காலையில் எழுந்திருப்பதிலிருந்து இரவு தூங்கும் வரை ஹெல்த் தொடர்பான பல விஷயங்களை தினமும் அக்கறையுடனும் ஆர்வமுடனும் செய்துவருகிறோம். ஆனால், நலம் பெற்ற வாழ்க்கை வளம் பெற, நிதி சார்ந்த விஷயங்களை எவரும் செய்வதில்லை. உடலுக்கான ஹெல்த் எவ்வளவு அவசியமோ, அதேபோல எதிர்காலத்துக்கான வெல்த்தும் அவ்வளவு அவசியம்.
முதலீடு, வெல்த்
ஹெல்த்தைக்கொண்டு வெல்த்தைப் பெருக்கிட இதோ அற்புதமான ஆறு வழிகள்…
1. தினமும் அதிகாலையில் எழுவதால் கோடி நன்மைகள் என்பார்கள். அதைப்போல நம் வாழ்க்கையை வளமாக்கிட ஆரம்ப காலத்திலிருந்தே முதலீட்டைத் தொடங்குங்கள். முதலீடு என்றதும் லட்சக்கணக்கில்தான் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. குழந்தைகளுக்கு உண்டியல் ஒன்றை அளித்து அதில் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமிக்கக் கற்றுத்தருகிறோம். இதைப்போல, ஆரம்பகாலத்திலிருந்ததே விருப்பமான நிதி சார்ந்த திட்டத்திலான முதலீட்டை சிறுகச் சிறுக மேற்கொள்ளுங்கள்.
2. ஆரோக்கியமான வாழ்வுக்குச் சீரான உணவு அவசியம். அதைப்போல, நம்முடைய சந்தோஷமான வாழ்க்கைக்கு மேற்கொள்ளப்படும் முதலீடு பன்முகத்தன்மையுடன் (Diversification) இருப்பது நல்லது. அதாவது முதலீட்டைப் பொறுத்தவரை தங்கத்தில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளாமல் மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, ரியல்எஸ்டேட் எனப் பல வகையான முதலீட்டுச் சார்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்வது நல்லது.
3. கோபம், மன அழுத்தம், இதயநோய், ரத்தக்கொதிப்பு போன்று உடலில் எந்த மாதிரியான பிரச்னைகளும் வரக்கூடும் என்பதைப் பெரிய பட்டியலிடலாம். உடல்நலத்தில் மட்டுமல்ல, முதலீட்டு முறைகளிலும் கோபத்தைத் தவிர்த்து பொறுமையுடன் முதலீடு செய்வது அவசியம். முதலீட்டில் லாபம் வந்தால் சந்தோஷப்படுவதைப்போல, நஷ்டம் வந்தால் ஏன் வந்தது, எதனால் வந்தது, எப்படி வந்தது என அலசி ஆராய்ந்து பொறுமையாக முடிவெடுப்பது நல்லது.
4. எந்த வயதைச் சேர்ந்தவராக இருந்தாலும் தினம்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், பலன் இருக்காது. உடற்பயிற்சிபோலவே தினந்தோறும் முதலீடு மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை. குறைந்தது உங்களுக்கு விருப்பமான முதலீட்டு சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
5. `தண்ணீரை தினமும் போதுமான அளவில் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்’ என்பார்கள். இதைப்போல, போதுமான அளவு பணத்தை கையிருப்பாக வைத்திருப்பது நல்லது. என்னதான் லட்சக்கணக்கில் பணம் இருந்தாலும் அந்தப் பணத்தை அவசரத்தேவைக்காக வைத்திருப்பது நல்லது.
6. நம்முடைய உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனே குடும்ப மருத்துவரை அணுகுவதைப்போல, நிதி சார்ந்த விஷயங்களில் சந்தேகம் அல்லது பிரச்னைகள் எனில், அது தொடர்பான ஃபைனான்ஷியல் டாக்டரை அணுகுவதே நல்லது. ஏனெனில், பணத்தைச் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல, அதை மிச்சப்படுத்தவும் நிதி தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை அவசியம்.
நலத்தை நாளும் காக்கும் நாம் வளத்தைப் பெருக்கிடவும், நிலையான வாழ்க்கையை வாழ்ந்திடவும் நிதிசார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்தலாமே!