செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர். இந்தியா முழுவதும் வளரக் கூடிய தன்மை வாய்ந்தது. இது மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் பூக்கும். இவற்றோடு சீமைச் சாமந்திப்பூ என வேறொரு பிரிவும் உண்டு. ஆனால் இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.
உடலில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு முதலில் தலைவலியாகத்தான் வெளிப்படும். இந்த தலைவலி நீங்க செவ்வந்திப் பூவின் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைவலி நீங்கும். மலச்சிக்கல்தான் நோயின் முதல் அறிகுறி.
மலச்சிக்கல் என்பது மலம் வெளியேறாமல் இருப்பது மட்டுமல்ல, மலம் அடிக்கடி வெளியேறுவதும் அல்லது சிறுகச்சிறுக வெளியேறுவதும் மலச்சிக்கலின் காரணம்தான். இவர்கள் சாமந்திப் பூவை கசாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தினால் மலச்சிக்கல் தீரும். உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
சிலருக்கு எவ்வளவுதான் உணவருந்தினாலும் உடல் எடை கூடாமல் மெலிந்தே இருப்பார்கள். எப்போதும் சோர்வாக தோன்றுவார்கள். இவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது. சாமந்திப் பூவின் இதழ்களை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை சுளுக்கு வீக்கம் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் சுளுக்கு வீக்கம் விரைவில் குறையும்.
அரைலிட்டர் தண்ணீரில் 25 கிராம் அளவு நிழலில் உலர்ந்த சாமந்திப் பூவை கொதிக்க வைத்து அதனுடன் சிறிது பனை வெல்லம் சேர்த்து அப்படியே மூடிவைத்து 15 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அருந்தி வந்தால் சூதகக் கட்டு, சூதகச் சன்னி, குளிர்சுரம் எளிதில் குணமாகும். தினமும் இருவேளை என அருந்துவது நல்லது. சாமந்திப் பூவை நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சிறுநீர் எளிதில் பிரியும்.