மின்விசிறி இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு ரத்தக்கொதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று.
* சமையலறையில் அங்குள்ள உஷ்ணத்தினை நீக்குவதற்கென்றே பிரத்யேக விசிறிகள் அனைத்து வீடுகளிலும் இருக்கும்.
* மின்விசிறி இருந்தால் ஈ, பூச்சிகள் இறந்து விடும்.
* செலவு குறைந்தது.
மேற்கூறிய அனைத்தும் அனைவரும் அறிந்ததே. நாம் அறிய வேண்டியது எல்லாம் மின் விசிறிகள் அதிக தூசி, தூசி, பூச்சிகளின் இருப்பிடமாக இருக்கின்றது. அதன் இறக்கைகளில் படியும் இவை மின் விசிறி இயக்கும்பொழுது அறை முழுவதும் பரவுகின்றது. படுக்கை, தரைவிரிப்பு இவைகளில் ஒட்டிக்கொள்ளும். இவையெல்லாம் ஒரு மில்லி மீட்டரில் அளவுதான் இருக்கும். இவைகளுக்கு வீட்டினுள் அதாவது அறையினுள் இருப்பது பிடிக்கும். அது அலுவலக அறையாகவும் இருக்கலாம்.
அவை மனித உடலில் இருந்து உதிரும் சரும துகள்களில் வாழ்பவை. ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 1.5 கி அளவு சரும துகள்களை உதிர்க்கின்றன. இது ஒரு மில்லியன் தூசு பூச்சிகளுக்கு உணவாகி விடும். இந்த தூசி பூச்சிகளும் சரி, இவற்றின் கழிவுகளும் மனிதனுக்கு அலர்ஜியினை உண்டாக்கும்.
தூசி பூச்சியின் அலர்ஜி அறிகுறிகள் :
* தும்முதல்
* மூக்கில் நீர் வடிதல்
* அரிக்கும், சிவந்த கண்கள்
* மூக்கடைப்பு
* தொண்டையில் நீர் கசிவு
* இருமல்
மற்றும் ஆஸ்துமா இருப்பவர்களை இவை அதிகம் பாதிப்பதால் அவர்களுக்கு
* மூச்சு விடுவதில் சிரமம்
* இறுகிய நெஞ்சு (எ) வலி
* விசில் போன்ற சத்தத்துடன் மூச்சு
* இப்பாதிப்புகளால் தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.
இதற்கு மருத்துவ சிகிச்சை அவசியம்.இப்பாதிப்புகளை தவிர்க்க
* உங்கள் படுக்கை விரிப்புகள், போர்வைகளை வாரம் ஒருமுறை சுடுநீரில் சோப்பில் ஊற வைத்து தொவையுங்கள்.
* ஸ்கிரீன், தரைவிரிப்பு, சோபா விரிப்புகளை முடிந்தவரை எளிதில் சுத்தம் செய்யக்கூடிய வகையில் வாங்குங்கள்.
* அன்றாடம் அறையினை சுத்தம் செய்யுங்கள்.
* வேக்குவம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்வது நல்லது.
பிறகு செய்கிறேன் என்ற பெயரில் பெரிய தரைவிரிப்புகள், அடைத்த அலங்காரப் பொருட்கள் இவற்றினை தவிர்த்து விடுங்கள்.
• விளக்கு, மின் விசிறி இவைகளை மூக்கின் மாஸ்க் கொண்டு மூடி சுத்தம் செய்யுங்கள். வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்.
• மின் விசிறி சத்தம் வராத அளவு சரி செய்யுங்கள்.
வசதி மிக்கவர்கள் மட்டுமே ஏசி உபயோகிக்கும் காலம் என்பது மாறி வெப்பத்தின் பாதிப்பு காரணமாக நடுத்தர மக்களும் ஏசி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அலுவலகங்கள், பள்ளிகளில் கூட ஏசி உபயோகிப்பது அவசியமாகிவிட்டது. அநேகருக்கு ஏசி இல்லாவிடில் தூங்கவே முடியாது.
• ஏசி சுத்தமான குளிர்ந்த காற்றினைத் தருகின்றது
• மனிதனின் செயல்பாட்டுத் திறனைக் கூட்டுகின்றது
• உடலிலிருந்து நீர், தாது உப்புக்கள் இழக்காமல் இருக்கின்றது
• வெப்பத்தினால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றது
• மூளையின் செயல் திறன் சிறப்பாய் இருக்கின்றது
• வெப்ப தாக்குதலால் வலி போன்ற தாக்குதல்கள் ஏற்படாமல் தவிர்க்கின்றது.
ஆனால் இந்த ஏசியினால் ஏற்படும் இடர்பாடுகளையும் அறிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து ஏசியில் இருப்பவர்கள்
• எப்பொழுதும் ஏதாவது ஒரு நோயுடனும், சோர்வுடனும் இருப்பர். அடிக்கடி சளி, ஜுரம் மற்றும் இது போன்ற பாதிப்புகளில் இருப்பர். இது நாளடைவில் அவர்களை நிரந்தர நோயாளி ஆக்கி விடுகின்றன.
• தொடர்ந்து ஏசியில் இருப்பவர்களின் உடலில் ஈரப்பசை இழப்பதினால் அவர்கள் சருமம் மிகவும் வறண்டு இருக்கும். அதிக மாஸ்ட்ரைஸர் உபயோகிக்க வேண்டி இருக்கும். இருப்பினும் சரும வறட்சி பல சரும பிரச்சனைகளை கொடுத்து விடும்.
• தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ஏசியில் இருப்பவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம், மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி, உடல் வலி போன்றவை ஏற்படுத்தும்.
• இப்படி பழகி விட்டவர்களால் சிறிதளவு வெப்பம் கூட தாங்க முடியாது. இத்தகையோர் சற்று வெப்பமான சூழ்நிலையில் கூட மிக ஆபத்தான அளவு உடல் நிலை பாதிக்கப்படுவர்.
• தொடர் கார் ஏசி பல காற்றில் பரவும் நோய்கள், அதிக ஜுரம், நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
• ரூம் ஏசியோ, கார் ஏசியோ இதனுள்ளேயே இருப்பவர்கள் வயது கூடிய தோற்றம் பெறுவர்.
• அதிக அலர்ஜி, காதுகளில் கிருமி பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றது.
• உங்கள் அறையில் இருக்கும் காற்றும் சுத்தமானதாக இருக்க வேண்டும். புகை, மது இவற்றினால் அறையில் உள்ள காற்று மாசுபடும்.
எனவே முடிந்த வரை மின் விசிறி பயன்படுத்துங்கள். அவை குளிர்ந்த காற்றினை சுற்ற விடும்.அதிக மின்சார செலவும் இராது. இரவில் குளிர்ந்து இருக்கும் பொழுது ஜன்னல்களை திறந்து வையுங்கள்.
பகலில் கூட தேவையில்லாத விளக்குகளை எரிய விடாதீர்கள். இவைகளும் வெப்பத்தினையே அளிக்கும். மரங்களை வெட்டாதீர்கள். மாறாக வருடம் ஒரு நாள் நடுங்கள்.
சுகாதாரமான காற்று ஆக்சிஜன் நிறைந்தது என்பது மனித வாழ்க்கைக்கு மிக அவசியமானது* உடலில் உள்ள செல்கள் இந்த ஆக்சிஜனை பெற்று ஒவ்வொரு உறுப்பின் செயலினையும் சீராக ஆற்றுகின்றது* உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் நான்கு முக்கிய விஷயங்கள்
தேவை ஆக்ஸிஜன், நீர், சத்து, செல்லின் கழிவுப்பொருள் வெளியேற்றம். மூன்று நிமிட ஆக்ஸிஜன் இல்லாவிட்டாலே ஒவ்வொரு செல்லும் இறந்து விடும்.
* வீட்டுக்குள்ளேயே அடைபட்டு சுவாசம் நிகழ்வதில் ஆரோக்கிய காற்று கிடைக்காது. வீட்டுக்குள்ளேயே உள் சுவாசம், வெளி சுவாசம் என நிகழும் பொழுது தேவையான ஆக்ஸிஜன் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
* சுகாதார காற்று, நல்ல ஆக்ஸிஜனே மூளையை சிறக்க செயல்பட வைக்கும்.
* ஆகவேத்தான் காலை, மாலை இரு நேரமும் திறந்த வெளியில் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
* இது உங்கள் இருதய துடிப்பு, இரத்த கொதிப்பு இரண்டினையும் சீராக வைக்கும், மூளையில் சுரக்கும் செரடோனின் உங்கள் மன நலத்தினை நன்கு வைக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
* வெள்ளை இரத்த அணுக்களுக்கு ஆரோக்கியமான காற்று அவசியம்.
நீங்கள் ஏசி அறைக்குள்ளேயே காலத்தினை கழித்தால் மேற்கூறிய நல்ல பலன்கள் வெகுவாய் குறையும், மேலும் தலைசுற்றல், வாந்தி, மயக்கம், தலைவலி, சோர்வு, எரிச்சல், படபடப்பு, மன உளைச்சல், அடிக்கடி ஜூரம், சளி, நுரையீரல்கள் நோய்கள் என வெகுவாய் பாதிக்கப்படுவீர்கள்.
* சூரிய ஒளி சிறிது நேரமாவது உடலில் படுவது அவசியம்.
* தோட்ட முறை இடங்களில் உலாவுங்கள்.
* முடிந்தால் அறைக்கு வெளியே வெளிச்சம் காலை, மாலை சூரிய ஒளி இருக்கும் இடத்தில் உடற்பயிற்சி செய்யுங்கள்.
* முடிந்தால் இரவில் ஜன்னல்களைத் திறந்து இயற்கை காற்றினை பெறுங்கள். சுத்தமான காற்று ஓரளவு நன்மைகளைச் செய்யும் என்பதனை அறியுங்கள்.