சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.
இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96 சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.
நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும் தடைசெய்கின்றது.
சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும் கிடைக்கிறது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக் குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.