வயிறு நிறைய உணவு உண்ட பின்னர் பெரும்பாலானோர் செய்யும் செயல் தூங்குவது தான். இன்னும் சிலரை எடுத்துக் கொண்டால், உணவு செரிப்பதற்காக நடைப்பழக்கம் மேற்கொள்வார்கள். மதிய தூக்கம், நடைப்பழக்கம் போன்றவை எல்லாம் ஆரோக்கியமான பழக்கங்களாக இருந்தாலும், அவற்றை உணவு உண்ட உடனேயே மேற்கொள்வது நல்லதல்ல.
மேலும் 90% ஆண்களுக்கு உணவு உண்ட உடனேயே சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு காரணத்தைக் கேட்டால், சிகரெட் பிடித்தால், அதிகப்படியான உணவு உண்டு ஏற்படும் அசௌகரியம் விலகுவதோடு, எளிதில் உணவு செரிமானமாவதாகும் அவர்கள் நினைக்கின்றனர். இதுப்போன்று ஏராளமான செயல்களை மக்கள் உணவு உண்ட உடனேயே செய்கின்றனர்.
இங்கு உணவு உண்ட உடனேயே செய்யக்கூடாத செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றுவதை உடனே நிறுத்துங்கள்.
புகைப்பிடிப்பது
சாதாரண வேளையில் சிகரெட் பிடிப்பதை விட, உணவு உண்ட உடனேயே சிகரெட் பிடிப்பது என்பது 10 சிகரெட்டை பிடித்ததற்கு சமமாகும். அவ்வளவு கொடிய விளைவுகளை உணவு உண்ட உடனேயே சிகரெட்டைப் பிடித்தால் சந்திக்க நேரிடும். இப்பழக்கம் நீண்ட நாட்கள் நீடித்தால், நுரையீரல், தொண்டை மற்றும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
குளிப்பது
உணவு உண்ட உடனேயே குளிக்கக்கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் வயிறு நிறைய இருக்கும் போது, குளிப்பதால், செரிமான மண்டலம் பலவீனமாகி, செரிமான செயல்முறையில் இடையூறு ஏற்பட்டு, அதனால் உடல்நிலை சரியில்லாமல் போகும்.
நடனம்
நடனமாடுவது ஆரோக்கியமான ஓர் உடற்பயிற்சியாக இருந்தாலும், உணவு உண்ட உடனேயே நடனமாடினால், உண்ட உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்ச முடியாமல் போய்விடும். எனவே இப்பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
நடைப்பயிற்சி
எப்போதுமே உணவு உண்ட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உணவில் உள்ள சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் இடையூறு ஏற்பட்டு, அதன் விளைவாக மயக்கம் மற்றும் மிகுந்த களைப்பை உணரக்கூடும்.
பழங்கள்
வயிறு நிறைய உணவை உண்டவுடன் பழங்களை உட்கொள்ளக் கூடாது. எப்போதும் பழங்களை உணவு உண்பதற்கு முன்பு உட்கொண்டால் தான், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் புரோட்டீன்களை முழுமையாகப் பெற முடியும்.
குளிர்ந்த நீர்
உணவு உண்ட உடன் மிகவும் குளிர்ச்சியான நீர் குடிப்பதைத் தவிர்க்கவும். ஏனென்றால், குளிர்ச்சியான நீரைக் குடித்தால், உணவு முறையாக செரிமானமாகாது. அதுவே சுடுநீர் குடித்தால், உணவு எளிதில் செரிமானமாவதோடு, உணவில் உள்ள சத்துக்களும் எளிமையாக உடலால் உறிஞ்சப்படும்.
தூங்குவது
உணவை உட்கொண்டு 1 மணிநேரத்திற்கு பின் தூக்கத்தை மேற்கொள்வதால் எவ்வித தவறும் இல்லை. ஆனால் உணவு உண்ட உடனேயே படுத்து தூங்கினால், உணவை செரிக்க சுரக்கப்படும் செரிமான அமிலமானது வயிற்றில் இருந்து உணவுக்குழாய் வழியே மேலே ஏறி, அதன் காரணமாக நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
சூடான டீ
உணவு உண்ட பின் சூடான நீரைப் பருகினால் மட்டும் தான் நல்லதே தவிர, சூடான டீ குடித்தால் நல்லதல்ல. ஏனெனில் டீயில் உள்ள டானின்கள் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சவிடாமல் செய்து, அதனால் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.