26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

உடலை இளைக்கச் செய்யும் மருந்துகள்… சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

ht1331எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை!

அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீபகாலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில் நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது? விளைவு… ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்பத் தயாராகிறார்கள். அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி!

உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன!

பவுடர் வடிவில் வருகிற பருமன் குறைப்பு மருந்தை, தினசரி 2 அல்லது 3 வேளைகள் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குடித்ததும் பசி உணர்வே உண்டாவதில்லை என்பதால், வேறு உணவுகள் மீது நாட்டம் இருக்காது. 20 முதல் 30 நாட்களுக்குள் உடல் இளைக்க ஆரம்பிப்பதென்னவோ உறுதி. அப்புறம்தான் வருகிறது ஆபத்து… இந்த பவுடர்களின் விலையும் கொஞ்ச நஞ்சமல்ல… ஆயிரங்களில்தான் தொடக்கமே! தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல்தான் முதல் அபாய அறிகுறி. அதையடுத்து அடிக்கடி தலைசுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு, இத்யாதி இத்யாதி என நீண்டு, ஒரு கட்டத்தில் படுக்கையில் விழச்செய்து விடும். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும், சிறுநீரக செயலிழப்பும் போனஸ்! பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் நடிகைகள் திடீர் திடீரென மயங்கி விழுவதாகக் கேள்விப்படுகிற செய்திகளுக்கெல்லாம் இதுதான் பின்னணி!

பருமன் குறைக்கும் பவுடரின் பக்க விளைவுகள் இப்படியென்றால், உடல் இளைக்கச் செய்கிற மாத்திரைகளின் விளைவுகள் இன்னும் மோசம். மனச்சோர்வு, நெஞ்சுவலி, படபடப்பு, ரத்த அழுத்தம், தாறுமாறான இதயத்துடிப்பு, வயிற்றுவலி, சுவாசக் கோளாறு, இதய நோய், க்ளைமாக்ஸாக மாரடைப்பு!

உடலைக் குறைக்க உத்தரவாதம் தரும் இவை எல்லாமே மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலோ, மருந்துக் கடைகளிலோ விற்பனை செய்யப்படுவதில்லை. மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படுகிற கமிஷன் பிசினஸ் மூலம் பரவுவது!

உடலை இளைக்கச் செய்கிற சத்துபானங்கள் எந்தளவு ஆபத்தானவை? உண்மையில் அவை என்ன செய்கின்றன? விவரமாகப் பேசுகிறார் இரைப்பை மற்றும் குடல் இயல் மருத்துவர் ஜெயராமன் விஜயன்.

‘‘உடம்புல சேரக்கூடிய கொழுப்பைக் குறைக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படலை. அப்படிக் குறைக்கிறதா சொல்லப்படற பலதும், ரத்தக் குழாய்கள்ல உள்ள கொழுப்பை வேணா குறைக்கலாம். பருமனைக் குறைக்கறதா சொல்லி விற்பனைக்கு வர்ற பவுடர்கள் எதுவும் மருத்துவர்களால பரிந்துரைக்கப்படறதில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க முடியும். அப்படிப்பட்ட மருந்துகள்ல மிறி&ங்கிற அடையாளம் இருக்கும். 14 வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். உடம்பைக் குறைக்கிற மாத்திரைகளும் பவுடர்களும் அந்த வகையைச் சேர்ந்ததில்லை’’ என்கிற டாக்டர், இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறவர்களின் குடலும் ரத்தக்குழாய்களும் நைந்து போகும் என எச்சரிக்கிறார். அடுத்ததாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மூளை மற்றும் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகுமாம்!

‘‘சாதாரணமா சிறுகுடலுக்குள்ள குறைஞ்சபட்சம் 3 லிட்டர் தண்ணீர் இருக்கணும். பருமனைக் குறைக்கிற பவுடர்களை எடுத்துக்கிறப்ப, அது உள்ள போய் ஒரு ஸ்பான்ஜ் மாதிரி அத்தனை தண்ணீரையும் உறிஞ்சிடும். கிட்னிக்கு போக வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற முடியாம, கிட்னி பாதிக்கப்படுது. உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகளோ இதயத்தைப் பாதிச்சு, மாரடைப்பை உண்டாக்கி, உயிருக்கே உலை வைக்குது. இந்த அபாயங்களைப் புரிஞ்சுக்காம, இப்படிப்பட்டதையெல்லாம் சாப்பிடறதை மக்கள் கட்டாயம் தவிர்க்கணும்’’ என்கிறார்.

‘‘உடம்பைக் குறைக்கணும்னு நினைக்கிறவங்க முதல்ல மருத்துவரை அணுகணும். ‘பி.எம்.ஐ’னு சொல்லக் கூடிய ‘பாடி மாஸ் இண்டக்ஸ்’ கணக்கு பண்ணி, அதுக்கேத்த ஆலோசனைகள் சொல்லப்படும். சிலருக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமே பலன் தரும். இன்னும் சிலருக்கு சிகிச்சைகள் தேவைப்படலாம். எதுவுமே பலன் தராதுங்கிறவங்களுக்கு ‘பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை’ தீர்வளிக்கும்.

அமெரிக்க மருத்துவத் துறையால அங்கீகரிக்கப்பட்ட லேட்டஸ்ட் மாத்திரை ஒண்ணு இப்ப வந்திருக்கு. வாய் வழியா சாப்பிட்டாலும், அது உடம்புல சேராது. குடலுக்குக் கொழுப்பு போறதை மட்டும் தடுக்கும். அதாவது சாப்பாடு மூலமா உடலுக்குப் போறதுல 30 சதவிகித கொழுப்பைக் குறைக்க உதவும். மீதியை உடற்பயிற்சி மூலமா கரைக்கலாம். இதுவும்கூட ஒவ்வொருத்தரோட உடல்வாகு, பி.எம்.ஐனு பல விஷயங்களைப் பார்த்து, மருத்துவர்களால மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டியது…’’ என முடிக்கிறார் டாக்டர் ஜெயராமன் விஜயன்.
‘சாதமே கூடாது… ஒன்லி சப்பாத்தி… நிறைய நிறைய தண்ணீர்… ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸுக்கு நோ’… உடல் இளைக்க நினைப்போருக்கு இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடெல்லாம் தேவையே இல்லை என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்.

‘‘சரிவிகித உணவும் உடற்பயிற்சியுமே உடலை இளைக்கப் போதும். பிறந்ததுலேர்ந்து சாதம் சாப்பிட்டுப் பழகினவங்களை, திடீர்னு சாதத்தையே கண்ல பார்க்கக்கூடாதுனு சொல்றது மனரீதியா ரொம்ப பாதிக்கும். அது தேவையில்லை. அதுக்குப் பதிலா அளவைக் குறைக்கச் சொல்லியோ, அரிசிக்குப் பதில் சிகப்பரிசி, பருப்புக்குப் பதில் பயறு சேர்த்துக்கச் சொல்லியோ பழக்கலாம். எந்த நேரம் அவங்களால பசி தாங்க முடியாதோ, அந்த நேரம் நல்லா சாப்பிடச் சொல்லி, அதிகம் பசிக்காத நேரத்துல சாப்பாட்டு அளவைக் குறைக்கலாம். நிறைய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும். வெண்ணெய் இல்லாம வீட்லயே சூப் செய்து குடிக்கலாம். ஒட்டுமொத்த குடும்பமுமே மாசாமாசம் செலவாகிற எண்ணெயோட அளவைக் குறைக்கணும். எப்பவாவது ஒரு துண்டு ஸ்வீட்டோ, சாக்லெட்டோ எடுத்துக்கிறதால சடார்னு வெயிட் ஏறிடாது. எதை, எவ்வளவு சாப்பிடணுங்கிறது தெரிஞ்சு சாப்பிடறது, தவறாத உடற்பயிற்சி… இந்த ரெண்டையும் சரியா பின்பற்றினாலே, மாசத்துக்கு 3 முதல் 4 கிலோ வரைக்கும் எடையைக் குறைக்கலாம்’’ என நம்பிக்கை தருகிறார் தாரிணி.

Related posts

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவரா நீங்கள்?

nathan

அடிக்கடி டர்..புர்-ன்னு விடுறீங்களா? அதை குறைக்க என்ன செய்யலாம் என்பதையும் காணலாம்

nathan

பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள்  உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். 

nathan

நம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

nathan

எடையைக் கட்டுக்குள் வைக்க, குடம்புளி!…

sangika

தூங்கும் பழக்கம் எப்படி இருந்தாலும் தூங்குகிற முறை ஆறுதான். …

sangika

உடலில் இப்படி அறிகுறிகளை தென்பட்டால் அலட்சியப்படுத்தாதீர்கள்…!கட்டாயம் இதை படியுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா கொசுக்கள் வராமல் இருக்க முன்னோர்கள் செய்த செயல்..!

nathan

வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்

nathan