நம் ஆரோக்கியம் நம் உரிமை! எல்லோரும் உணவு உண்கிறோம், வாழ்கிறோம்: ஆனால் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்கிறோமா? இல்லை!
அப்படியானால், ஆரோக்கியமாக வாழ என்ன தேவை? நல்ல உணவு, நல்ல சுற்றுச்சூழல், நல்ல மனநிலை, முறையான பழக்கவழக்கங்கள் என்பன சேர்ந்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை கைகூடும். இங்கு ‘நல்ல’ என்ற வார்த்தையை நாம் சேர்த்திருப்பதைக் கவனியுங்கள். இந்த அனைத்து நல்லதையும் நிறைவேற்றினால், நீங்கள் வைத்தியசாலைக்குச் செல்லவேண்டிய தேவையிராது. துரதிர்ஷ்டவசமாக, நாம் அனைவரும் இதைப் பின்பற்றுவதில்லை.
உணவுகளில் இரண்டு வகை உணவுகள் உண்டு. ஒன்று, நேர்மறை உணவுகள் – அதாவது, பொஸிட்டிவ் உணவுகள். இன்னொன்று, எதிர்மறை – நெகட்டிவ் உணவுகள். வயிற்றுக்கு எந்த உபாதையும் தராத, விரைவில் சீரணமாகிவிடும் உணவுகளை பொஸிட்டிவ் உணவுகள் என்போம். பெரும்பாலும் இயற்கை உணவுகள் அனைத்துமே பொஸிட்டிவ் உணவுகள்தாம்!
இதற்கு எதிரான பண்புகள் கொண்டவை நெகட்டிவ் உணவுகள். அளவுக்கதிகமான இரசாயனக் கலவைகளுடன் கூடிய அனைத்துமே (ஏறக்குறைய இயற்கை உணவுகள் தவிர்ந்த அனைத்துமே) நெகட்டிவ் உணவுகள்தாம்!
ஆனால், நாம் பெரும்பாலும் நெகட்டிவ் உணவுகளைத்தான் உண்கிறோம். பொஸிட்டிவ் உணவுகள் இல்லையா என்று கேட்காதீர்கள். அவை இருந்தாலும், நெகட்டிவ் உணவுகளை விரும்பி உண்பதுதான் வேதனை கலந்த வேடிக்கை.
உதாரணமாக, தாகம் எடுக்கும்போதெல்லாம் தண்ணீர் அருந்தலாம். பணமிருந்தால் இளநீர் அருந்தலாம். ஆனால், பணமிருப்பவர்களில் எத்தனை பேர் இளநீர் அருந்துகிறார்கள்? இரசாயனக் கலவைகளுடன் கூடிய செயற்கைக் குளிர்பானங்களையே விரும்பி அருந்துகிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காதது மட்டுமன்றி, உடலுக்கு ஒவ்வாத வேறு பல விளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.
சிலவேளைகளில், நமது பழக்க வழக்கங்களால், சில நல்ல உணவுகளையும் நஞ்சாக்கிக்கொள்கிறோம். அதற்கு உதாரணம், காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் நாம் எடுத்துக்கொள்ளும் பானம் மற்றும் உணவுகள்.
இப்படியான உணவுகள் நம் உடலுக்கு ஒவ்வாத பண்புகளைத் தருவதால், உடல் அவற்றுடன் ஒத்துழைக்க மறுக்கிறது. விளைவு? நோய்கள்! இது ஆரோக்கிய வாழ்க்கைக்கு உகந்ததல்ல. இந்த பழக்கம் தொடர்ந்தால் நாம் இறப்பதற்கு முன்பே நம்முடைய உறுப்புகளை சாகடித்துவிடுவோம்.
எனவே, இத்தனை நாள் எப்படியோ, இனிவரும் நாட்களில், நம் உடலுக்குத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக்கொள்வோம். முக்கியமாக, காய்கறிகள், பழங்கள், இயற்கை பானங்கள் உள்ளிட்ட உணவுகளை அளவறிந்து உண்பதன் மூலம் உடல் மட்டும் அன்றி, உள்ளமும் பொஸிட்டிவ் சக்தியைப் பெறும்!