ஜோதிடம் மற்றும் ஜாதகத்தை கண்டிப்பாக பின்பற்றும் இந்துக்கள் ஒவ்வொரு கிழமையும், அந்த கிழமைக்குரிய கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்வார்கள். அந்த வகையில் சனிக்கிழமை சனிபகவான் மற்றும் அனுமனுக்கு உரியதாகும். சனிக்கிழமைகளில் சனிபகவான் மற்றும் அனுமனை வணங்கினால், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கை ஒன்று உள்ளது. அதே சமயம் சனிக்கிழமைகளில் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது மற்றும் வாங்கக்கூடாது என்ற வழக்கமும் மக்களிடையே உள்ளது. ஏனெனில் சனிபகவானுடன் தொடர்புடைய எந்த பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்குவது சிறந்தது அல்ல.
கீழே சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாத பொருட்கள் மற்றும் செய்யக்கூடாத விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய சடங்குகள் மற்றும் நடைமுறைகளின் முக்கிய நோக்கமே, வீட்டில் அமைதியையும், செழிப்பையும் ஏற்படுத்துவதாகும். இப்போது சனிக்கிழமைகளில் எதை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
கருப்பு நிற பொருட்கள்
சனிக்கிழமைகளில் கருப்பு நிறப் பொருட்களை வாங்கக்கூடாது. ஆனால் கருப்பு நிற பொருட்களை தானம் செய்யலாம். எவ்வளவு அவசரமாக இருந்தாலும், சனிக்கிழமை அன்று கருப்பு நிற பொருட்களை வாங்கிவிடாதீர்கள். இது வீட்டில் கஷ்டத்தை அதிகரிக்கும்.
எள்ளு, உளுந்து
சனிபகவானுக்கு கருப்பு எள்ளு விளக்கு ஏற்றுவது நல்லது. அதுவும் சனிக்கிழமைகளில் எள்ளு விளக்கேற்றி சனிபகவானை வழிபட்டால், சனி பகவானின அருளைப் பெறலாம். ஆனால் கருப்பு எள்ளு விதைகள், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய் போன்ற பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. வேண்டுமானால் இந்த பொருட்களை சனிக்கிழமைகளில் தானமாக வழங்குவது மிகவும் நன்மையளிக்கும்.
கருப்பு நிற எள்ளு விதைகளை சனிக்கிழமைகளில் வாங்கினால், அது வாழ்வில் பல தடைகள், சிரமங்கள் மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்ள வைக்கும்.
இரும்பு பொருட்கள்
கத்திரிக்கோல், கத்தி போன்ற இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது என்று கூறுவதுண்டு. ஏனெனில் இந்த பொருட்களை சனிக்கிழமை அன்று வாங்கினால், அது மோசமான உறவுகளை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. மேலும் இச்செயலால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே சண்டை ஏற்படும்.
பர்ஸ், காலணி
பர்ஸ், காலணி, பேக் போன்ற தோல் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. ஏனெனில் இது வெற்றியை பெறுவதில் தடையை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
உப்பு
சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாத மற்றொரு பொருள் என்றால், அது உப்பு. சனிக்கிழமை அன்று உப்பு வாங்கினால், நிதி நெருக்கடிகளை சந்திக்க வைக்கும் மற்றும் அதிக கடன் வாங்க வைக்குமாம்.
இன்க் மற்றும் பேனா
சனிக்கிழமை அன்று பேனா மற்றும் இன்க் போன்றவற்றையும் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், அது படிப்பு, தேர்வு மற்றும் இன்டர்வியூக்களில் மோசமான செயல்திறனை ஏற்படுத்துமாம்.
கார்
காரை சர்வீஸ்-க்கு விடும் பலர் அந்த காரை சனிக்கிழமைகளில் வாங்க மறுப்பதை கவனித்துள்ளீர்களா? ஏனெனில் கார் உலோகத்தால் ஆனது மற்றும் சனிக்கிழமைகளில் இரும்பு போன்ற உலோகங்களை வாங்குவது நல்லதல்ல; நன்கொடையாக வழங்குவதே நல்லது. ஏனெனில் இரும்பு என்பது சனி பகவானுடன் தொடர்புடைய மற்றொரு உலோகம்.
பிற விஷயங்கள்
சிலர் சனிக்கிழமைகளில் நகங்களை வெட்டுவதில்லை. ஏனெனில் உலோகங்களைக் கொண்டு நகங்கள் வெட்டப்படுகிறது. அதேப் போல் கருப்பு நிற அல்லது அர் நிற உடைகளையும் சனிக்கிழமைகளில் சிலர் வாங்கமாட்டார்கள்.
மேலே கூறியுள்ளவை அனைத்தும் இந்து போதனைகள் அல்லது வேதங்களை அடிப்படையாக கொண்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துமே நம்பிக்கைகளால் பல காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஓர் வழக்கமாகும். இப்படியொரு வழக்கம் மக்களிடையே வந்ததற்கு முக்கிய காரணம் பயம்.